24. அப்பூதியடிகள்


சிவனடியார்களை நேரில் காண்டலன்றியும் அவர்களது குண நலன்களை அறிந்து, அவர்களிடம் அன்பு பூண்டு ஒழுகுதல் சிறந்த பண்பாகும். தாம் வணங்கும் சிவனடியார் திருப்பெயர்களை தம் மக்களுக்கும், உடைமைகளுக்கும் இட்டு வழங்குதல் அப்பெரியோர் மாட்டு தாம் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதாகும். பெரியோர்களை அதிக நாள் வழிபட்டு வந்தால் என்றோ ஒருநாள் அவர்கள் வெளிப்பட்டு அருளுவர். அடியார் தம்மை வணங்குமுன், தாம் அவரை வணங்குதல் அன்பின் தன்மை. சிவனடியாரை ‘வேறொருவர்’ போன்ற சொற்களால் அலட்சியமாகப் பேசுதல் சிவநிந்தனை. தம் பெருமை பற்றி தாமே அறிவிப்பது கீழோர் தன்மை. தமது சிறுமை பற்றிப் பேசுவது பெரியோர் தன்மை. ஒருவருக்கு ஒரு நல்ல பேறு கிடைத்தால் அது சிவனருளால் கிடைத்தது என்று மகிழ்வது பெரியோரது இயல்பு. அருளாளர்கள், தாங்கள் இறைவனை நோக்கிப் பாடும் பாடல்களில் அடியார்களைச் சிறப்பித்துப் பாடப்பெறுதல் பெரும் பேறாகும். அப்பூதியார் திருநாவுக்கரசரது திருநாமம் ஒன்றினையே உச்சரித்து துதித்த வழியிலே சிவன்கழல் எய்தினார்.

சோழநாட்டிலே காவிரிக்கு வடகரையிலே, திருவையாற்றுக்கு அண்மையில் திங்களூர் என்றொரு செல்வப்பதி உண்டு. அங்கே சிறந்த வேதியர் குலத்திலே சிவனுக்கு அன்பராய், திருநாவுக்கரசரை நேரே கண்டிலர் ஆயினும் அவரைப்பற்றி அறிந்து, அவர்பால் மெய்யடிமை பூண்டு வாழ்ந்து வந்தார். அவர் தம் மக்கள், தண்ணீர்ப்பந்தல், சாலை, குளம் முதலிய அனைத்திற்கும் நாவுக்கரசரின் திருப்பெயரை இட்டு வழங்கிவந்தனர். அந்நாளில் ஒருநாள் அரசு அண்மையில் உள்ள திருப்பழனம் முதலாகிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திங்களூர் வழியாகச் செல்லும்போது அங்கே ஓரிடத்தில், “திருநாவுக்கரசு தண்ணீர்ப்பந்தல்” என்று எழுதியிருப்பதைக் கண்டார். அப்பந்தலுக்கு பெயர் இட்டவர் யார்? என்று கேட்டறிந்து, அவரது திருமனையை அடைந்தார். அப்பூதியடிகளை நோக்கி, “இப்பந்தலுக்கு உமது பெயரைச் சூட்டாது வேறொருவர் பெயரை இட்டது என்னை?” என்று வினவ, அப்பூதிஅடிகள், “சமணர்களும், அவர்தம் அரசனும், அவருக்குச் செய்த கொடிய வினைகளைத் தம் திருத்தொண்டின் உறைப்பினால் வென்று, சிவபரத்துவத்தை நிலைநாட்டியவரையா வேறொருவர் என்றீர்?” என்று வினவ, அரசு, “அச்சிறுமை உடையவன் யான்” என்று கூற, அப்பூதியார் அவரை உடனே வணங்கி, ஆடிப்பாடி அகமிக மகிழ்ந்து, மனைவி மக்களை அழைத்து, அவர்களையும் வணங்கச் செய்து, தம் இல்லத்தில் அமுது கொண்டருளும்படி வேண்டினார். அரசு உடன்பட, அப்பூதியடிகளும், மனைவியாரும் விரைவாக அறுசுவைக் கறிகளோடு அமுதுமாக்கி தூயவருக்குப் படைக்க, தாங்கள் மூத்த புதல்வனாகிய மூத்த திருநாவுக்கரசிடம் வாழைக்குருத்து அரிந்துவர ஏவினார். “நல்ல தாய் தந்தையர் ஏவ இது செய்யப்பெற்றேன்” என்று மகிழ்ச்சி பொங்கத் தன் கருமம் செயும்போது, கொடிய அரவு ஒன்று அவனைத் தீண்டிற்று. விரைவாகத் தாயாரிடம் சென்று வாழைக்குருத்தை வழங்கி உயிர் நீதான். தூயவர் அமுது கொள்ளாரே என்ற அச்சத்தால், அவன் சாவத்தைப் பாயினில் மறைத்து, அடியவரை அழைக்க, அவரும் எழுந்தருளி, அமுது உண்ணமுன் அவர்களுக்குத் திருநீறு வழங்கும்போது, “மற்றவன் எங்கே?” என, பெற்றோர், “அவன் இங்கு உதவான்” என்றனர். அவர்கள் பின்பு வாய்மை உரைக்க, பெரியவர் அவன் உடலை, திருப்பழனத் திருக்கோவிலுக்குக் கொண்டுவரச்செய்து, அங்கே இறைவனை நோக்கி “ஒன்று கொலாம் அவர்” என்ற பதிகத்தைப் பாடி, பிள்ளையை எழுப்பி, அடிகள் மனை சென்று அமுது அருந்தினர். பின்பு திருப்பழனம் சென்று, “சொன்மாலை பயில்கின்ற குயிலினம்” என்றெடுத்துப் பதிகம் பாடி, அதிலே, “அஞ்சிப் போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதிக் குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய்” என்று அப்பூதிஅடிகள் நாயனாரைச் சிறப்பித்தார்.

இங்ஙனம் அரசின் நாமம் ஏத்தி, “எப்பொருளும், நாளும் ஏத்து அவர் பொற்றாளே” என் உணர்ந்து, “இப்பூதி பெற்ற நல்லோரெல்லையில் அன்பால் என்றும் செப்பூதி அங்கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்.” அப்பூதிஅடிகள் நாயனார் இங்ஙனம் வாழ்ந்து, திருத்தில்லை மன்றுளாடும் நற்கழல் நண்ணினார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : திங்களூர்
குருபூசை / திருநாள் : தை – சதயம்

ஒரே பார்வையில் ...
அப்பர் பால் மிகுந்த அன்பு பூண்டவர். தம் பிள்ளை இறந்ததையும் பொருட்படுத்தாது, சவத்தை மறைத்து, அவருக்கு அமுது அளித்தவர்.