12. அரிவாட்டாய நாயனார்


அறநெறிகளில் இல்லற நெறிஅறம் தகுதி பெற்றது. நெல்வகைகளுள் செந்நெல் குணத்தில் சிறந்தது. சிவபெருமான் திருவமுதுக்கும், சிவனடியார் அமுதுக்கும் சிறந்ததாகக் கொள்ளப்படுவது. செந்நெல் அரிசிச்சோறும், செங்கீரையும், மாவடுவும் சேர்த்து சிவனுக்கு அமுது படைத்தல் சிவபுண்ணியமாம். வறுமையும், துன்பமும் எய்திய காலத்திலும் தாம் செய்துவந்த திருத்தொண்டை விடாது செய்வர் மெய்யடியார். வறுமை வந்துற்ற போது, கூலிக்கு வேலை செய்து, கூலியாகப் பெற்ற நெல்லுள், செந்நெல்லை சிவனுக்குப் படைத்து, தாமும், மனைவியாரும் கீரையும், தண்ணீரும் மாத்திரம் உண்டு சீவித்தமையுமாகிய அரிய-பெரிய செயலைச் செய்தவர் நாயனார். கணவனாரோடு ஒத்த கருத்து உடையராய், மனைவாழ்க்கை நடாத்துவது கற்பில் சிறந்த நிலை. கணவனார் கருத்து அமைந்து, அவரது திருப்பணிக்கு உதவியமையால், நாயனார், மனைவியார் ஆகிய இருவரும் சிவலோகப் பெருவாழ்வு பெற்றனர்.

                  *                                                              *                                                              *

சோழ நாட்டிலே, கணமங்கலம் என்று ஓர் ஊர் உண்டு. அங்கே மிக்கு வாழ்ந்த வேளாளருக்கு தலைவராக தாயனார் என்பவர் இருந்தார். அவர் சிவபெருமான் திருவடிகளை தொடர்ந்து  பற்றுகின்றவராய், அவருக்கு ஏற்றன என்று, செந்நெல் அரிசி அமுதும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் படைத்து வந்தார். இவர் செல்வத்தோடு இருந்த காலத்தில் அன்றி, வறுமை வந்தெய்திய காலத்தும் இத்தொண்டை செய்து வந்தார் என்பதை உலகுக்கு காட்ட, தண்டலை நீணெறி என்னும் தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் திருவுளம் பற்றினார்கள். தாயனாருடைய செல்வதை எல்லாம் மறையச் செய்தார். அவர் வறுமை உற்றார். அந்நிலையில் அவர் கூலிக்கு நெல் அறுத்து, கூலியாகக் கிடைத்த செந்நெல்லை இறைவருக்கு அளித்து, கார்நெல் கூலி கொண்டு, தாமும், மனைவியாரும் உண்டு வந்தனர். இந்நிலையிலும் ஊர் எங்கேணும் உள்ள வயல்களிலே செந்நெல்லேயாக, அதனை அரிந்தளித்தலால் கிடைத்த கூலி செந்நெல் எல்லாம் திருவமுதுக்கே ஆக்கினார். குறையாத சிவபத்தியும், பதிபத்தியும் கொண்ட மனைவியார் வீட்டுக் கொல்லையில் உள்ள புன்செய் கீரை வகைகளைக் கொய்து, சமைத்து இட, தாயனார் அருந்தி மகிழ்ந்தார். கீரையும் தீரவே, தண்ணீர் மாத்திரம் உண்டு, தாம் செய்துவந்த சிவப்பணி முட்டாது செய்துவந்தார். தாயனார் ஒருநாள் செந்நெலரியமுதும், செங்கீரையும், மாவடுவும் ஒரு கூடையில் வைத்து, தலையில் சுமந்து செல்ல, மனைவியார் மண்கலத்தில் ஆனைந்து கொண்டு சென்றனர். இங்ஙனம் அவற்றை கொண்டு செல்லும்போது, பசிப்பிணியாலும், உடல் தளர்ச்சியினாலும் கால்கள் தளர, தாயனார் தரையிலே வீழ்வாராயினர். கூடையில் இருந்தன எல்லாம் கொட்டுண்டு கமரிற் சிந்தின. “இவற்றை இறைவன் திருவமுது செய்யாவிடின், ஊட்டியால் என் கழுத்தை அறுத்து இறப்பேன்” என்றார். இறைவன் திருவமுது செய்யக் காலம் தாழ்த்தியமையைக் கண்டு, தம் கழுத்தினை அரியத் தொடங்கினார். அப்போது அம்பலத்தாடும் ஐயனது வீசிய திருக்கரம், அன்பரது கழுத்தினை அரியும் கைகளைப் பிடித்து, “விடேல், விடேல்” என்ற ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது திண்ணிய கையினைப் பிடித்துக்கொள்ள, தாயனாரும் அச்செயல் தவிர்த்து நின்றனர். அப்போது இறைவர் தேவியாருடன் இடபாரூடராய் காட்சி தந்து, “நீ நமக்காக செய்தது நன்று. இனி நீயும், உன் மனைவியும் நம்உலகில் என்றும் வாழ்வீராக” என்று கூறி, தம் திருவம்பலத்தில் எழுந்தருளினார்.

இறைவர் அமுது செய்யாதபடியால், தம் கழுத்தினை ஊட்டி கொண்டு அரிய முற்பட்ட படியால், அவர் அரிவாட்டய (அரிவாள் + தாய) நாயனார் என்னும் காரணப்பெயர் பெற்றார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : சோழநாடு
ஊர் : கணமங்கலம் (தண்டலை நீணெறி)
குருபூசை / திருநாள் : தை – திருவாதிரை

ஒரே பார்வையில் ...
சிவநிவேதனத்துக்கு உரிய செந்நெல் அரிசி அமுது, செங்கீரை, மாவடு முதலியனவற்றைக் கோயிலுக்கு மனவியாரோடு கொண்டு செல்லும்போது, பசி மிகுதியினால் மயக்கம் உற்றுக் கீழே விழ, பொருள்கள் எல்லாம் கமரினுள்ளே சிந்த, ஆற்றாததும் கழுத்தை அரியத் துணிய, இறைவனால் ஆட்கொள்ளப் பட்டவர்.