20. திருநாவுக்கரசு நாயனார்


வடக்கில் தொண்டைநாட்டையும், கிழக்கில் சமுத்திரத்தையும், தெற்கில் சோழநாட்டையும், மேற்கில் கொங்குநாட்டையும் உள்ளிட்ட நடுநாட்டிலே திருவாமூர் என்னும் சிவப்பதியிலே, புகழனார் என்னும் வேளாண்குடித் தலைவரும், கற்பிற்கரசியாராகிய மாதர் திலகமுமாகிய மாதினியாரும் இல்லறம் நடாத்தி வந்தனர். வருங்கால் அவர்கள் செய்த தவப்பயனால் ஒரு பெண்மகவும், ஒரு ஆண்பிள்ளையும் இனிது பெற்றெடுத்தனர். அவர்களுக்கு முறையே திலகவதியார் என்றும், மருணீக்கியார் என்றும் பெயர் சூட்டி, பெருமையுடன் வளர்த்து வருவாராயினர். திலகவதியார் மணப்பருவம் எய்தியதும் கலிப்பகையார் என்னும் அரசு சேனாபதியார் தம் விருப்பத்தை பெரியோர்களை திலகவதியாரிடம் அனுப்பி வேண்டினார். பெற்றோரும் தம் இசைவு தந்தனர். எனினும் அவர் தம்வேந்தர்க்கு உற்றுழியுதவச் சேனையுடன் வடபுலம் சென்றார். அவர் அங்கே போர்க்களத்தில் உயிர் துறந்து வீர சுவர்க்கம் அடைந்தார். இங்கே புகழனாரும், மாதினியாரும் ஒருவர் பின் ஒருவராக மரிக்க, சிறுவர்கள் இருவரும் கவலை உற்றனர். சுற்றத்தார் தேற்ற ஒருவாறு மனம் தேறியிருந்தனர்.

கலிப்பகையார் போர்க்களத்திலே வீரசுவர்க்கம் அடைந்தமையைக் கேட்ட திலகவதியார், “என் பெற்றோர்கள் என்னை அவருக்கே மணம் செய்துகொடுக்க நினைத்தமையால் இவ்வுயிர் அவருக்கே உரியது. எனவே இவ்வுயிரை அவரோடு இசைவிப்பேன்” எனச்சொல்லி இறக்கத் துணிந்தார். பின் தம்பியார் உளராக வேண்டும் என்ற தயாவினால், அது ஒழித்து, இல்லிலிருந்து செய்யலானார்.

மருணீக்கியாரும் வயது நிரம்ப, யாக்கை, இளமை, செல்வம் முதலியனவற்றின் நிலையாமையை அனுபவத்தாலும், கல்வி அறிவாலும் உணர்ந்து, தம்மிடம் இருந்த மலைபோன்ற செல்வதை, மன்பதைக்கு பயனளிக்கும் சோலைகள் வளர்த்தல், குளம் தோண்டுதல், மேவினவர்களுக்கு வேண்டுவன செய்தல், விருந்தினரை ஓம்பல், நாவலர்க்கு செல்வம் வழங்கல், அறச்சாலைகள், தண்ணீர்ப் பந்தல்கள் நாட்டுதல் முதலிய தானதர்மங்கள் செய்து, கைவினையில் தலைசிறந்து நின்றார். இங்ஙனம் செந்நெறியில் நின்ற மருணீக்கியார், தம்பெருமான் திருவருள் கூடாமையினால், கொல்லாமையே சிறந்த நெறி என்று உணர்ந்து, தாம் செய்துவந்த தீச்செயல்களை மறைத்து ஒழுக்கம் பூண்ட சமண் சமயத்தினர் பள்ளிகளும், பாழிகளும் அமைத்து சமணசமயம் வளர்த்து வந்த பாடலிபுரம் என்னும் பல்லவர் நகர் சென்றணைந்து, சமண் பயின்று, அவர்களுக்குத் தலைவராகி, தருமசேனர் என்று பெயர் பெற்றார்.

இதை அறிந்த திலகவதியார் மனமிக வருந்தி, திருவாமூருக்கு அண்மையிலுள்ள திருவதிகை திருவீரட்டானம் சென்று, அங்கு சரியைத் தொண்டு நெறியில் ஒழுகினார். தம்பியாரை நினைந்துருகி, “என் தம்பியை சமணசமயப் படுகுழியில் இருந்து மீட்டுத்தரவேண்டும்” என்று வீரட்டானத்து இறைவனை வேண்டிவந்தார். “தபோதனியே உன்தம்பி முற்பிறப்பிலே என்னை அடையவேண்டும் என்று விரும்பினான். இனி அவனை சூலை நோயினால் ஆட்கொள்வேன்” என்று திலகவதியாருக்குக் கனவிலே தோன்றிக் கூறினார்.

தருமசெனரை சூலைநோய் பீடித்து வருத்திற்று. சமணர்களுடைய மந்திரம், மந்திரித்த நீர், மயிற்பீலி எவற்றாலும் சூலை நீங்காமை கண்டு தருமசேனரைக் கைவிட்டனர். அந்நிலையில் அவர் திருவதிகை சென்று, தமக்கையாரைத் தஞ்சம் அடைந்தார். அன்புள்ள தமக்கையார் அருமைத்தம்பியை நோக்கி, “எழுந்திரீர்” எனக்கூறி, திருவாளன் திருநீற்றைத் திருவைந்தெழுத்து ஓதி, ஆணியக்கொடுத்து வாழ்த்தினார். அவர் ஆசையோடு திருநீற்றைப் பூசினார். திருப்பள்ளி எழுச்சியில் தமைக்கையாரோடு திருக்கோயில் சென்று, தம்முடைய சூலைநோய் நீங்கும் பொருட்டும், உலகத்தில் உள்ளோர் தங்கள் நோய்கள் நீங்கும் பொருட்டும், “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்ற பதிகத்தைப் பாடி அருளினார். உடனே சூலைநோய் நீங்கியது. இது அவர் வாழ்வில் நிகழ்ந்த முதல் அற்புதமாகும்.

இதனை அறிந்த சமணர் பொறாமை கொண்டு, அவர் சைவரான செய்தியை அறிவித்தனர். கோபம் கொண்ட மன்னவன் அவரைத் தண்டிக்க விழைந்து, அவரைப் பிடித்துவர ஏவலாளரை ஆஞ்ஞாபித்தான். மந்திரிமாரும், சேனைத்தலைவரும் திருவதிகை சென்று அழைக்க, “நாம் யார்க்கும் குடியல்லோம்” என்று பாடி, உடன்செல்ல மறுத்தும், பின் ஒருவாறு இசைந்து சென்றார். அப்போ சமணர் சொற்கேட்ட பல்லவன், அவரை நீற்றறையில் இடச்செய்தான். நீற்றறையில் அடைபட்டிருந்த மருணீக்கியார், சிவனை நினைந்து, “மாசில் வீணையும்” என்று எடுத்துப் பாடினார். ஏழுநாள் கழித்து அவர் அங்கே சகித்திருப்பதைக் கண்டு சமணர்கள் அரசனிடம் சென்று, இனி இவனுக்கு நஞ்சு கலந்த பாற்சோறு கொடுப்பதே வழி என, அரசனும் அதற்கு உடன்பட்டான். எனினும் அதுவும் பயனளிக்காமை கண்டு, அரசருடைய யானையை அவர்மேல் ஏவும்படி கூற, அவனும் இசைவு தந்தான். மருணீக்கியார், அவ்வேளை, “சுண்ணவெண்” என்னும் பதிகம் பாட, யானை அவரை வலம்வந்து வணங்கி, பாகர் முதலியோரை அழித்தது. கோபம்கொண்ட அரசன் மருணீக்கியாரை கல்லோடு கட்டிக் கடலில் இட ஆணையிட்டான். அப்போது அவர், “சொற்றுணை வேதியன்” என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாட, அக்கல்லே தெப்பமாக மாறி, அவரைத் தாங்கி, திருப்பாதிரிப்புலியூர் என்ற தலத்தை அடைந்தது. இங்ஙனம் நீற்றறை, நஞ்சு கலந்த பாற்சோறு, மதயானை, கட்டப்பட்ட கல் இவற்றில் இருந்து பதிகம் பாடிய மருணீக்கியார், திருப்பாதிரிப்புலியூரில் தங்கி, சுவாமி தரிசனம் செய்து, “ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய்” என்று இருமுதுகுரவரையும், தமக்கையாரையும் சிறப்பித்தார். பின் திருவதிகைக்கு இரண்டாம் முறையாகச் சென்று, சிலா ஆண்டுகள் தங்கிச் சரியைத் தொண்டு செய்து, திருவெண்ணெய் முதலாய நடுநாட்டுத் தலங்களை வணங்கிக்கொண்டு, சோழநாட்டை அடைந்து, திருத்தில்லையைத் தரிசித்தார். அப்போது நடேசப்பெருமானை, “என்று வந்தாயென்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே” என்று பாடி, பிரானுடைய திருவருள் பெற்று, சீகாழியில் ஆளுடைய பிள்ளையார், திருமுலைப் பாலுண்ட செய்தி முதலாயின் அறிந்து, அங்குச் சென்று, அங்கு பிள்ளையாராலே “அப்பரே” எனச் சிறப்பித்து அழைக்கப்பெற்றார்.

பெண்ணாடகத்திலே திருத்தூங்கானைமாடம் என்னும் திருக்கோயிலுக்குச் சென்று, இறைவரை வணங்கி, “சுவாமி, இழிவினையுடையவராகிய சமணர்களுடைய தொடக்குண்ட இத்தேகத்துடனே வாழத்தரியேன். ஆகவே தேவரீருடைய இலச்சினைகள் ஆகிய இடபத்தினையும், சூலத்தையும் என்னுடம்பில் பொறித்தருள வேண்டும் என்று, “பொன்னர் திருவடிக்கு” என்று பாடி அருளினார். உடனே ஒரு சிவபூதம் நாவுக்கரசருடைய தோளிலே இலச்சினைகளை இட்டுச் சென்றது. பின் அங்கிருந்து திருமுதுகுன்றம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு, திருத்தில்லைக்கேகி, மேற்குத் திருவாயிலால் உட்சென்று வணங்கும்போது, “என்று வந்தாய்” என்று எம்பெருமான் திருவருளைப் போற்றினார். சிலகாலம் கழித்து, திருக்கோலக்கா வழியாக, திருச்சத்திமுற்றத்தை அடைந்து, இறைவரிடம் அவரது பூவாரடிச் சுவட்டைத் தன்மேல் பொறிக்க வேண்டினார். இறைவரின் கட்டளைப்படி நாயனார் திருநல்லூருக்குச் சென்று வணங்கி, இறைவரின் திருவடிகள் சிரசின்மேல் சூட்டப்பெற்றார். அங்கிருந்து திருப்பழனம் வழியே திருத்திங்களூர் செல்லும்போது, அவ்வூரில் அப்பூதியடிகள் என்னும் அந்தணர் திருநாவுக்கரசர் பெயரால் செய்யும் தொண்டுகளை அறிந்து, அவர் இல்லம் எழுந்தருளினார். அங்கே அப்பூதியார் விரும்பியபடி அப்பர் திருவமுது செய்ய இசைந்தார். அமுது படைக்க வாழைக்குருந்து அரிக்கச் சென்ற மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறந்தான். அதறிந்த நாயனார், சவத்தை பழனத்துச் சிவாலயத்துக்குக் கொண்டுவரச் செய்து, “ஒன்று கொலா” என்னும் திருப்பதிகம் பாடினார். பின்னர் தாம் பாடிய திருப்பதிகத்தில், “அஞ்சிப் போயக் கலிமெலிய அழலோம்பு அப்பூதிக் குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே” என்று அடிகளை நாயனார் சிறப்பித்தார்.

பின் திருவாரூர், திருமருகல் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருப்புகலூருக்குச் சென்றபொழுது, அங்கே இருந்த ஆளுடைய பிள்ளையார் அவரை எதிர்கொண்டு உபகரிக்க, அவரோடு முருகநாயனார் மடத்தில் எழுந்தருளி இருந்தார்கள். சிலநாள் கழிய, பிளையாரும் அப்பரும் திருவீழிமிழலை சென்றனர். அங்கே மக்கள் பஞ்சத்தாலும், பசியினாலும் வருந்துவதைக் கண்டு, இருவரும் தனித்தனியே இரு மடங்கள் அமைத்து, இறைவர்பால் படிக்காசு பெற்று, குடிகளின் இன்னல்களைத் தீர்த்தனர். திருவீழிமிழலையில் பஞ்சம் தீர்த்தபின், இருவரும் திருமறைக்காடு சென்று சுவாமி தரிசனம் செய்தார்கள். வேதங்களால் பூசித்துக் காப்பிடப்பெற்ற திருக்கதவங்களைக் கண்டு, அவை திறக்க அப்பர் பாடினார். பின் அவை மூட பிள்ளையார் பாடினார். மக்கள் மகிழ்ந்தனர்.

திருமறைக்காட்டில் இருக்கும்போது மதுரையில் இருந்து பாண்டியன் தேவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த அழைப்பை ஏற்று, பிள்ளையார் அங்கு செல்ல, அரசு பழையாறை சென்றார். அங்கேயுள்ள சிவலிங்கப் பெருமான் கொடிய சமணர்களால் மறைக்கப் பட்டிருந்தலைக் கண்டு, “உம்முடைய திருவுருவை நேரே கண்டு வணங்கியன்றி இவ்விடம் விட்டகலேன்” என்று உறுதி பூண்டிருந்தார். திருவருளினால் அரசன் தான் கண்ட கனவின்படி சமணர்களை அவ்விடத்தினின்றும் அழித்தொழித்தான். சோழநாட்டிலிருந்து உதிரதிசைத் தலங்களை வணங்கிக்கொண்டு உத்தர கைலாசத்தைத் தரிசிக்க விரும்பினார். காசியில் இருந்து அப்பாலுள்ள கற்சுர வழியே செல்லும்போது, அது கூடாமையால் வழியில் அறிவு மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது, “நாவுக்கரசனே எழுந்திரு” என ஒரு அசரீரி கேட்டது. “நீ இந்தத் தடாகத்தில் மூழ்கி, திருவையாற்றிலே எழுந்து, நம்மை கைலாசகிரியில் இருக்கும் கோலத்தில் தரிசி” என்று இறைவர் பணித்தார். நாயனாரும் திருவைந்தெழுத்தை ஓதி, அங்ஙனமே செய்தார். கயிலைவாசரைத் தரிசித்து, “மாதர்ப்பிறைக் கண்ணியானை” என்றெடுத்துப் பதிகம் பாடி, சிலவைகல் அங்கு தங்கியிருந்தார்.

திருவையாற்றில் இருந்த நாயனார், திருப்பூந்துரித்தி அடைந்து திருமடம் கட்டி, அங்கிருந்து சரியைத் தொண்டு செய்திருந்த வேளை, பிள்ளையார் மறைக்காட்டில் இருந்து மதுரை சென்று, சமணரை அழித்து, திருப்பூந்துரித்தி வரும் செய்திகேட்டு, அவரை எதிர்கொண்டு, அவர் முத்துச்சிவிகையை தாங்கி வந்தார். அப்பர் அங்ஙனம் செய்ததை அறிந்த பிள்ளையார், விரைவாக சிவிகையினின்றும் இறங்கிவர, இருவரும் ஒருவரை ஒருவர் வழிபட்டு, அப்பர் திருமடத்தில் சிலநாள் தங்கினர். பின் பிள்ளையார் தொண்டைநாடு செல்ல, அப்பர் பாண்டிநாட்டு யாத்திரையை முடித்துக்கொண்டு, புகலூர் சென்று பதிகம் பாடி இருக்கும் வேளையில், உழவாரத் தொண்டு செய்யும்போது, உழவாரத்திடையே தோன்றிய பொன்னையும், மணிகளையும், உழவாரத்திலேந்தி வாவியில் வீசியும், தேவலோகத்தில் இருந்த அரம்பையர்களைக் கவனியாது தேவலோகத்துக்கே திருப்பி அனுப்பியும் செய்தார். பின், “புகலூர் இறைவர் என்னை இனித்தம் சேவடிக்கீழ் இருத்துவர்” என்று பதிகப்பாடல் தோறும், “புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவியனே” என்று முடித்து, சித்திரைச் சதயமாம் திருநாளில் சிவபெருமானின் திருவடிக்கலப்பாம் பேறுபெற்று, சிவானந்த ஞானவடிவமேயானார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : திருமுனைப்பாடிநாடு
ஊர் : திருவாமூர்
குருபூசை / திருநாள் : சித்திரை - சதயம்

ஒரே பார்வையில் ...
புகழனாரும், மாதினியாரும் செய்த அரும்பெரும் தவத்தால், திலகவதியார் என்னும் தவக்கொடிக்குத் தம்பியாராய் அவதரித்தார். இளமையிலே பெற்றோரையும், தமக்கையாருக்குத் திருமணம் செய்யப் பெற்றோர் இசைந்த கலிப்பகையார் போர்க்களத்தில் வீர சுவர்க்கம் அடைய, நிலையாமை உணர்ந்து, சமண் சமயம் சேர்ந்தார். பயங்கரமான பல துன்பங்களை அநுபவித்தும், அற்புதங்களைப் புரிந்தும், உடன்பிறந்த உத்தமி வழிப்படுத்திய நெறிவழியே சென்று, தம் 81 வயதில், திருப்புகலூரில் சிவானந்த வடிவே ஆகினார்.

திருநாவுக்கரசு நாயனார் புராண சாரம்
போற்று திருவாமூரில் வேளாண் தொன்மைப் பொருவில் கொறுக் கையாரதிபர் புகழனார் பான் 
மாற்றருமன் பினிற்றிக வதியாமாது வந்து நித்த பின்பு மருணீக்கி யாருரு
தோற்றியண் சமயமுறு துயர நீங்கத் துணைவரரு டரவந்த சூலை நோயாற்
பாற்றருநீ ளிடரெய்திப் பாடலி புத்திரத்திற் பாழியொழித் தரனதிகைப் பத்தியில் வந்தார்.

வந்து தமக்கையருளா நீறு சாத்தி வண்டமிழாநோய் தீர்ந்து வாக்கின் மன்னாய்
வெந்த போடி விடம்வேழம் வேலைநீந்தி வியன்சூலங் கொடி யிடபம் விளங்கச் சாத்தி
யந்தமிலப் பூதிமக னரவு மாற்றி யருட்காசு பெற்றுமறை யடைப்பு நீக்கிப்
புந்திமகிழ்ந் தையாற்றிற் கயிலை கண்டு பூம்புகலூ ரான்பாதம் பொருந்தினாரே.