1. தில்லைவாழ் அந்தணர்

நடேசப்பெருமானது ஐந்தொழில் திருக்கூத்தை, திருத்தில்லையம்பலத்தில் கண்டு களித்தல் முத்தி தருவதாகும். திருத்தில்லையில் அடித்தவம் அகம்படித் தொண்டு செய்து, மானமும், பொறையும் தாங்கி, மனையறத்தில் வழிவாழ்வது சிறந்தது. நான்மறை ஆறங்கம் நியமமாகப் பயிலுதலும், தம் மரபுக்கு மறு வராமல் காத்தலும், தருமமே மெய்ப்பொருள் எனக் கொள்ளுதலும், பொதுவாக அந்தணர்க்கும், சிறப்பாக தில்லைவாழ் அந்தணர்க்கும் சிறப்பாய் உள்ளன. உயிர்கள் உறுவது திருநீற்றின் செல்வம். பெறுவது சிவன்பால் அன்பு. வேதவிதியாகிய சைவசித்தாந்தத் திருநீற்றின் ஒளி நெறி விளக்கமும், அடித்தவமும், சிவஞானமும் தில்லைவாழ் அந்தணர்க்குச் சிறப்பாய் உள்ளன.

                  *                                                              *                                                              *

இத்துணைச் சிறந்த தில்லைவாழ் அந்தணர், பெரியபுராணத்தில் போற்றப்பெற்ற தொகையடியார்களுள் முதலாமவர். ஐந்தொழில் போற்றும் ஆடவல்லானை போற்றுபவர்கள்; அந்நடனம் செய்கின்ற பூங்கழலைத் தினமும் வழிபடுபவர்கள்; இவற்றைப் போற்றி வாழ்கின்றவர்கள் ஆகிய தில்லைவாழ் அந்தணர்கள் (இந்நாள் ‘தீஷிதப் பெருமக்கள்’ என்று அழைக்கப் பெறுவர்) நடேசப்பிரானது திருவடித் தொண்டிலே உரிமை பூண்டு ஒழுகுகின்றவர்கள்; மறைகளால் துதிப்பவர்கள்; இன்னும் திருக்கோயிலில் உள்ள அகம்படித் தொண்டு செய்பவர்கள்; உலக நன்மைப் பொருட்டு மூன்றெரி ஓம்புபவர்கள்; வேதவேதாங்களில் வல்லவர்கள்; தூய மரபில் வந்து, தூய ஒழுக்கம் உடையவர்கள். அறுதொழிலால் கலி (துன்பம்) வராமல் செய்பவர்கள். திருநீற்றுப் பற்றையும், சிவனிடத்துப் பதிந்த அன்பையும் பெரும் பேறாகக் கொண்டு ஒழுகுபவர்கள். ஞானம் முதலாகிய நான்கும் உணர்ந்தவர்கள். தானதவம் செய்பவர்கள். மானமும் பொறுமையும் கொண்டு இல்லறத்தில் ஒழுகுபவர்கள். திருத்தொண்டத் தொகையில் முதலில் வைத்து, திருவாரூர்ப் பெருமான் திருவாக்கினால் சொல்லப்பெற்ற பெருமை உடையவர்கள். இவர்கள் என்றும் பொதுநடம் போற்றி வாழ்வார்.

திருநாள் : சித்திரை முதல் நாள்