2. இயற்பகை நாயனார்


சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றை இல்லை என்னாது கொடுத்தலும், அவர்கள் நினைத்தவற்றை குறிப்பறிந்து முடித்து, அவர்களை மகிழ்விப்பதும் இல்வாழ்கையின் சிறந்த பதிதருமமும், பேறுமாம். பெண்கள் தம் கணவர் விரும்பிச் சொல்லியவற்றை, அவற்றின் வழி ஒழுகிவருதல் வேண்டும். அதுவே உண்மைக் கற்பு நிலையின் பெருமை ஆகும். குலஒழுக்கம், குலநலம் என்பவை பாராட்டி, பாதுகாக்க வேண்டியவை. உலக நீதிகளினும், உலக அறங்களினும் சிவதருமங்கள் மேம்பட்டன. மனைவி, மக்கள், சுற்றம் முதலிய சார்புகள், சிவச்சார்புகளின் முன்னே அறுத்தொழித்த இடத்தே, சிவன் வெளிப்பட்டு வழிகாட்டுவன். நீறு, கண்டிகை முதலிய சிவசாதனங்களிலே வயமாக்கப்பெற்ற மனம் உடையாரது செயல்கள் உலக நீதி கொண்டு அளக்கப்பட முடியா. சிவபெருமான் இனியனாய், தன்னை அடைந்தார்க்கு அருள் புரிபவன். சிவனடியார்களது திருவேடத்திலே சிவனைக் கண்டு வழிபடில், சிவனே அங்கு நின்று அருள் புரிபவன். அடியார்கள்மேல் நின்ற நீறு, கண்டிகை முதலிய சிவசாதனங்கள், அன்பு உடையார்களை, தம்வசப்படுத்தி, ஈடுபடச் செய்யும்.

இங்ஙனம் இக்குறிக்கோள்களோடு வாழ்ந்த இயற்பகை நாயனாரும், மனைவியாரும் இறைவர், வானிலே, உமை அம்மையாரோடு தந்த காட்சியைக் கண்டு, கழித்து, இருவரும் சிவலோகம் சேர்ந்தனர்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடம் பூம்புகார் என்னும் கடற்கரைப் பட்டினம் ஆகும். அது வணிகமும், வணிகத்தால் வரும் செல்வமும் மிக்க அழகிய நகர். அங்கே இயற்பகையார் என்றொரு வணிகர் இருந்தார். அவர் சிவனடியார்கள் தம்மிடம் எது வேண்டிக் கேட்டாலும், இல்லை என்னாது கொடுத்து மகிழ்ந்தவர். ஒருநாள் அவரது இயல்பை, உலகுக்கு காட்டி, உய்விக்க எண்ணிய இறைவர், அடியாரிடம் சென்று, “சிவனடியார் வேண்டும் பொருளை இல்லை என்னாது வழங்கும் தன்மை உடையீர் எனக் கேட்டு வந்தேன். உம் காதல் மனைவியை விரும்பி வந்தேன்” என்றார். அதற்கு உடன்பட்ட வணிகர், தம் மனைவியாரிடம் சென்று, “மங்கையே, உன்னை இந்த மெய்த்தவருக்கு கொடுத்துள்ளேன்” என்றார். அது கேட்டு முதலில் பெரும் கலக்கம் எய்தினரேர் ஆயினும், அது கணவன் கட்டளை என எண்ணி, தெளிந்து, அடியாருடன் செல்ல இசைந்தார். அவர் அந்த சிவனடியாருடன் போய்க்கொண்டிருக்கும்போது, வழியில் உற்றார், உறவினர் இடையூறு செய்யாதிருக்க, இயற்பகையார் வாள், பலகை முதலிய வற்றோடு அவர்களுக்கு துணையாய் பின் சென்றார். அவர்களை எதிர்த்தவர் எல்லாம் இயற்பகையார் வேல், வாள், சுரிகை முதலியன கொண்டு தடுத்துக் கொன்றார். பின் சிவனடியாரை நோக்கி இயற்பகையார், “இனித் தேவரீர் அஞ்சாது செல்மின்” எனச்சொல்லி மீண்டார். மீணும்போது வேதியர் இயற்பகையாரை நோக்கி, “பொய்மை இல்லாத மனம் உடையான், திரும்பிக் கூடப் பார்க்காது போகிறானே” என்று எண்ணி, “இயற்பகை முனிவா ஓலம்” எனக் கதறினார். மீண்டும் சுற்றத்தார் அவர்களை தாக்குகின்றார்களோ என்று அஞ்சி, நாயனார் அவர்களிடம் விரைவாகச் செல்ல, வேதியரைக் காணாது, அம்மையார் மட்டும் தனியே நிற்பதைக் கண்டார். அப்போது வானிலே, சிவபெருமான், உமை அம்மையாரோடு விடையின் மேலிருந்து காட்சிதரக் கண்டு களித்தார்கள். அப்போது இறைவர், “உன் பரிவு கண்டு மகிழ்ந்தோம். நீ உன் மனைவியோடு நம் பக்கல் வருக” என, அவர்கள் இருவரும் சிவலோகம் சேர்ந்தனர். முதலில் எதிர்த்து, இறந்த சுற்றத்தாரும் உயிர்பெற்று எழுந்தார்கள்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வணிகர்
நாடு : சோழநாடு
ஊர் : காவிரிப்பூம்பட்டினம்
குருபூசை / திருநாள் : மார்கழி – உத்தரம்

ஒரே பார்வையில் ...
சிவனடியார் விரும்பியவற்றை முழுமனதோடு வழங்கும் வழக்குடையவர். ஒருநாள் இறைவர் சிவனடியார் வேடம் பூண்டு, அவரிடம் சென்று, அவர் மனைவியைக் கேட்க, சுற்றத்தார் தடுக்கவும் கேளாது, மனைவியை சிவனடியாருக்கு வழங்கிப் பேறுபெற்ற வள்ளல்.