13. ஆனாய நாயனார்


இறைவனது வழிபாட்டுக்கு இன்றியமையாது வேண்டப் படுவனவாகிய பஞ்ச கவ்வியங்களைத் தரும் ஆனினங்களை அன்போடு புறவுக்குக் கொண்டு சென்று, அவற்றுக்கு நல்ல புல்லும், நல்ல நீரும் ஊட்டி மகிழ்வித்து ஓம்புதலும், ஆனிரைகளை இளங் கன்றுகள், கற்வைகள், சினைப்பசுக்கள் என்று அவற்றின் நிலைக்கேற்ப அவற்றை இனம் பிரித்து, தனித்தனி வெவ்வேறாக்கி வளர்த்தலும் பசுக்காக்கும் சிவபுண்ணிய முறைகளாகும். ஆனிரை காப்போர் இயல்பிலே வேயங்குழல் வாசிப்பதில் வல்லவராய் இருப்பர். இவர்கள் இசை பசுக்காத்தலுக்குத் துணை செய்வதாயும், சிவபெருமானது மகாமந்திரமாகவும், ஆதிமந்திரமாகவும் உள்ளதாகிய திருவைந்தெழுத்தை வேயங்குழலின் உள்ளுறையாக அமைத்து, தமக்கும், கேட்போர்க்கும் சிவனிடத்து பேரன்பு பிறக்குவதாயும் உள்ளது. இத்துணைச் சிறப்பினதாகிய வேயங்குழலிலே சிவநாமத்தை அமைத்து வாசித்துப் பேறு பெற்றவர் ஆனாயநாயனார் ஆவர்.

சோழநாட்டிலே திருச்சிராப்பள்ளிக்கு அருகே, பல்வகை நில நலன்களுடையது திருமங்கலம் என்னும் பெயருடைய பழம்பெரும் மூதூராகும். அப்பதியிலே பெருங்குடிகள் ஒன்றில் ஆனாயர் அவதரித்தார். அவர் திருநீற்றினை விரும்பித் தரித்து, சிவபெருமானின் திருவடிகளை முக்கரணங்களாலும் பேணுபவர். தம் குலத் தொழிலாகிய பசுக்காத்தலை ஒம்பியவராய் ஆனிரை காத்துவந்த ஆனாயர் சிவபெருமான் திருவடியில் அன்பு பொருந்தி இசையமுதத்தைப் பொழியும் துளைக் கருவியாகிய வேயங்குழலை மேற்கொண்டார். வேயங்குழலிலே சிவபெருமானின் திருவைந்தெழுத்துத் திருநாமத்தை அமைத்து, எல்லோரும் உவக்கும் வண்ணம் இன்னிசையை எழுப்பி, சகல சராசரங்களைத் தமது கருணை பொங்க அளித்து வந்தனர். இங்ஙனம் நிகழுகையில் ஒருநாள்,

இவர் தம்மை மலர்களால் அலங்கரித்து, நெற்றி மார்பு, மேனி முதலிய இவையனைத்திலும் திருநீறு சாத்தி, மரவுரி உடுத்து, கையில் வெண்கோலும், வேயங்குழலும் கொண்டு, கோவலர் சூழ ஆனினத்தை வழக்கம்போல் கானகம் கொண்டுசென்றார். அங்கே மலர்களாலாகிய கொன்றை மாலையும், கனிகள் போன்ற சடையும் சிவபெருமானை ஒத்திருத்தலால், அவை அவரை ஆனையாருக்கு நினைவூட்ட, அவர் ஐம்புலனும் ஒடுங்க, தம்மை மறந்து, மெய் தளர்ந்து அக்கொன்றையினை நேர்நோக்கி நின்று உருகி, உணர்ச்சி ததும்ப, வேயங்குழலை வாயில் வைத்து உள்ளம் உருக சிவபெருமான் திருவைந்தெழுத்தினை அமைத்து அமுதம் பொழிந்த நிலையில், பொருள்கள் அனைத்தும் எலும்பு கரைய வாசிக்கத் தொடங்கினார். இங்ஙனம் வேயங்குழலின் உள்ளுடையாக திருவைந்தெழுத்தை வாசிக்க, எழுகின்ற மதுரமாகிய இசை ஒலியின் வெள்ளம், மேலான வானத்தில் வாழும் தேவர்களது கற்பகமலர்த் தேனினை தெள்ளிய அமுதத்துடன் கலந்தது போல் எங்கணும் நிறைந்தது. புல்லருந்திய பசுக்கூட்டங்கள் அசை விடாமலும், தாய்முலையில் பாலருந்த பசுக்கன்றுகள் பாலுண்ண மறக்கவும், எருதுகளும், மான் முதலிய காட்டு மிருகங்களும், ஆடுகின்ற மயில் கூட்டங்களும் தம்மை மறந்து ஆனாயர் அருகே வந்தடைந்தன. இங்ஙனம் எல்லா நிற்பனவும், சரிப்பனவும் இசை மயமாகி, புலனும் கரணமும் உருகி ஒன்றாயின.

ஆனாயநாயனாரின் குழலிசை அமுதமும் சிவபெருமானின் திருச்செவியடையவும் பெருகிற்று. மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் இடபவாகனத்தின் மேல் உமையம்மையாருடனே எழுந்தருளி, நாயனாருக்கு காட்சி கொடுத்து அவரது குழலிசையை எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்க, “இந்நிலையிலே நீ நம்பால் அணைவாய்” என, நாயனாரும் அங்ஙனமே அணைந்தார்.

திருமங்கலம் திருத்தவத்துறைத் தலத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்திலுளது. இங்கு கோயிலினுள் உட்சுற்றில் வடமேற்கே ஆனாயர் சிவப்பேறு எய்திய இடமுண்டு. அங்கே நாயனாருக்கு தனிக்கோயில் உண்டு. நாயனார் கொன்றை மரத்தின் நீழலிலே நின்று புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் மிக அழகான திருமேனி உண்டு. கோயிலில் ஐம்பொன் விழாத்திருமேனி உண்டு. அவருக்கு உற்சவமும் ஆண்டுதோறும் நிகழுகின்றது. கோயில் சோழர் திருப்பணி. இறைவர் : வேதீசுவரர்; இறைவி : உலகநாயகியம்மை).

மேலதிக குறிப்புக்கள்
குலம் : இடையர்
நாடு : மழநாடு
ஊர் : மங்கலவூர்
குருபூசை / திருநாள் : கார்த்திகை – அத்தம்

ஒரே பார்வையில் ...
இறைவருடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தை வேய்ங்குழலிலே அமைத்து இசைக்கும் வழக்கம் உடையவர். ஒருநாள் காட்டிலே பசு மேய்க்கும்போது, அங்கே கார்காலத்திலே பூத்துக் குலுங்கிய பொற்கொன்றை மலர்கள் சிவனை நினைவூட்ட, உணர்ச்சிவசப்பட்டு சீபஞ்சாங்கத்தை எல்லா உயிர்களும் மெய்மறந்து கேட்க வாசித்தார். இசை கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், அவரைத் தம் பக்கலில் எப்போதும் இருந்து வேயங்குழலிசை வாசிக்க அருள்புரிந்தார். சிவபெருமானுடைய பக்கலில் நிற்கும் பெரும்பேறு பெற்றவர்கள் இருவரில் இவர் ஒருவர். மற்றையவர் கண்ணப்ப நாயனார். அவர் அம்பு-வில்லுடன் நிற்கிறார்.