33. சாக்கிய நாயனார்


“எந்நிலையில் நின்றாலும், எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன் தாள் மறவாமை பொருள்” என்றும், “ஈறில் சிவநன்னெறியே பொருளாவது” என்று உணர்பவர், என்றும் மறவாது நிலைநிற்பவர், பரமர் அருளே சிவலோகம் சேர்வர் என்பதை வாழ்ந்து காட்டி நிறுவியவர் சாக்கிய நாயனார் என்பவர். மறு சமயமாகிய பௌத்த சமயத்தில் இருந்த ஒருவர், சைவசமயத்தைத் தழுவினார் என்றால், நாம் அதிசயிக்கப்பட வேண்டியதாகும்.

                  *                                                              *                                                              *

தொண்டை நாட்டிலே காஞ்சிபுரம் என்னும் பழம் பெரும் நகருக்கு அருகே உள்ள திருச்சங்கமங்கை என்னும் தலத்திலே, பிறவியிலே பௌத்த சமயத்தவராயிருந்த சாக்கியர் என்பவர் வாழ்ந்து வந்தார். வேளாள அவர், பல் உயிர்க்கும் அருள் உடையராய், “இப்பிறப்பு இன்னும் நீண்டு செல்லாது, பிறப்பு இறப்பற்ற வாழ்வை அடைவேன்” என்று துணிந்து, அக்காலத்தில், கல்வியிற் கரையில் மாநகரை அடைந்தார். அங்கு பல ஆசிரியர்களிடம் பல சமயங்களைக் கற்றும், சைவசமயம் போல் வேறெந்த மதமும் உய்தி தராது என்று உறுதிகொண்டு, “ஈறில் சிவநன்னெறியே பொருள்” எனக்கொண்டார். “எந்நிலையில் நின்றாலும், எக்கோலங் கொண்டாலும், மன்னியசீர் சங்கரன் தாள் மறவாமை பொருள்” என்று துணிந்து, பௌத்த கோவம் கைவிடாது, சிவனடியை மறவாது சிந்தித்து வந்தார். சிவபெருமான் நிகழ் குறியாகிய சிவலிங்கத் திருமேனியை வெளிப்படையாகக் கொண்டு, தாம் தினமும் உணவு அருந்தமுன், வலிய கல்லினை மெல்லிய மலராகக் கொண்டு, அந்த இலிங்கத் திருமேனியில் எறிந்து, பின் உண்ணும் நியதி பூண்டார். ஒருநாள் அங்ஙனம் செய்ய மறந்து, உணவு அருந்தப் போகும்போது, தம் நியதி நினைவுக்கு வரவே அவர், “எங்கள் பிரான் தொண்டினை மறந்தேனே” என்று விரைவாகச் சிவபெருமான் திருமுன்னிலையில் சென்றார். வழக்கம்போல ஒரு கல்லினை எடுத்து சிவலிங்கத்தின் மீது எறிந்தார். உடனே சிவபெருமான் உமாதேவியாருடன் இடபவாகனத்தில் தோன்றி, காட்சி அளித்து, சிவலோகத்தில் இருத்தி அருளினார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு :
ஊர் : திருச்சாத்தமங்கை
குருபூசை / திருநாள் : மார்கழி - பூராடம்

ஒரே பார்வையில் ...
தாம் சாக்கிய மதத்தவராய் இருந்தும், நியமம் தவறாது, நாடொறும் சிவலிங்கத்தின் மீது, சிவபத்தியுடன் மலருக்குப் பதிலாக கல் எறிந்து வழிபட்டவர்.