27. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்


சோழநாட்டிலே சிதம்பரத்துக்குத் தெற்கே சுமார் 20 கல் தொலைவில் சீகாழி என்னும் பழம்பெரும் தலமொன்று உண்டு. அங்கே மறையவர் குடியிலே சிவபாதவிருதையர் என்பவர், கற்பில் சிறந்த பகவதி அம்மையாரோடு இல்லறத்தில் வழுவாது, சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று வீபூதிமேல் வைத்த பேரன்பைப் பரிபாலிக்கும் தன்மை உடையராய் வாழ்ந்துவந்தார். அப்பொழுது தமிழ்நாடு எங்கணும் சமணமும், பௌத்தமும் மிக விரைவாகப் பரவிவரவும், சற்சமயமாகிய நம் சைவம் அருகிவருவதையும் கண்டு மனம் வருந்தி, பரசமயங்களை ஒழிக்கவும், சுயசமயத்தைப் பரப்பவும் ஒரு சற்புத்திரரை வேண்டித் தோணியப்பரையும், பெரியநாயகியாரையும் நோக்கித் தவம் கிடந்தனர். அவர்கள் வேண்டியபடி இறையருளால் பிள்ளையார் திருஅவதாரம் செய்தார். மூன்று வயது எய்தியதும் ஒருநாள் தந்தையார் நீராடுவதற்காக திருக்கோயினுள்ளே உள்ள பிரமதீர்த்தத் திருக்குளத்துக்குச் செல்லும்போது, பிள்ளையாரும் அடம்பிடித்து, அழுதுகொண்டு உடன் சென்றார். அவரையும் அழைத்துச்சென்ற சிவபாதவிருதையர், பிள்ளையாரைத் திருக்குளத்தருகே இருத்திவிட்டு நீராடுவதற்காக நீரினுள்ளே மூழ்கினார். அப்போது தந்தையாரைக் காணாது பிள்ளையார் திருத்தோணிபுரச் சிகரத்தை நோக்கி, “அம்மே, அப்பா” என்றழைத்தார். சிவபெருமான் குழந்தைக்கு அருள்புரிய திருவுளங் கொண்டு, பார்வதி தேவியாரோடு இடபவாகனத்தில் தீர்த்தக்கரையை அடைந்து, உமாதேவியாரை நோக்கி, “உன் திருமுலைப்பாலை பொன்வள்ளத்தில் ஏந்தி இவனுக்கு ஊட்டு” என, தேவியார் திருமுலைப் பாலோடு சிவஞானத்தையும் குழைத்து பொன்வள்ளத்தில் ஏந்தி ஊட்டினார். இங்ஙனம் சிவன், சக்தி ஆகிய இருவராலும் ஆளப்பட்டமையின் ஆளுடைய பிள்ளையார் என்றும், சிவஞானம் ஊட்டப்பெற்றமையால் சிவஞானசம்பந்தமூர்த்தி என்றும் பெயருடையனாயினார்.

நீராடச்சென்ற தந்தையார் கரையேறிய போது, பிள்ளையாரின் கடைவாயிலில் பால் வடிந்திருப்பதைக் கண்டு, “நீ யார் தந்த பாலை உண்டனை?” என்று கோபிக்க, பிள்ளையார் வானத்திலே தேவியரோடு இடபாரூடராய்க் காட்சிகொடுத்த இறைவரை, “தோடுடைய செவியன்” என்றெடுத்து, சுட்டிக்காண்பித்துப் பாடினார். இங்ஙனம் சிவபெருமானும், உமாதேவியாரும் இடபத்திலே வீற்றிருந்து அருளும் காட்சியைப் பிள்ளையார் தாமே நேரே தரிசித்தும், தந்தையார் முதலிய பிறரையும் தரிசிக்கச் செய்தும் நின்றமையால் அவர் சைவசமயத்துக்கு முதற்குரவராகி, நாயனார் எனவும் ஆனார். இந்த அற்புதத்தைக் கண்டு திருத்தந்தையார் வியப்ப, ஏனைய மறையவர்கள் பிள்ளையாரிடம் வந்து அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள். அடுத்தநாள் காலையிலே பிள்ளையார் அண்மையிலுள்ள திருக்கோலக்காவுக்குச் சென்றபோது, அங்கே திருக்கோயிலின் முன்னுள்ள மணிநீர் வாவியிலே பெண்கள் நீராடுவதைக் கண்டு, “மடையில் வாளை” என்று எடுத்துத் தம் கைகளினால் ஓத்தறுத்துப் பாடினார். இதனைக் கண்ட கோலக்கா இறைவராகிய சப்தபுரிநாதர், பிள்ளையார் கைகளில் செம்பொற்றாளம் வந்துசேர அருளினார். தாளம் செம்பொற்றாளம் ஆதலினாலே நல்லோசை இன்மையால், அம்பாள் அதற்கு ஓசை கொடுத்து, ஓசை கொடுத்த நாயகி எனப்பெயர் பெற்றார். அங்கிருந்து சீகாழிக்குத் திரும்பிச் சென்று, பின் அவருடைய தாயாரின் பிறந்த தலமாகிய திருநனிப்பள்ளித் தலத்தைத் தரிசித்துக்கொண்டு சீகாழி திரும்பினார். அப்போது அவரைத் தரிசிக்கச் சென்ற திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரையும், மனைவி இசைப்பாட்டு மதங்கசூளாமணியாரையும் இணைத்து, நல்விருந்து அளித்து, அவர்களை அன்புடன் அமர்த்திக் கொண்டார். சிலநாள் கழிந்தபின் திருத்தில்லையை வணங்க விரும்பி, அங்குச்சென்று, “கற்றாங்கெரி” என்றெடுத்துத் தில்லைவாழ் அந்தணர்களைச் சிறப்பித்து, யாழ்ப்பாணர் பிறந்த திருவூராகிய திருஎருக்கத்தம்புலியூர் வழியாக திருவரத்துறைக்குக் கால்நடையாகச் சென்றார். அவரது திருப்பாத வருத்தத்தை நீக்க, முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னங்களும் அரத்துறை இறைவரால் வழங்கப் பெற்றனர். அங்கிருந்து காவிரியின் வடகரை வழியே சென்று, திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்தார். அந்த ஊரை ஆண்டுவந்த கொல்லிமழவன் என்பானுடைய புதல்வி முயலகலனால் பீடிக்கப்பட்டு வருந்துவதை அறிந்த பிள்ளை, “துணிவளர்” என்னும் பதிகம் பாட, அவள் நோய் நீங்கப்பெற்றாள். அங்கிருந்து கொங்கு தேசம் சென்று, கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்தார். அவர் பரிசனங்களும், மக்களும் நளிர்சுரத்தினால் வருந்துவதை உணர்ந்து, “அவ்வினைக் கிவ்வினை” என்ற பதிகம் பாடி அந்நோயை முற்றும் ஒழித்தார். பின் அங்கிருந்து சோணாட்டுப் பட்டீச்சுரம் அடைந்தார். வெய்யிலின் கொடுமையை நீக்க சிவனார் ஏவலினால் ஒரு முத்துப்பந்தர் அருளப்பெற்றார். அங்கிருந்து திருவாவடுதுறையை அடைந்து இருக்கையில், தகப்பனார் தம் யாகத்துக்குப் பொருள் வேண்டுமென விண்ணப்பிக்க, பிள்ளையார், “இடரினும் தளரினும்” என்னும் பதிகம் பாடி, உலவாக்கிழி பெற்றுத் தந்தையாரிடம் கொடுத்து, சீகாழிக்கு அனுப்பிவைத்தார். அங்கிருந்து பிள்ளையார் திருமருகல் சென்றடைந்தார். அக்காலத்தில் ஒருவணிகன் ஒருகன்னியை உடன்கொண்டு கோயிலுக்குப் புறத்திலே ஒருமடத்திலே நித்திரை செய்யும்போது, பாம்பு தீண்டி மாண்டான். அதுகண்ட அக்கன்னி வீழ்ந்து புரண்டு அழுதாள். அவளது அழுகுரல் கேட்டு, நிகழ்ந்தவற்றை அங்குள்ளோரிடம் கேட்டு அறிந்து, அவளுக்கு அபயம் அளிக்கக் கருதி, “சடையா யெனுமால்” என்னும் திருப்பதிகம் பாட, வணிகன் உயிர்பெற்று எழுந்தான். பிள்ளையார் அவ்விருவரையும் அங்கே மணம்புணரும்படி செய்தார்.

சிலநாள் கழியப் பிள்ளையார் திருப்புகலூர் சென்று எழுந்தருளி, சுவாமி தரிசனம் செய்துகொண்டிருக்கும் வேளையில், ஆளுடைய அரசு அங்கு எழுந்தருளினார். இருபெரு அருளாளர்களும் ஒருவரை ஒருவர் வணங்கி முருகநாயனார் திருமடத்தில் அவர் இவர்களுக்கு அமுதளிக்க மகிழ்ந்திருந்தனர். அங்கே மக்கள் பசி பஞ்சத்தினால் வாடுவதைக் கண்ட இருவரும் கவலையுற்றனர். அவர்கள் கவலைதீர சிவபெருமான் அவர்களுக்கு நாள்தோறும் ஒவ்வொரு காசு நல்கினார். அதனைக்கொண்டு அவர்கள் பசிதீர்த்து வந்தனர். அங்கிருந்து இருவரும் திருமறைக்காடு சென்று சுவாமி தரிசனம் செய்திருக்கும் வேளையில், சைவசமயத்தை விட்டு ஆருகத சமயத்தைத் தழுவிநின்ற பாண்டிய மன்னனை மீண்டும் சைவசமயத்தைத் தழுவச்செய்ய, பாண்டிமாதேவியாரும், அமைச்சரும் அவரை அழைத்துவரப் பரிசனங்களை அனுப்பினர். உடனிருந்த அரசுகள் தடுப்பவும் இசையாது, “வேயுறு தோளி” என்று பதிகத்தைப் படித்து அப்பரை அமைதிபெறச் செய்து, திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டு புறப்பட்டார். பிள்ளையார் மதுரையை அடைந்திருக்க, அவரது மடத்துக்குத் தீ வைத்தார்கள். பின் பாண்டியனுக்கு உண்டாய வெப்பு நோயைத் தீர்க்க முடியாது தவிக்க, அரசன் சம்பந்தரை அழைக்க, அவர், “மந்திரமாவது நீறு” என்றெடுத்துப் பாடியும், திருநீறு தடவுதலும் செய்ய வெப்புநோய் நீங்கிற்று. பின் சமணர் பிள்ளையாரோடு அனல்வாதம், புனல்வாதம் செய்து அவற்றிலும் தோற்றனர். பாண்டியனுடைய கூனும் அம்புயமலராள் மார்பன் அநபாயன் என்னும் சீர்த்திச் “செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது”.

சிலநாளாயின் பின் பிள்ளையார் இராமேசுவரம் முதலாய பாண்டிநாட்டுத் தலங்களையும், திருக்கேதீச்சரம், திருகோணமலை முதலிய ஈழநாட்டுத் தலங்களையும் தரிசித்துக்கொண்டு, சோழநாடு சென்றாரர். அங்கே முள்ளிவாயக்கரையை அடைந்தார். ஆற்றுப்பெருக்கினால் ஓடத்தைக் கரையிலே கட்டிவிட்டு ஓடக்காரர்கள் போய்விட்டார்கள். பிள்ளையார் தம் அடியார்களை ஓடத்தில் ஏற்றித் தாமும் ஏறி, “கொட்டமேகமழும்” என்னும் பதிகம்பாட, ஓடம் மறுகரையை அடைந்தது. அங்குள்ள திருக்கொள்ளம்புதூர் திருக்கோயிலை அடைந்து, சிலநாள் தங்கிப் பின் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அவர் செல்லும் வழியில் போதிமங்கையில் புத்தநந்தி என்பவரோடு வாது செய்து, தொண்டைநாட்டை நோக்கி யாத்திரை புறப்பட்டார். திருவோத்தூரில் சமணர் செய்த இகழ்ச்சிக் குறிப்பை அழிக்க ஆண்பனைகளைப் பெண்பனைகள் ஆக்கினார். திருவோத்தூரில் இருந்து காஞ்சி, காளத்தி முதலிய தலங்களையும், திருக்கேதாரம் முதலிய வடநாட்டுத் தலங்களையும் அங்கிருந்தே வணங்கிக் கொண்டு, தொண்டைநாட்டுத் திருவொற்றியூர் என்னும் கடற்கரைத் தலத்தை வந்தடைந்தார். திருவொற்றியூருக்கு நேர் தெற்கே கடற்கரையோரமாகவுள்ள திருமயிலாப்பூரிலே சிவநேசச் செட்டியார் ஒருபெரு வணிகர் பிள்ளையார் பால் மிக்க அன்புபூண்டு வாழ்ந்தார். தாம் தவம்செய்து அரிதிற் பெற்று, சீரோடும் சிறப்போடும் வளர்த்துவந்த பூம்பாவை என்னும் மகவை பாம்பு தீண்டி இறந்தனள். அவள்தம் என்பினை ஒரு குடைத்தில் இட்டு வைத்திருந்தனர். பிள்ளையார் திருவொற்றியூரில் இருந்து திருமயிலைக்கு எழுந்தருளுகிறார் என்பதை அறிந்த சிவநேசர், வீதிகள் எல்லாம் அலங்கரித்து அவரை எதிர்கொண்டார். தாம் வைத்திருந்த எலும்புநிறை குடத்தை அவர்முன் வைத்தார் சிவநேசர். அப்போ நாயனார், “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாட, பூம்பாவை அவள் உயிர் பெற்றெழுந்தாள். அவளைத் திருமணம் செய்யும்படி வேண்ட, பிள்ளையார், “அவள் என் மகள்” என்றார். சிலநாளாயின் பின் பிள்ளையார் திருமயிலையை விட்டகன்று திருவான்மியூர், திருக்கழுக்குன்றம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருத்தில்லை அடைந்தார். அங்கே தம் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து செல்ல, தில்லைவாழ் அந்தணர் எதிர்கொண்டனர். அங்கு பேரம்பலம், திருச்சிற்றம்பலம் முதலியவற்றை வணங்கியிருக்கும்போது, தந்தையாரும், பிற அந்தணரும் திருத்தில்லை சென்றடைந்து, பின் அனைவரும் சீகாழி சென்றடைந்தனர். அவர்கள் அப்போது பிள்ளையாருக்குத் திருக்கலியாணம் செய்வதற்குரிய பருவம் எய்தியதால், பிள்ளையாரின் இசைவுடன் அண்மையிலுள்ள திருநல்லூர்ப் பெருமணத்தில் இருக்கின்ற நம்பாண்டார் நம்பியின் புதல்வியே தகுதியுடையவர் என்றெண்ணினர். பிள்ளையார் அதற்கு இசைந்தபின் திருமணச் சடங்குக்கு வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. திருநீலநக்கர் வேதவிதிப்படி எரியோம்பிச் சடங்குகள் செய்ய, முத்தமிழ் விரகர் நேரிழைகைப்பிடித்து, “இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே! அந்தமில் சிவன்தாள் சேர்வன்” என்றார். அப்போது “கல்லூர்ப் பெருமணம் வேண்ட” என்று பதிகம் பாட, இறைவர், “நீவிர் அனைவீரும் எம்பாற் சோதியினுள் வந்தெய்தும்” என்று கூறி, ஒரு சோதியைக் காட்டி, அதிலே வாயிலையும் வகுத்துக் காட்டினார். பிள்ளையார் “காதலாகிக் கசிந்து” என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அருளி, “நீவிர் அனைவீரும் இச்சோதியுள் பிரவேசியுங்கள்” என்றுகூறி, எல்லோரையும் புகச்செய்தபின், தாமும் காதலியைக் கைப்பற்றி, சிவசாயுச்சியம் அடைந்தனர்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : சீகாழி
குருபூசை / திருநாள் : வைகாசி - மூலம்

ஒரே பார்வையில் ...
சிவபாதவிருதையரும், பகவதியம்மையாரும் செய்த தவப் பயனாய், வைதிக சமயத்தை விளக்கவும், வளர்க்கவும், ஆருகதம் முதலிய புறப்புறச் சமயங்களை அழிக்கவும் அவதரித்தவர். உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்று, அற்புதங்கள் பல ஆற்றி, பதிகள் பல தரிசித்து, பதிகங்கள் பல பாடி, தமது திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் முத்தி கொடுத்து, தாமும் முத்தி அடைந்தவர்.