25. திருநீலநக்க நாயனார்


மறையவர் முத்தீ வளர்த்தலும், அதனைத் தத்தம் மனைவியாரோடு இருந்தும், மனைவியார் கணவருடன் இருந்தும் செய்தல் குலமரபும், இல்லற தருமமுமாம். சிவனையும், சிவனடியார்களையும் அருச்சிப்பதும், பணிவதும் வேதங்களின் உள்ளுரைப் பொருளாவான. அடியார் பூசையுள் அவரை அமுதூட்டல் சிறப்பான பகுதி. ஆன்மார்தமாய சிவனை திருக்கோயிலில் ஆகம விதிப்படி அருச்சித்தல் மகாசைவருக்கு உரியது. அருச்சனை புரிவோர், சிவபூசனை நிரம்பியும், அன்பினால் திருக்கோயில் வலம் வந்தபின் ஓரிடத்தில் இருந்து திருவைந்தெழுத்து ஓதுதலும் முறையாம். இறைவருடைய திருமேனி அநுசிதமடைந்தால் அதனைத் தாயன்போடு விலக்குதல் அன்பின் செய்கை.

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், மனைவியாரும் பிள்ளையாருடன் சாத்தமங்கை என்ற தலம் சென்றபோது, அவர்களை எதிர்கொண்டழைத்தும், அழைத்து வந்து அமுதூட்டியும், பிள்ளையார் விரும்பியபடி அவ்விருவரும் தங்குவதற்கு தம் வீட்டு வேதிகையின் பாங்கர் இடம் கொடுத்தும், வேதிகையில் இருந்த செந்நீ வழல் சுழித்து எழுந்து திருவருட் பெருமையை விளக்கியதும் சிவனடியாரின் அன்பு பற்றி எழுந்த அருட் செயல்களாம். அடியார்களது அன்பின் பெருமை அருளாளர்களின் திருப்பாடல்களில் வைத்துப் பாராட்டப்படும் தன்மையையும், பெருமையையும் பெறுவன. “நிறையினார் நீலநக்கன் நெடுமா நகரென்று தொண்டர் அறையுமூர் சாத்தமங்கை” (III-58-11) என்று பிள்ளையார் நாயனாரையும், தலத்தையும் சிறப்பித்தார். இங்ஙனம் வாழ்ந்து, ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தில் சேவித்து, உடனாக சிவனடி சேர்ந்தவர்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே காவிரியின் தென்கரையிலே,சாத்தமங்கை என்ற ஒரு பழம்பதி உண்டு. அங்கே மறையவர் அதிகமாக வாழ்வர். “ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு” என்ற குறிக்கோளோடு அம்மறையவர் திலகமாய் முத்தீ வளர்த்தல் முதலிய குலவொழுக்கம் தவறாது வாழ்ந்தவர் திருநீலநக்கர் என்பார். அவர் அவ்வூரிலுள்ள அயவந்தி என்னும் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவரை ஆகம விதிப்படி வணங்கி வந்தவர். ஒருநாள் வழக்கம்போலத் தம் மனைவியோடு தேவையான திரவியங்களைக் கொண்டுபோய் சிவனுக்குப் பூசனை செய்தார். பூசனை முடியாதவராகி, திருவீதிவலம் வந்து திருவைந்தெழுத்து ஓதிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சுதைச்சிலந்தி வழுவி இறைவரது திருமேனியில் விழ, அயலே நின்ற மனைவியார் அதைக் கண்டு, மனம் பதைபதைத்து, அச்சிலந்தியை வாயினால் ஊதித்துமித்து விலக்கினார். அச்செயலைக் கண்ட அந்தணர், மனைவியின் செயலுக்குக் கோபம் கொண்டு, “பொறியிலாய்! நீ செய்தது என்னை? பூசையில் இது அநுசிதமாகும். ஈது செய்தனை ஆதலின் யான் உன்னைத் துறந்தனன்” என்று கூறி, தம் வீடு சென்று தூங்கினார். மறையவரால் துறக்கப்பட்ட நிலையில் மனைவியார் கோயிலிலேயே தூங்கினார். அன்றிரவு சிவபெருமான் அந்தணர் கனவில் தோன்றி, “உன் மனைவி ஊதித்துமித்த இடம் நீங்கலாக மறுபுறம் எங்கணும் சிலந்தியின் கொப்புளம் உண்டு; பார்” என்றார். இறைவர் திருவருளுக்கு இரங்கி, மனைவியாரையும் அழைத்துக்கொண்டு தம்மனை ஏகினார்.

இங்ஙனம் வாழும் நாள்களிலே ஒருநாள் ஆளுடைய பிள்ளையார் சுவாமி தரிசனத்துக்காக அயவந்தி எழுந்தருளுகிறார் என்பதைக் கேள்வியுற்று, பிள்ளையாரையும், அவருடன் வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், மனைவியார் மதங்கசூளாமணியாரையும், மற்றும் பரிசனர்களையும் நேர்எதிர் கொண்டு, வணங்கி, அழைத்துக் கோயிலுக்குள் சென்று, சுவாமி தரிசனம் செய்வித்து, தம்மனையில் திருவமுது செய்வித்தார். பின் நீலநக்கர் பிள்ளையாரை வணங்கி, அன்றிரவும் தம் இல்லத்திலேயே தங்கிடும் என்று விண்ணப்பம் செய்தார். அதற்கு இசைந்த சம்பந்தப்பெருமான், நக்கரை நோக்கி, யாழ்பாணருக்கும், விறலியாருக்கும் இரவு பள்ளிகொள்ள ஓரிடம் வேண்டினார். பிள்ளையாருடன் சென்ற திருக்கூட்டத்தில் விறலியார் ஒருவரே பெண் ஆவார். அப்பொழுது அதற்கு இசைந்த நீலநக்கர் தம்மனைவியின் மிகப்புனிதமான, தினமும் முத்தீ வளர்க்கும் வேதிகையின் பாங்கர் ஓர் நல்லிடம் வகுத்துக் கொடுத்தார். அவர் செயலைப் பாராட்டியவாறு அவ்வேதியில் உள்ள அறாத செந்நீ கொழுந்துவிட்டு வலஞ்சுழித்து எழுந்தது. அடுத்த நாள் பிள்ளையார் அயவந்தி சென்று பதிகம் பாடித் துதித்தார். அப்பதிகத்திலே பிள்ளையார், “நிறையினார் நீலநக்கன் நெடுமா நகரென்று தொண்டர் அறையுமூர் சாத்தமங்கை” (III-58-11) என்று நாயனாரையும், நகரத்தையும் சிறப்பித்தார்.

திருநீலநக்க நாயனாரும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், ஒருவர் ஒருவர் கொண்ட பேரன்பினால், நீலநக்கர் திருநல்லூர்ப்பெருமணத்தில் நிகழ்ந்த பிள்ளையாரின் திருமணத்தைச் சேவித்து, மனவியாரோடு அங்கு தோன்றிய சோதியில் கலந்து வீடு பெற்றார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : சாத்தமங்கை
குருபூசை / திருநாள் : வைகாசி - மூலம்

ஒரே பார்வையில் ...
இவர் சிவபூசை செய்யும்போது, சிவலிங்கத்தில் ஒரு சிலந்தி பட, அதை உறுதுணையாய் இருந்த அவர் மனைவி, வாயினால் அதனைத் துமிக்க, அவர் மனைவியைப் பார்த்து, “பொறியிலாய். துமித்து அநுசிதம்” என்று கோபித்தார். அன்றிரவு சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, “அன்போடு செய்யும் எதுவும் அநுசிதம் அன்று” எனக் கூறச் செய்தவர். சம்பந்தர் வேண்டுகோட்படி, பாணர்க்கும், விறலியார்க்கும் வேதிகையின் அருகே இடம் வழங்கியவர். சம்பந்தர் திருமணத்தின்போது, திருப்பெருமண நல்லூரிலே, அவரது திருமணத்தை நடத்தி, அங்கு தோன்றிய சோதியுள் புகுந்தனர்.