11. மானக்கஞ்சாற நாயனார்


அறத்தின் நிலையியற் சார்புடையது இல்லறம். வினைகளில் சால்புடையது உழவு. வேளாளர்க்கு அரசர் சேனாதிபதியாய் இருத்தலும் உரியது. மெய்ப்பொருளை உணர்ந்த பெரியவர்கள், சிவபெருமானுடைய தொண்டர்க்கே ஏவல் செய்வர். தம் பொருள்களை சிவனுடையவை என்று எண்ணி, அவருக்கே அவற்றை கொடுத்தல் சிவபுண்ணியம். சிவவழிபாடு, நன்மக்கட்பேறு முதலியவற்றையும் நல்கும். பெண்மகப்பேறு பெரிதும் விரும்பத்தக்கது. மணநாளிலே மணமகளை, பெரியோரை வணங்கி, ஆசி பெறச்செய்தல் பழைய மரபு. அன்றைய தினம், மணப்பெண்ணின் மலர்க்கூந்தல், மாவிரதர் விரும்பியபடி, அவரது பஞ்சவடிக்கென அடியோடு அரிதல் மாபெரும் சிவபுண்ணியமாம். இந்த சிவபுண்ணியத்தை மெய்யன்போடு செய்து, சிவபெருமானது கருணைத் திறத்தை துதிக்கும் பேற்றினை பெற்றவர் மானக்கஞ்சாறர் என்பவர் ஆவர்.

                  *                                                              *                                                              *

கஞ்சாறூர் என்பது சோழ நாட்டிலே, மருதவளம் நிறைந்து, செழிப்புற்று விளங்கிய ஊர். அவ்வூரில் உளவுத்தொழிலில் சிறந்து விளங்கிய வேளாண் பழம்குடிகள் பல வாழ்ந்து வந்தன. அவர்களுள்ளே அரசர் சேனாபடிக்குடி விளங்க வழிவழியாக புகழ் பெற்றவர்கள் இருந்தனர். அக்குடியில் சேனாபதிக்குடி விளங்க அவதரித்தவர் கஞ்சாறர் என்பார். அவருக்கு சிலகாலம் பிள்ளைப்பேறு இல்லாது, சிவனருளால் ஒரு மகவைப் பெற்றெடுத்தார். அப்பெண் மகவு, எல்லாச் சிறப்புக்களோடும் அருமை-பெருமையாக, சீரோடும், சிறப்போடும் வளர்ந்து, மணப்பருவம் எய்தினார். அப்பெண் மகவை ஏயர்கோன் கலிக்காமருக்கு மணம் செய்துவைக்க பெரியோர்கள் விரும்பியபடி, கஞ்சாறரும் தம் இசைவைக் கூறினார். அவர்களது மணநாளில், வீடும், நகரமும் அணிபெற்று மிளிர்ந்தன. அன்று கஞ்சாறரின் உள்ள நிலைப் பொருளாகிய சிவபெருமான், மாவிரதக் கோலம் கொண்டு, மணவீட்டுக்கு எழுந்தருளினார். வந்த மாவிரதரை கஞ்சாறர் வணங்கி நிற்க, மாவிரதர் கஞ்சாறரை நோக்கி, “இங்கு மங்கலம் நிகழ்வது என்னை?” என்று கேட்க, கஞ்சாறர், “என் பெண்கொடியின் திருமணம்” என்றார். “உமக்கு சோபனம் ஆகுக” என்று வாழ்த்த, கஞ்சாறர் மனையுட் சென்று, மணக்கோலம் புனைந்திருந்த மகளாரை அழைத்துவந்து, மாவிரதர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கச் செய்தார். அப்பெண் பஞ்சாங்க வணக்கம் செய்யும்போது, அவருடைய நீண்டு வளர்ந்த மலர்க்கூந்தலை நோக்கிய மாவிரதர், தொண்டரை நோக்கி, “இவளது கூந்தல் எமது பஞ்சவடிக்கு ஏற்றது” என்றார். உடனே கஞ்சாறர், தம் உடைவாளை உருவி, மலர்கள் முதலியவற்றால் அழகும், மணமும் ஊட்டப்பெற்ற கூந்தலை, அடியில் அரிந்து, முனிவர் கையில் நீட்டினார். அதனை வாங்குவார் போன்று நின்ற மாவிரதர், மறைந்து, பார்வதி தேவியாரோடு மழவிடைமேல் காட்சி தந்தார். அவரை எஞ்ஞான்றும் துதித்திருக்கும் மீளா நெறியை மானக்கஞ்சாறர் நேரே பெற்றார். இந்நிலையில் மணக்கோலம் தாங்கிய கலிக்காமர், மானக்கஞ்சாறரின் மணமனையுள் புகுந்தார். நிகழ்ந்தவற்றை கேள்வியுற்றார். கலிக்காமர் மனம் மிக மகிழ்ந்தார். மானக்கஞ்சாறரின் மகளார், தந்தை அரிந்த கூந்தல், முன் புனைந்தபடியே மிக்க அழகுடன், திருவருளால் மீண்டு பெற்றனர். ஏயர்கோன் கலிக்காம நாயனார், மானக்கஞ்சாறரின் திருமகளை மணம் செய்து, மகிழ்ச்சி எய்தி, இனத்தவருடன் திருப்புன்கூருக்கு அருகில் உள்ள தம்மாளிகை சென்றடைந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : சோழநாடு
ஊர் : கஞ்சாறூர்
குருபூசை / திருநாள் : மார்கழி - சுவாதி

ஒரே பார்வையில் ...
சிவனடியார். புதல்வியாரின் திருமணத் தினத்தன்று, அவள் திருமணப் பெண்ணாக அலங்காரம் செய்திருந்த போது, அவள் சென்ற மாவிரதரை வீழ்ந்து வணங்க, அவர் அவள் கூந்தலைக் கண்டு, அது தமக்கு பஞ்சவடிக்காமென, உடனே அவள் தலைமயிரை அறுத்து அளித்தார். அவள் மணக்கவென ஏயர்கோன் கலிக்காமர் அங்கு எழுந்தருளுவதன் முன்னே அவள் கூந்தல் வளர்ந்துவிட்டது.