16. உருத்திரபசுபதி நாயனார்


திருவுருத்திரம் சிவபெருமான் திருநாமத்தை உள்ளே பெருந்த வைத்தது. திருவுருத்திரம் வேதங்களுட் சிறந்தது. வடமொழி வேதத்தின் இருதயமாக விளங்குவது. அது மறைகளின் பயனாக உள்ளது. தமிழில் அப்பர் பெருமானால் நின்ற திருத்தாண்டகமாக அருளப்பெற்றது (VI-94). அதனை உருத்திர திருத்தாண்டகம் என்றே அழைக்கலாம். “அருமறைப் பயனாகிய உருத்திரம்” என்பர் சேக்கிழார் நாயனார் (பெ.பு. உரு.பு.7). இதனை அன்போடு ஓதுதல் சிறப்பு; ஓத முத்தி நிச்சயம். உருத்திரங் கொண்டு அன்பு நிறைந்த ஒருமை மனத்தோடு கழுத்தளவு நீரினுள் புக்குக் கைகூப்பி நின்று இடையறாது ஓதினால் பெருஞ் சிவபுண்ணியமாகும். உபாசனைக்குரிய நின்ற திருத்தாண்டகம், சிவபெருமானின் விசுவரூபத்தைச் சொற்களால் விவரித்து வணக்கம் கூறுவதாகும். இதனை விதிப்படி ஓதி திருவடி சேர்ந்தவர் உருத்திரபசுபதி நாயனார் என்பவர்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே திருதலையூர் என்பது அந்தணர் குலத்தில் வேதியர் ஒழுக்கத்தில் குன்றாக் குடிகள் நிறைந்த நலமுடைய ஊராகும். அங்கே வேதியரின் வேள்விப் பயனால் மழை, பருவம் தவறாது பெய்தது. இனிய குளிர்ந்த சோலைகள் நிறைவுண்டு. அவ்வூர் மக்கள் தருமமும், நீதியும், சால்பும் நிறைந்தவர்கள். அங்கே மறையவர் குலத்தில் தோன்றியவர் பசுபதியார் என்னும் தூயவர். அவர் சிவனடித் திறத்தை விரும்பி இடைவிடாது வேத உருத்திர மந்திரங் கொண்டு இறைவன் திருவடிகளை அன்போடு துதிக்கும் இயல்புடையவர். அவர் பகலும் இரவும் தவறாமல், தாமரைத் தடாகத்திலே, கழுத்தளவு நீரிலே, கைகள் உச்சிமேற் குவிய, சிவபெருமான் திருவடிகளை மனதிருத்தி, அருமறைப் பயனாகிய திருஉருத்திரனை ஓதி வந்தார். பசுபதியாரின் தவப்பெருமையினையும், அருமறை மந்திர நியதியின் மகிமையையும் விரும்பிச் சிவபெருமான் அருள் பாலித்தார். பசுபதி நாயனார் சிவபுரி சேர்ந்து இனிதமர்ந் திருந்தனர். உருத்திரம் பயின்று சிவபதம் அடைந்தமையால் அவர் உருத்திரபசுபதி நாயனார் என்னும் திருப்பெயர் பெற்றார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : திருத்தலையூர்
குருபூசை / திருநாள் : புரட்டாதி – அசுவினி

ஒரே பார்வையில் ...
அல்லும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று, ஸ்ரீ உருத்திர மந்திரம் ஜெபித்துப் பேறு பெற்றவர்.