19. சண்டேசுர நாயனார் (விசாரசருமர்)


தெய்வங்களால் உண்டாக்கப்பட்ட தலங்கள் சிறப்புடையன. திருச்சேஞ்ஞலூர் முருகப்பெருமான் உண்டாக்கி சிவபூசை செய்த ஊர். நல்லொழுக்கத்திற்றவனாக அந்தணர் வாழ்வதும், அவர்கள் சிறுவர் வேதம் பயிலும் கிடைகள் இருப்பதும் நகர அமைப்புக்குப் பெருமை தருவன. பசுக்களும், நன்மாணாக்கரும், நன்மகளிரும் பயிலுதல் நகரத்துக்கு நன்மை தருவன. பண்ணுக்குப் பயன் இசை முதலியவை போல, வேதப்பயன் சைவம். இல்வாழ்க்கையில் துணைவியாரது பெருங்கடமை சுற்றம் தழுவுதல். ஏழு வயதில் உபநயனயனம் (பூணூற் சடங்கு) செய்தலும், வேதம் ஓதுதலும், பிறவும் பிராமணச் சிறுவர் செய்யத் தக்கவைகளாம். எல்லாக் கலைஞானங்களுக்கும் எல்லையாய் உள்ளது தில்லைக் கூத்தப்பெருமானின் குஞ்சிதபாதமேயாம் என்று தெளிந்து, சிவபூசை செய்தலையே தமது கடனாகக் கொள்ளுதல் மறையவர் கடமை. பசுக்களின் பெருமைகளை வேதாகமங்கள் விதந்துரைத்ததைக் கண்டும் அவற்றைப் புடைத்தல், அச்சுறுத்தல் முதலியன செய்தல் பெரும் பாவம். பசுக்கள் பெருமையும், தூய்மையும், தேவர் தீர்த்தங்களுக்கு உறைவிடமாயும் உள்ளன. பசுக்களை முறையாக மேய்த்துக் காப்பாற்றுவது மேலான சிவபுண்ணியமாம். தந்தை, தாய், தாரம், மகவு என்ற பற்று இன்றி, இறைவர் பால் மனம் வைத்தபோது, இறைவன் வெளிப்பட்டு அருளுவர். இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது சிவனையும், சிவனடியாரையும் விதிப்படி வணங்கி, முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம். சிவபூசையிலும், சிவாலய தரிசனத்திலும் சண்டேசுர பூசை செய்தலும், வழிபாடு இயற்றுதலும் செய்யவேண்டியனவாம். இங்ஙனம் வாழ்ந்து திருவருள் பெற்று விளங்கியவர் சண்டேசுர நாயனார் என்பார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : திருச்சேய்ஞ்ஞலூர்
குருபூசை / திருநாள் : தை - உத்திரம்

ஒரே பார்வையில் ...
தாம் செய்துகொண்டிருந்த சிவபூசைக்கென வைத்திருந்த திருமஞ்சனப் பாற்குடத்தை இடறிய தந்தையின் (எச்சதத்தனின்) காலை வெட்டி, தொண்டர்க்கு நாயகமாம் பதவியை சிவபெருமானிடம் பெற்றவர்.


திருக்குறுக்கை வீரட்டம் (அப்பர்) பண் : திருநேரிசைக்கொல்லி
தழைத்ததோ ராத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே யாவின் பாலைக் கறந்து கொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்டானனே. (தே.அப் 4.049.3)


திருப்பல்லாண்டு (சேந்தனார்)
தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு மண்டத் தொடும்
பூதலத் தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமு மருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.