22. பெருமிழலைக் குறும்ப நாயனார்


சிவனடியார்களின் குறிப்பறிந்து, அவர்களுக்கு அமுது ஊட்டியும், நிரம்ப நிதி கொடுத்ததும், பணி செய்து, சிவபெருமானை மறவாது போற்றிவருவது பெரும் புண்ணியமாகும். இந்நெறி நின்று, திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனாரை வழிபட்டு, அணிமா, மணிமா முதலிய எட்டுச் சித்துக்களும் கைவரப் பெற்றவர் இப் பெருமிழலைக்குறும்பராவர். அச்சித்துக்கள் வழியாக திருவைந்தெழுத்தே தமக்குச் சுற்றமும், பற்றுக்கோடும், உணர்வுமாகும் தன்மை கைவரப்பெற்றவர். சுந்தரர் திருக்கயிலை செல்லத் திருவுளம் பற்றியதை அறிந்த குறும்பரும், நம்பிகளை விட்டு இங்கு வாழேன் என்று கூறி, தாம் பயின்ற யோக முயற்சியால், சுந்தரருக்கு முன்பே திருக்கயிலை சென்றடைந்தார்.

                  *                                                              *                                                              *

பெருமிழலைக்குறும்பர் என்பவர் பெருமிழலை என்னும் நாட்டிலே, குறும்பர் என்னும் குடியிலே தோன்றியவர். குறும்பரின் தலைவர். இவர் சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்து, அடியார்வேன குறிப்பால் அறிந்து கொடுத்து வந்தவர். இவர் தம் வாழ்க்கையில் சுந்தரமூர்த்தி நாயனாரை நியமமாக நினைந்து, அவரை மனம், வாக்கு, காயங்களினால் வணங்கும் நெறி நின்றார். இங்ஙனம் நம்பிகளது நாமத்தை உச்சரித்து, அணிமா முதலிய எண்வகைச் சித்துக்கள் கைவரப்பெற்று, முதல் நாமத்து ஐந்தெழுத்தும் கேளும் பொருளும் உணர்வுமாம் என்ற தன்மையுடையராய் இருக்கக் கெழுமினார். இந்நாட்களில் நம்பியாரூரர் கொடுங்கோளூரை அடைந்து, திருவஞ்சைக்களத்தப்பரைத் துதித்திருக்கும் போது, வடகயிலைமலைக்குச் செல்லத் திருவுளங் கொண்டார். திருக்கயிலை செல்லவிருந்த நாள் அணுக, “நான் இங்கு பிரிந்து வாழேன். யோகத்தால் இன்றே சிவன்தாள் அடைவேன்” என்று, சுந்தரர் முதலியோர் கயிலையைச் சென்று அடைவதற்கு முன்னரே அடைந்தார். நெடுங்காலம் அங்கிருந்தபின் நம்பிகளோடு அமர்ந்து, சிவபெருமான் திருவடி நீழல் சேர்ந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் :
நாடு : பாண்டிநாடு
ஊர் : பெருமிழலை
குருபூசை / திருநாள் : ஆடி - சித்திரை

ஒரே பார்வையில் ...
சுந்தரமூர்த்தி நாயனாரை வழிபட்டு, அவர் திருக்கயிலை செல்வது அறிந்து, யோகத்தால் தாமும் திருக்கயிலை சென்றவர்.