18. திருக்குறிப்புத்தொண்ட நாயனார்


விருந்தெதிர் கொள்ளும் சிறப்புடன் இல்லறம் புரக்கும் பெருங்குடிமக்கள் வாழும் மாடங்கள் சிறந்து விளங்குவது காஞ்சீபுரம். பெருநிலப்பகுதிகளாகிய குறிஞ்சி முதலிய நாலுமேயன்றி, அவற்றின் புணர்ப்பு நிலம் ஆறும் பொருந்தப்பெற்றது பெருநாடாகிய தொண்டைநாடு. இவ்வாறாக அமைந்துள்ள வெவ்வேறு நிலங்களில் வாழும் வெவ்வேறு குடிகள், தத்தமக்குரிய தொழில் செய்து வாழ்வதும் தொண்டை நாடாகும். தீயவை என்பது கனவிலும் நினையாது, மனத்தினையுடைய தூயமன்பதை வாழ்வதும், சான்றோர் உடையதும் தொண்டை நாடாகும். சிவபூசை மக்கள் அனைவரும், அறிவு, ஆற்றல், ஆயுள் முதலியன உள்ளனவும் நியமமாகச் செய்து வரக்கடவது. அந்திச் செவ்வானத்தையும், பிறையையும் கண்டவர் சிவபெருமான் திருச்சடையையும் பிறையையும், சராசுரங்களையும், காலம், திக்கு முதலியவற்றையும் கண்டு வணங்குவது சிவனடியார் தன்மை. சிவனடியார்க்கு அவர்கள் குறிப்பறிந்து பணிபுரிதல் சிறப்புடைய சிவதொண்டு. சிவனடியார்களின் உடைகளில் உள்ள தூசினைப் போக்கி, ஒலித்துக் கொடுத்தல், அவரவரது பிறவி மாசு போக்குதற்க்கு ஒப்பாகும். சிவனடியார் இசைந்த படியே பணிசெய்தல் வேண்டும். இப்படிச் செய்ய முடியாவிடின் உயிர் துறத்தலே சிறந்தது. இக்குறிக் கோள்களுடனே வாழ்ந்து சிவலோகத்தில் பிரியாதிருந்தவர் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் என்பார்.

                  *                                                              *                                                              *

தொன்மை வளம் சான்ற தொண்டைநாடு, சான்றோருடைத்து என்னும் புகழ்பெற்ற நாடு. அந்நாட்டின் தலைநகராய் விளங்கியது, கல்வியில் கரையிலா காஞ்சிபுரம். பன்னிரண்டு பெயர்களையும் (சீகாழியைப் போல்) பலவகையான மேன்மைகளையும், பெருமைகளைக் கொண்ட கோயில்கள் பலவற்றையும் கொண்டது இந்நகரம். இங்கே ஏகாலியர் குலத்தில், சைவ ஒழுக்கமும், சீலமும், சிவனடிமைத் திறமும் உடையவராய் விளங்கியவர். சிவனடியார்களின் திருக்குறிப்பை உணர்ந்து நிறைவேற்றும் திண்மை உடையவர். அதனால் அவர் திருக்குறிப்புத்தொண்டர் என்னும் காரணப்பெயர் பெற்றார். அவர் சிவனடியார்களின் துணிகளில் படிந்த மாசு நீக்கி, ஒலித்துக் கொடுக்கும் பணியால் சிறந்து விளங்கினார்.

ஒருநாள் சிவபெருமான், இத்தொண்டருடைய இந்த உண்மைப் பணியை உலகோர்க்குக் காட்ட, சீதம் நிறைந்த மாரிகாலத்தில், அழுக்கடைந்த கந்தையைக் கொண்டு அன்பரிடம் வந்தார். சிவனடியாரின் குறிப்பை உணர்ந்து, “ஐயனே! இக்கந்தையைத் தருவீராயின் ஒலித்துத் தருவேன்” என்றார். “குளிரின் வருத்தம் தாங்கமுடியாது. மாலையாவதற்கு முன் ஒலித்துத் தருவாராயின் கொண்டுபோக” என்று சிவனடியாராகிய சிவபெருமான் சொல்லிக் கொடுத்தார். தொண்டராவாரும் மகிழ்ந்து, கந்தையை நீர்த்தடத்தில் உரியபடி தோய்த்து, புழுக்கி ஒலிக்கும்போது, தெய்வ சங்கற்பத்தால் மழை பெய்யத் தொடங்கியது. “இதற்கு நான் என்ன செய்வேன்? தவசியாரிடதுக் கொடுத்த வாக்குப்படி மாலை வருவதற்கு முன் துணியைக் கொடுக்க முடியாதே. அவருடைய திருமேனி குளிர் காணும் தீங்கினை இழைத்த என் தலையை துணி புடைக்கும் கற்பாறையில் மோதுவேன்” என்று தன் தலையைக் கல்லின்மேல் மோதினார். அப்போது அக்கற்பாறைமிசை ஏகாம்பர சுவாமியின் திருக்கரம் வந்து, தொண்டரது தலையைத் தாங்கிப் பிடித்தது. அப்போது புனன்மழை போய், புதுமலர் மழை பொழிந்தது. ஏகாம்பரர் காமாட்சியம்மையாருடன் இடபவாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தருள, தொண்டனார் தொழுது நின்றார். “உன் அன்பு நிலையை மூவுலகும் அறியச் செய்தோம். இனி நீ நம்முடைய சிவலோகத்தில் இருந்து நம்மைப் பிரியாது வாழ்வாய்” என்று அருள் புரிந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : ஏகாலியர்
நாடு : தொண்டைநாடு
ஊர் : காஞ்சிபுரம்
குருபூசை / திருநாள் : சித்திரை - சுவாதி

ஒரே பார்வையில் ...
சிவனடியாருக்கு வாக்களித்தபடி, துணியைத் தோய்த்து, உலர்த்தித் தரமுடியாமல், பெருமழை பெய்து தடுத்தமையால், தமது தலையைக் கல்லின் மீது மோதி உயிர்விட முயலும்போது, சிவபெருமானால் தடுத்து ஆட்கொள்ளப் பட்டவர்.