17. திருநாளைப் போவார் (நந்தனார்)


வயல் வளங்களாலும், துடவை (தோட்ட)ச் செய்கை நிலங்களாலும் பொலிவது மாடங்கள். உழுத்தொழிற் கிழமையுடைய புலைமக்கள் வாழும் புலைப்பாடிகள், ஊரின் புறத்தே புறம்பணைகளில் அமைவது முன்னாள் வழக்கு. புலைச்சேரியில் சுரைக்கொடிகள் போன்ற கொடிகள் படர்ந்த சிறு குடிசைகள் இருக்கும். புலையர் கொன்ற ஆடு-மாடுகளின் தோல், நரம்புகள் உலரவைக்கப் பட்டிருக்கும். புலையர் கோழி, நாய் வளர்ப்பர். புலைச்சியர் பாட்டுப்பாடி, களிதூங்க ஆடியும் நெல் குத்துவர். புலையர் மரபில் வந்து, குலநலம், மரபு முதலிய ஒழுக்கத்தையும் நிலையினையும் உளங்கொண்டு திருத்தொண்டு செய்வோர் புறத்தொண்டர்கள் எனப்படுவர். இவர்கள் கோயிலுக்குப் புறத்தே நின்று, ஆடியும், பாடியும், தோல் கருவிகளுக்கு தோலும், நரம்புக் கருவிகளுக்கு தந்திரியும், பூசனைகளுக்கு கோரோசனையும் தருவர். இவர்கள் திருக்குளம் தோண்டுதல் முதலியனவும் செய்வர்.

இத்தகைய புலைச் சேரியிலே பிறந்து, சிவபெருமானிடத்தில் வைத்த ஆசையினாலே குலமரபு தவறாமல் சிவதொண்டுகள் செய்து, அம்பலவாணரின் திருவடி தொழுதிருக்கும் பேரின்ப நிலையை அடைந்தவர் திருநாளைப்போவார் என்னும் நந்தனாவர்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே காவிரியின் கிளை நதிகளில் ஒன்றாகிய கொள்ளிடத்தின் தென் பக்கத்திலே ஆதனூர் என்று ஒரு புலைப்பாடி உண்டு. அங்கே வாழ்ந்த புலையர்கள் நாய்களையும், கோழிகளையும் வளர்ப்பர். புலைச்சியர் ஆடிப்பாடி நெல் குத்துதல் முதலிய தொழில்களைச் செய்வர். பல சிறு குடிசைகள் நெருக்கவுள்ள புலைப்பாடியில் உள்ளவர்கள் கள்ளுக் குடிப்பதிலும், பறை கொட்டுவதும், பாடுவதும், ஆடுவதுமாக வாழ்வார்கள். இப்பாடி ஒன்றில், சிவன் திருவடிக்கே பற்றாகிய உணர்ச்சியுடன் நந்தனார் என்பவர் தோன்றினார். அவர் உணர்வு வந்த நாள் தொடக்கம், தில்லை நடராஜனின் திருநடனத்தைத் தரிசிக்க மிகவும் விழைந்தார். எனினும் தமது குலப்பிறப்பின் வழிவந்த குல அறத்தின் வழியும், திருத்தொண்டின் வழியிலும் நின்று ஒழுகி வந்தமையால், தாம் செய்ய முடியாது மனம் வருந்தியிருந்தார். “நாளைக்குப் போவோம்; நாளைக்குப் போவோம்” என்று ஒவ்வொரு நாளும் சொல்லிவந்தமையால் அவர் “திருநாளைப்போவார்” என்னும் காரணப்பெயரைப் பெற்றார். திருக்கோயில்களிலே இசைக்கப்பெறும் பேரிகை முதலிய தோல் கருவிகளுக்குப் போர்வைத்தோலும், விசிவாரும், வீணை, யாழ் முதலிய நரம்புக் கருவிகளுக்கு தந்திரிகளும், வழிபாடு முதலியவற்றிற்குக் கோரோனை முதலியவும் தந்து வந்தார். திருக்கோயில்களின் புறத்தே நின்று ஆடியும், பாடியும் மகிழ்ந்தார். ஆதனூருக்கு அருகே உள்ள திருப்புன்கூர் என்னும் தலத்தில் எழுந்தருளிய சிவலோகநாதரை வணங்கப் பெருவிருப்புடன் அங்கு சென்றார். உள்ளே விளங்கும் இறைவரை நேரே வணங்க அவருடைய குல ஒழுக்கம் தடையாய் இருந்தது. எனவே அவர் கோயிலின் புறத்தே நின்று வணங்க, கோயிலினுள்ளே இருந்த இடபதேவர் இறைவரை மறைத்திருந்தார். இறைவர் இடபதேவரைச் சற்றே விலகியிருக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். சந்நிதானத்துக்கு நேரேயுள்ள பெரிய வலிய இடபதேவர் விலக, நந்தனார் இறைவரைத் தரிசித்து வணங்கினார். அங்ஙனம் விலகிய இடபதேவர் இன்றும் விலகியபடியே வெளியே நிற்போர் இறைவரை நேரில் தரிசிக்க இருப்பது இன்றும் காணத்தக்கது. திருக்கோயிலின் மேற்கே பள்ளமாக ஒரு நிலப்பகுதி இருத்தலைக் கண்டு, அவ்விடத்தைத் தோண்டிக் குளம் ஆக்கினார்.

இந்நிலையில், நந்தனாருக்கு திருத்தில்லை சென்று, திருமன்றில் ஆடல் புரியும் அம்பலவாணரைத் தரிசிக்க தணியாத ஆசை கொண்டார். நடேசப்பிரானை திருமன்றில் தரிசிக்க “துன்பம் தரும் இவ்வீனப் பிறவியே தடை” என்று நினைத்து வருந்தித் துயின்றார். இறைவர் அவர் கனவில் தோன்றி, “உன் பிறவி போய் நீங்க நதியில் மூழ்கி மறையவருடன் வருவாயாக” என்று கூறி, தில்லைவாழ் அந்தணர்கள் கனவிலும் தோன்றி, நந்தனாருக்குத் தீ அமைத்துக் கொடுக்க ஆணையிட்டார். தென் திசை மதில் புறத்து அந்தணர் அமைத்த தீயை தொண்டர் வலம் வந்து, கை தொழுது, அழலிடைப் புகுந்தார். தீயினின்றும் முனிவராய் எழுந்து வர, அந்தணர் உடன் செல, திருமன்று போவாராய் கோபுரத்தைக் கடந்து இறைவர் நடமாடும் எல்லையினைத் தலைப்பட, எவருங் காணாமல் மறைந்தருளினார். நடேசப்பிரான் தன் திருவடிகளைத் தொழுது இருக்கும் பேரின்ப நிலையை அருளினார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : புலையர்
நாடு : சோழநாடு
ஊர் : ஆதனூர்
குருபூசை / திருநாள் : புரட்டாதி - ரோகினி

ஒரே பார்வையில் ...
சிவபத்தியில் சிறந்தவர். தாம் பிறந்த குலத்தினால் சிவபெருமானைத் தரிசிக்க முடியவில்லையே என்றும், திருத்தில்லைக்குப் போக முடியவில்லையே என்றும் கவலை உற்றவர். ஆதனூருக்கு அண்மையில் உள்ள திருப்புன்கூர் சிவலோகநாதனிடம் மிக்க பக்தி பூண்டவர். அங்கு, கோவிலுக்கு மேற்கே, பள்ளமாக இருந்த இடத்தில் ஒரு குளம் தோண்டியவர். தாம் புறத்தே இருந்து வழிபடத் தடையாய், மூலவருக்கும் தமக்கும் இடையே இடபம் இருப்பதை, “வழி மறைத்திருக்குதே மலைபோல ஒரு மாடு படுத்திருக்குதே” என்று கூற, “சற்றே விலகியருளும் பிள்ளாய்” என்று கூறி, தம்முடைய முழுக் காட்சியையும் நந்தனார் மகிழ்ந்து, ஆடிப்பாட வழங்கினார். பின் தில்லை சென்று, நடேசப்பெருமான் திருவுள்ளப்படி தீயில் குளித்து, முனிவராய் எழுந்து, திருச்சிற்றம்பலவன் திருமுன் மறைந்தருளினார்.