21. குலச்சிறை நாயனார்


எக்குலத்தினராயினும், தம் குலநெறியில் தவறியவராயினும், உலக நலமுடையவர் ஆயினும், தீமைகள் உடையோர் ஆயினும், அமுதுண்ண வேண்டிப் பலராயோ, தனியராயோ வரினும், வீபூதி, கோவணம், கண்டிகை முதலிய சிவசாதனங்களால் பொலிந்து, திருவைந்தெழுத்தை ஓதும் சிவனடியார் வரினும், அவர்களை வணங்கி, அமுதூட்டி வழிபடுவது சிவனடியார் இயல்பு.

                  *                                                              *                                                              *

இத்தகைய இயல்பில் தலைநின்று, தம்மிடம் சென்ற சிவனடியோருக்கும், ஏனையோருக்கும் அமுதூட்டி, அவர்களது திருவடிகளைத் தம் சிரமேற்கொண்டு முத்தி அடைந்தவர் குலச்சிறை நாயனார் என்பவர். இவர் பாண்டி நாட்டின் கீழ்க் கடற்கரை அருகே உள்ள மணமேற்குடி என்னும் தலத்தில், பெருநம்பி என்ற மரபில் தோன்றினார். மதுரையில் இருந்து ஆட்சி செய்த கூன்பாண்டியன் என்னும் அரசருக்கு அமைச்சரானார். பாண்டிய மன்னர், சைவம் துறந்து, நெறியல்லா நெறியாகிய சமண் சார்ந்து, சமண முனிவர்களுக்கு ஆதரவு நல்கி, சமணம் பரவ உதவியதைக் கண்ணுற்று வருந்தினார். வளவர்கோன் புதல்வியும், பாண்டிமாதேவியுமாகிய மங்கையர்க்கரசியர், நெடுமாறனார் சைவம் தழுவச் செய்யவேண்டும் என்று உளங்கொண்டார். தேவியார் ஆற்றிய சிவதொண்டுகளுக்கு எல்லாம் உதவியாய் இருந்து, அம்மையாரின் உளக்கருத்து நிறைவேறப் பணியாற்றியவர். அப்போது திருமறைக்காட்டின் ஆளுடை அரசுகளோடு இருந்தவராகிய பிள்ளையாரை அழைத்தார். பிள்ளையார் மதுரை எழுந்தருளி சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் முதலியன செய்து வெற்றி ஈட்டினார். பிள்ளையார் அருளிச்செய்த பாசுரத்தில், “மன்னனும் ஓங்குக” என்று பாட, திருவருட் குறிப்பின் வழி மன்னன் நின்றசீர் நெடுமாறன் ஆனார். அமைச்சர் குலச்சிறையார், தோல்விகண்ட சமணர்களை கழு ஏற்றினார். இதை அறிந்த பல சமணர் மதுரையினின்றும் வெளியேறியும், சைவசமயத்தை தழுவியும் ஆனார்கள். நெடுமாறன் பின் நெய்வேலி செருக்களத்தில் வடவனரைப் போரிட்டுப் புறங்கண்டார். பிள்ளையார் மதுரையில் பாடிய தேவாரங்களுள் அம்மையாரையும், அமைச்சரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் :
நாடு : பாண்டிநாடு
ஊர் : மணமேற்குடி
குருபூசை / திருநாள் : ஆவணி - அநுடம்

ஒரே பார்வையில் ...
தம் அரசன் கூன்பாண்டியனுக்கு முதன்மந்திரியாக இருந்தவர். அரசர் சமணனாக இருந்தபோதும், இவர் சிவனடியாராக இருந்து, சைவராகிய பாண்டியன் தேவியார் மங்கையர்க்கரசியாருக்கு உறுதுணையாக இருந்து, திருமறைக்காட்டில் இருந்த சம்பந்தரை அழைத்து, கூன்பாண்டியனை நின்றசீர் நெடுமாறர் ஆக்கி, அரசரையும், நாட்டையும் சைவம் ஆக்கியவர். மாறுபட்ட சமணரைக் கழு ஏற்றியவர்.