15. முருக நாயனார்


விதிப்படி பூக்கொய்து, பூமாலைகள் ஆக்கி சிவபெருமானுக்குச் சாத்தி மகிழ்தலும், சிவனை அர்ச்சித்தலும், சிவநாமமாகிய திருவைந்தெழுத்தை ஓதுதலும் மிகப்பெரிய சிவபுண்ணியங்களாம். பொழுது விடிவதற்கு முன் எழுந்து, நாள் கடன் முடித்து, புனித நீராடி, சிவபெருமானுக்குச் சாத்தத்தக்க நால்வகை மலர்களைத் தெரிந்து கொய்து, திருப்பூங்கூடையில் பெய்து, கூடையை நாரிக்குக் கீழே தொங்கவிடாமல், கையிலேனும், தண்டிலேனும் மேல் உயர்த்திப் பிடித்துக் கொணர்ந்து, பூமாலைக் குறட்டில் சேர்க்கவேண்டும். பின் பூக்களை பாத்திரத்தில் வைத்து, காலத்திற் கேற்றவாறு விதம் விதமான தொடைகள் புனைந்து, தாங்கிச் சென்று, உரிய காலங்களில் சிவபெருமானுக்குச் சாத்துதல், அர்ச்சனை புரிதல், திருவைந்தெழுத்து ஓதுதல், பிறிது எண்ணம் இராதும், வீண் வார்த்தைகள் பேசாதும், சிவனடியை நீங்காது சிந்தனை செய்து பணி புரிதல் முதலிய இவை பூத்தொண்டு பணி செய்வார் மேற்கொள்ள வேண்டிய நியதிகளாம். இங்ஙனம் நியதிப்படி பூத்தொண்டு செய்த முருகநாயனார் திருமடத்துக்கு சம்பந்தர், நாவுக்கரசர், நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய பேரருளாளர்களும், பிற சிவனடியார்களும் எழுந்தருளித் தங்கி அமுது உண்டமையால் செய்த சிறப்பும், பிள்ளையாரின் திருமணத்தின்போது சிவபதமும் பெற்றார்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே மலர்ச் சோலைகள் பல நிறைந்தும், சிவனடி மறவாச் செல்வப் பெரியோர் வாழ்ந்ததும் ஆகிய பழம் பெரும் நகர் திருப்புகலூர் ஆகும். இவ்வூரில் மறையவர் மரபு சிறக்க வந்தவர் முருகனார் என்பவர். அவர் சிவஞானம் பெற்று, சிவபெருமானின் திருவடியில் நிறைந்த அன்புடையவராய் இருந்தார். முன்னைத் தவத்தினால் சிவபெருமானுக்குத் திருப்பள்ளித் தாமம் சாத்தும் திருப்பணியை மேற்கொண்டார். பொழுது விடிவதற்கு முன் துயில் எழுந்து, காலக் கடன் முடித்து, சோலைகளிலும் வாவிகளிலும் உள்ள நான்வகைப் பூக்களை, அலறும் பருவம் அறிந்து கொய்து, இனம் பற்றி, வெவ்வேறு பூக்கூடைகளில் அமைத்து, எடுத்து வந்து, பூமாலைக் குறட்டிலே அல்லது அதற்கென்று அமைக்கப்பட்ட தனி இடத்திலே இருந்து, பூக்களைத் தெரிந்தெடுத்து இண்டை, கோவை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் முதலியனவாக அவ்வக் காலத்துக் கேற்றபடி அமைத்து, அன்பினோடு இறைவர்க்கு சாத்திக் கண்டு மகிழ்ந்தார். முருகனார் ஆன்மார்த்தமாய்க் கொண்டு பூத்தொண்டு செய்து பூசித்த தலம் திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்னும் சிவாலயமாகும். இது திருப்புகலூர் அக்கினீசுவரர் ஆலயத்தினுள் அதனோடு இணைந்து வடகீழ்ப் பாகத்தில் உள்ளது. இங்கு முருகநாயனாருக்குத் தனிச்சிலை, தனிக்கோயில் உண்டு. சாந்தம், தூபம் முதலியவற்றோடு அர்ச்சனை செய்தும் திருவைந்தெழுத்தைப் பத்தியோடு ஓதியும் வந்தார். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், திருநீலக்க நாயனார், சிறுத்தொண்ட நாயனார் முதலிய பேரருளாளர்களதும், மற்றும் சிவனடியார் திருக்கூட்டத்தினரதும் பேரன்பைப் பெற்றார். முருகநாயனார் செய்த சிவப்புண்ணியத்தினாலே, அவர்களைத் தம்முடைய மடத்தில் எழுந்தருளச் செய்து, அவர்களை உபசரித்து, திருவமுது ஊட்டி மகிழும் பேறு பெற்றார். அவர் செய்த பூசனைகள், திருத்தொண்டுகளின் பயனாக திருப்பெருமண நல்லூரில் நிகழ்ந்த பிள்ளையாரின் திருமணத்திற் புக்கருளி சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : திருப்புகலூர்
குருபூசை / திருநாள் : வைகாசி - மூலம்

ஒரே பார்வையில் ...
திருப்புகலூரிலே வர்த்தமானேசுவரருக்கு நால்வகை மலர்கொண்டு, பலவகை மாலைகள் தொடுத்துச் சாத்தும் தொண்டு புரிந்து, திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சிறுத்தொண்டர், நீலநக்கர் முதலியவர்களைத் தம் மடத்தில் உபசரித்து, சம்பந்தர் திருமணத்திலே, நல்லூர்ப் பெருமணத்திலே சோதியுள் புகுந்தனர்.