3. இளையான் குடிமாற நாயனார்


ஏரின் செல்வம், எல்லையில்லாத வளங்களையும், சிறப்புக்களையும் தரும். புண்ணியங்கள் செய்யவும் உதவும். சிவசிந்தனையோடு, சிவனடியார் பூசையும், அவர்களுக்கு பணிவன்போடு அமுதூட்டல் சிற்ற புண்ணியம். செல்வம் உள்ள காலத்து சிவபூசையும், சிவனடியார் பூசையும் பேணுதல் போலவே, வறுமை வந்துற்ற காலத்தும் அவை தளராது போற்றப் படவேண்டும். தமக்கு எவ்வளவு பெரிய இடர்களும், துன்பங்களும் வந்த போதிலும், சிவபெருமானிடத்திலும், அடியாரிடத்திலும் வைத்த அன்பில் சிறிதும் குறைவு படாது ஒழுகுவர். சிவனடியார் பூசை இவ்வுலகத்திலே எல்லாச் செல்வங்களையும் தரும். சிவனடியார் வேடங்களை சிவன் எனவேண்டும். இளையான்குடி மாறர் வரலாறு தரும் குறிக்கோள் – வறுமையில் செம்மையாய், மாசற்றதாய், தூயதாய், மனம் ஒத்ததாய் வாழும் இல்வாழ்க்கை நிகழவேண்டும் என்பதும், தமக்கே உணவு இல்லாதிருந்த நிலையிலே, பெருமழையிலும், பேர் இருளிலும், பாதி இரவிலும், தங்கட் சென்ற சிவனடியாரை அமுது ஊட்டி, பேறு பெற்றார்கள் என்பதும் தேற்றம்.

                  *                                                              *                                                              *

பாண்டி நாட்டிலே, இளையான் குடியிலே மாறன் என்றொருவர் வாய்மையில் நீடிய சூத்திர நற்குலத்திலே பிறந்து, சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்து விளங்கினார். உளவுத் தொழிலால் கிடைத்த செல்வத்தை சிவனடியார்களுக்கு மாகேச பூசையில் செலவிட்டு மகிழ்ந்து வந்தார். செல்வம் நிறைந்த காலத்திலே அன்றி, குறைந்த காலத்தும் மாறனார் இந்த சிவதொண்டை செய்ய வல்லவர் என்பதை உலகுக்கு தெரியப்படுத்த சிவபெருமான் திருவுளம் கொண்டார். வளம் குன்றியும், மனம் குன்றுதல் இன்றி, கடன் பட்டும் அத்திருத்தொண்டை செய்து வந்தார். ஒருநாள் ஒரு சிவனடியார் இவர் இல்லத்துக்கு ஏகினர். அது கடும் மாரிகாலம். நேரம் நடுநிசி. நள்ளிரவில் பெருமழையின் நடுவில் கதவைத் தட்டினார். பகல் முழுதும், இரவும் உண்ண உணவு இன்றி, பசியால் வருந்தி, உறக்கம் இன்றி, ஆதரவு எதுவும் இல்லாமல் மாறனாரும், மனைவியாரும் வருந்திக்கொண்டிருந்த சமயத்தில், அடைபட்டிருந்த மனைவாயிலில் யாரோ தட்டும் சத்தம் கேட்டு, வாயிலைத் திறந்தனர். மாறனார் அந்நேரத்திலும்கூட, விருந்தினரை அழைத்து, நனைந்த திருமேனியில் இருந்த ஈரத்தைப் போக்கி, அமரச் செய்தபின், உணவு ஊட்ட எண்ணினார். மனைவியாரை நோக்கி, “நமக்கோ உணவில்லை. எனினும் அடியவர், தள்ளொணா பசியோடு, விருந்தாக வந்திருக்கிறார். என் செய்யலாம்?” என்றார். பகலில் நெல் முளைகளை வாரிக்கொண்டு வந்தால், அதனை வறுத்து அரிசியாக்கி, அமுது செய்து அளிக்கலாம் என்றார் மாறனார் மனைவியார். மாறனார் பெய்யும் மழையினுடு அவ்வண்ணமே செய்தார். “எரிக்க விறகு இல்லையே” என்று மனைவி கவலையுற, தலைவர் வீட்டுக் கூரையின் அலக்குகளை அறுத்து வீழ்த்தினார். இனி, கறி அமுதுக்கு யாது செய்வோம் என மாறனார், வீட்டுக் கொல்லைப் புறத்தில் வளர்ந்திருந்த புன்செய்ப் பயிர்களை (பல்வகை கீரை, முதலியன) வேரோடு பிடுங்கிக் கொணர, மனைவியார், தன் கைவினைத் திறத்தாலும், அட்டில் தொழில் வன்மையாலும் பலவகை கறி சமைத்தார்.

அமுது தயார் ஆனதும், மாறனார், தூங்குவார் போன்று படுத்திருந்த சிவனடியாரிடம் சென்று, துயில் உணர்த்த முயலும்போது, அவர் மறைந்தருளினார். அவ்விடத்தில் ஒரு சோதி தோன்றிற்று. அதனைக் கண்ணுற்ற நாயனாரும், மனைவியாரும் திகைத்து, வணகி நிற்க, சிவபெருமான், உமாதேவியாருடன், விடைமேல் இருந்து காட்சி கொடுத்து, “அன்பனே, அடியவர் பூசை செய்த நீ, உன் மனைவியோடு எம் உலகம் சேர்ந்திருப்பாயாக” என்று அருள் பாலித்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : பாண்டிநாடு
ஊர் : இளையான்குடி
குருபூசை / திருநாள் : ஆவணி - மகம்

ஒரே பார்வையில் ...
இளையான்குடியில் மாறனார் என்பவர் அடியார்க்கு அமுது அளித்துப் போற்றியவர். ஒருநாள் இரவு பெரும் மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில், சிவனடியார் ஒருவர் பசித்து, மாறனார் வீடு ஏகினார். அவர் பசி கண்டு, இரங்கிய மாறனாரும், மனைவியாரும் செய்வது அறியாது, அலமந்து, பின் தெளிந்து, அன்று பகலில் வயலில் விதைத்த நெல் முளைகளை வாரிக் கொணர்ந்து, வீட்டுக் கூரையில் உள்ள அலக்குகளை அறுத்தெடுத்து, நெருப்பு உண்டாக்கி, ஈரம் போக, வறுத்துக் குற்றி, அரிசியாக்கி, கொல்லையில் விளைந்த குறும்பயிர்களைக் கொய்து கொணர்ந்து, நல்லடிசிலாக்கி, அடியவரின் பசி தீர்த்து, சிவனடி அடைந்தவர்கள்.