14. மூர்த்தி நாயனார்


உலகில் மனிதர்களால் போற்றப்பெறும் பல்வேறு பற்றுக்களில் சிவபெருமான் பற்று ஒழிந்த ஏனையவை விடத்தக்கன. சிவபெருமான் திருமேனிக்கு உகந்த மெய்ப் பூச்சாகிய சந்தனக் குழம்பு தருதல் சிவபுண்ணியம். சிவபுண்ணியம் நியமமாகச் செய்யத் தக்கவை. இங்ஙனம் செய்து வரும்போது அவற்றுக்கு முட்டு நேர்ந்தால் தம் உடலையும் உயிரையும் பொருட்படுத்தாது செய்தல் வேண்டும். மூர்த்தி நாயனார் தமது திருப்பணிக்கு முட்டு நேர்ந்தபோது, தம் முழங்கையைத் தேய்த்த செயல் அன்பின் துணிவால் ஆகியது. உலகப் பற்று, உடற்பற்று, உயிர்ப்பற்றுக்களை விட்டபோது இறைவன் வெளிப்பட்டு அருள் புரிவர். சிவப்பணிக்கு இடையூறு விளைத்தல் சிவாபராதமும் பாவமுமாம். அடியார்களது உள்ளம் வருந்தச் செய்வோரின் செல்வம் அழியும். ஆயுள் சுருங்கும்.

வழிவழி வரும் அரசர் இல்லாதபோது யானையின் கண்ணைக் கட்டிவிட்டு, அரசனைத் தெரிவு செய்ய விடுதல் முந்தையோர் மரபு. அரசரது உள்ளக் கிடையை அறிந்து அதன்வழி நடத்தல் நல் அமைச்சர் கடன். உலகரசாளும் நிலையிலும் மனம் திரியாது சிவன்பால் பத்தி செய்து திருத்தொண்டு செய்தல் சிவஞானம் கைவரப்பெற்ற அரசர் இயல்பு. மூர்த்தியார் அரசராகிய போதும் சந்தனத் தொண்டு செய்தார். இவ்வாறு மக்களையும், நாட்டையும், சமயத்தையும் காவல் செய்து திருத்தொண்டுகள் பல செய்து திருவடி நீழல் சேர்ந்தவர் மூர்த்திநாயனார் என்பவர்.

                  *                                                              *                                                              *

பாண்டி நாட்டின் தலைநகர் மதுரை. அங்கே சீரால் மிகுந்த வணிகப் பெருங்குடியிலே மூர்த்தியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபெருமான் திருவடியினையே மெய்ப்பற்றாகக் கொண்டு, அவற்றையே தமக்குத் துணையும், அடையும் பொருளும் எனக்கொண்டு வாழ்ந்தவர். அவர் திருவாலவாய் சோமசுந்தரப் பெருமானுக்கு மெய்ப்பூச்சுச் சந்தனக் காப்பு அரைத்து வழங்கும் சிவப்பணியில் தலை நின்றார்.

அந்நாளில் சமணசமயத்தை சேர்ந்த வடுகக்கரு நாட்டரசன் ஒருவன் பாண்டி நாட்டின்மீது போர் தொடுத்து, போரில் வெற்றி பெற்றான். பெற்றபின் அவன் திருநெறிச் சார்புடைய சிவநெறியில் செல்லாது, தீ நெறியாகிய சமணசமயத்தில் ஆழ்ந்து, சிவனடியார்க்கும் அடிமைத் திறத்துக்கும் தீங்கு செய்தான். மூர்த்தியாருக்கும் அவர்தம் சிவப்பணிக்கும் தீமை செய்தான். மூர்த்தி நாயனாருக்கு வேண்டிய சந்தனக்கட்டை தேடிக்கொள்ளும் துறைகளை அடைத்தான். எங்கும் தேடியும் மூர்த்தியாருக்குத் தேவையான சந்தனக் கட்டைகள் கிடைக்கவில்லை. “சந்தனக் கட்டைக்கு முட்டு ஏற்படினும் என் கைக்கு முட்டு ஏற்படவில்லை” என்று சொல்லித் தன் முழங்கையை சந்தனப் பாறையில் தேய்த்தார். அப்போது இறைவர் வெளிப்பட்டு, அவர் கையை சந்தனப் பாறையினின்றும் பற்றிப் பிடித்து “இந்தச் செயலைச் செய்யாதே! இந்த நாடு முழுவதிலும் நீயே அரசாட்சி செய்து, பின் நம்மிடம் வந்தணைவாய்” என்றார்.

அன்றிரவே கொடிய அரசன் இறந்தான். அடுத்தநாள் அமைச்சர்கள் இந்நாட்டை ஆள அரசன் ஒருவன் வேண்டுமே எனச் சிந்தித்து, “ஒரு யானையைக் கண்கட்டி விடுவோம். அது யாரை ஏந்தி வருகிறதோ அவரை அரசராகக் கொள்வோம்” என்றார்கள். அமைச்சர்கள் கண்கட்டி விட்ட யானை மூர்த்தியாரை ஏந்திக் கொண்டுவர, அவரை முடிசூட்டு மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். “முடிசூட்டுச் சடங்கிற்கு திருநீறே திருமஞ்சனமாகவும், திருஉருத்திராக்க மணியே அணிகலனாகவும், சடைமுடியே முடியாகவும் இருக்கக் கடவன” என்றார். அங்ஙனமே அவற்றுடன் சடங்குகள் நிறைவேறின. பின் மூர்த்தி நாயனார் திருவாலவாய் என்னும் கோயிலுக்கு சென்று, சோமசுந்தரப் பெருமானையும் மீனாட்சி அம்மையாரையும் வழிபட்டு, அரண்மனை சென்று, அரசு கொலு வீற்றிருந்து ஆட்சி செய்தார். திருநீறும், கண்டிகையும், வேணியும் ஆகிய மும்மையால் உலகாண்டவர் ஆதலினால், மும்மையால் உலகாண்ட மூர்த்தி என்று ஆளுடைய நம்பிகளால் திருத்தொண்டத் தொகையில் சிறப்பிக்கப் பெற்றார். உலகம் எவ்வகையிலும் கேடுறாதபடி காத்து, தமக்குரிய திருத்தொண்டினைச் செவ்வனே செய்து இறைவனது திருவடி நீழலை அடைந்தார். மூர்த்தி நாயனார் சிவனுக்கு சந்தனக் குழம்பு அரைத்த கற்பாறையும், கல்லால் ஆகிய நீர்த்தொட்டியும் இன்றும் திருவாலவாய் திருக்கோயிலிலே பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வணிகர்
நாடு : பாண்டிநாடு
ஊர் : மதுரை
குருபூசை / திருநாள் : ஆடி – கார்த்திகை

ஒரே பார்வையில் ...
சந்தனம் அரைத்து இறைவர்க்கு வழங்கியவர். அத்திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர, தம் முழங்ககையைச் சந்தனக் கல்லில் தேய்க்க முயன்றவர். மதுரையை ஆழ, ஒரு மன்னன் தேவைப்பட்ட பொழுது, அமைச்சர் பட்டத்து யானையைக் கண்கட்டி ஒருவரைத் தெரிவுசெய்ய விட்டபோது, அது இவரையே தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்தது. இவர் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி ஆகிய மும்மையால் உலகத்தை ஆண்டவர்.