26. நமிநந்தியடிகள் நாயனார்


திருவாரூரிலே புற்றிடம் கொண்டாரையும், தியாகேசரையும் நியமமாக வணங்கிவருதல் பெரும் புண்ணியம். சிவபுண்ணியம் செய்தற்கு தமக்கு பொருள் முட்டுப்பாடு ஏற்பட்டால், பிறர்பால் இரந்து பொருள்பெற்று அச்சிவபுண்ணியத்தைச் செய்தல் இழுக்கன்று. திருக்கோயிலில் விளக்கிடுதல் பெரும் சிவபுண்ணியமாம் (எ-டு : கலியநாயனார், கணம்புல்லநாயனார்). இறைவன் திருவிழாக்களைக் கண்டார்தல் உலக நன்மைக்கேயாம். இத்திருவெழுசிக்களில் பலகுலத்தினரோடு கலத்தல், இழிவு தொடக்குதற்கு ஏதுவாகும். எனினும் திருவாரூர்ப் பிறந்தார் இதற்கு விதிவிலக்காவர். உறக்கம் வந்தபோது ஒருவர் இறைவன் திருவடிகளை மறவாது தொழுது வணங்கித் துயிலவேண்டும். திருநாவுக்கரசு நாயனார் முதலிய அருளாளர் திருவாக்கில் ஒருவர் பாராட்டப்படுவது பெரும் பேறு. இவற்றை எல்லாம் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் நமிநந்தியடிகள் நாயனார்.

                  *                                                              *                                                              *

ஏமாப்பேரூர் என்பது சோழநாட்டின் தென்கரையில் வளப்பம் மிக்கு விளங்கிய ஒரு சிறந்த ஊர். அங்கே வாழ்ந்த அந்தணர்கள் திருநீற்றுச் சார்புடையவராய், சைவ நெறியில் ஒழுக்கம் தவறாது வாழ்ந்தவர்கள். அவர்களுள்ளே சிறப்புப் பொருந்தி வாழ்ந்தவர் நமிநந்தி என்பவர். அவர் இரவும் பகலும் சிவபெருமானையே வழிபாடு செய்வதில் இன்பம் காண்பவர். ஒவ்வொருநாளும் திருவாரூருக்கு சென்று, புற்றிடம் கொண்டாரையும், வீதிவிடங்கரையும் வழிபடும் நியமம் கொண்டிருந்தார். ஒருநாள் இறைவரின் திருவீதி எழுச்சியை சேவித்துவிட்டு வெளியே வரும்போது, திருவாரூர் அரநெறியிற் சென்று அங்கே எண்ணில் தீபம் ஏற்ற விரும்பினார். தம்முடைய ஏமாப்பேரூர் சென்று நெய் கொண்டுவரப் பொழுது சென்றுவிடும், ஆதலின் கோயிலுக்கு அடுத்ததொரு மனைக்குச் சென்று, நெய் உதவுமாறு யாசித்தார். அங்கிருந்தவர்கள் சமணர்கள். வெறுப்புக் கொண்ட அவர்கள், “தீபம் ஏந்திய உங்கள் கடவுளுக்கு விளக்கு மிகை. வேண்டுவீராயின் குளத்தில் இருந்து நீர்மொண்டு விளக்கேற்றும்” என்றனர். நமிநந்தியார் மனம் மிக நொந்து, திருக்கோயிலின் முன் சென்று, இறைவனிடம் முறையிட்டார். “கவலை ஒழிக. அருகேயுள்ள குளத்தில் நீரைக்கொண்டு தீபம் ஏற்றுக” என்ற ஆணை பிறந்தது. நமிநந்தி அங்கனே செய்து, கோயிலில் உள்ள விளக்குகள் அனைத்தும் விடியும் வரையும் சோதியாய் சுடர்விட்டு ஓங்கி எரிய நீர் வார்த்தார். இவருடைய இத்தொண்டை திருநாவுக்கரசு நாயனார், “ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நமிநந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடு அறியுமன்றே” என்ற திருவிருத்தத்தால் (IV-102-2) சிறப்பித்தார். சோழஅரசர் வீதிவிடங்கப் பெருமானுக்கு பங்குனி உத்தரத் திருநாள் சிறப்பும் செய்தபடி அடிகள் நன்மை பெருக தொழுதனர்.

ஒருநாள் தியாகேசர் திருவாரூருக்கு அருகேயுள்ள திருமணலிக்கு எழுந்தருள, சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் சேவிக்க, அவர்களுடன் நமிநந்தியும் சேவித்தார். அவர் மாலைக்காலத்தும் இறைவரது திருக்கோயிலுக்கு மீண்டும் சென்று தொழுது, தம் ஊராகிய மணலிக்கு வந்து, மனையினுள் புகாது, புறக்கடையில் துயில்வாரை, மனைவியர் வந்து, “சிவபூசை முடித்து தீவேட்டு அமுது செய்து, பள்ளி கொள்வீராக” என்றார். “திருமணலிக்கு எழுச்சி சேவிக்க எல்லோருடன் கலந்து சென்றமையால் எனக்கு இழிவு தொடக்கிற்று. ஆகவே என்னைத் தூய்மை செய்துதான் உள்ளே செல்லவேண்டும். அதற்குத் தண்ணீர் முதலியன கொண்டுவா” எனப்பணிக்க, மனைவியாரும் அவற்றை சித்தம் செய்ய உள்ளே சென்றுவிட்டார். அச்சிறிது வேளை நமிநந்தி அயர்ந்துவிட, தியாகேசர் அவருடைய கனவில் தோன்றி, “திருவாரூர் பிறந்தார்கள் எல்லாம் நமது கணங்களேயான பரிவு காண்பாய்” என்றார். அடுத்தநாள் சிவபூசை முதலியனவற்றை முடித்துக்கொண்டு, நியதிப்படி திருவாரூர் சேர்ந்தபோது, அங்கு பிறந்து வாழ்வோரெல்லாம் சிவபெருமானது திருவடிவே உடையவர்களாய் இருப்பக் கண்டார். பின் அவர் திருவாரூருக்குக் குடிபுகுந்திருந்து, திருத்தொண்டுகள் செய்து, “ஆராய்ந்தடித் தொண்டராணிப் பொன்” என்று தொடங்கி, “நமிநந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடு அறியுமன்றே” என்று திருநாவுக்கரசு நாயனார், தாம் பாடிய திருவிருத்தத்தில் சிறப்பிக்கப் பெற்றார். இங்ஙனம் பலகாலம் பல திருத்தொண்டுகள் செய்து சிவன்சேவடி அடைந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : ஏமாப்பேறூர்
குருபூசை / திருநாள் : வைகாசி - பூரம்

ஒரே பார்வையில் ...
தினமும் திருவாரூர் பூங்கோயிலிலே இறைவன் திருமுன்னில் திருவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். ஒருநாள் விளக்கெரிக்க நெய் இல்லது போக, அயலிலே இருந்தவர்கள் சமணர்கள் எனத் தெரியாது, அவர்களிடம் சென்று கேட்க, அவர்கள் மறுத்துவிட்டார்கள். சிவன் அருளால், நாயனார் கோயில் குளத்தில் இருந்து நீர் மொண்டு வந்து, விடியும் அளவும் எல்லா விளக்குகளை ஏற்றினார். வேறொரு நாள், திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் திருவீதி எழுச்சியைச் சேவித்தபோது, பல சாதியினரோடும் கலந்தமையைக் குற்றம் என நினைத்துத் தூங்கியபோது, சிவன் கனவின் தோன்றிக் கூறியபடி, திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம் சிவசாரூப்பியராகக் கண்டு தெளிந்தார்.