34.சிறப்புலி நாயனார்


இப்புவியில் இன்மையால் இரந்து சென்றோர்க்கும், சிவனடியார் அணைந்தபோதும், அவர்களுக்கு இல்லை என்னாது, அவர்களை அன்போடு ஆதரித்து, இனிய மொழிபேசி, நல்லமுது ஊட்டி, நிதிமழை சொரிந்து, சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்து, திருவைந்தெழுத்தை நியமமாக ஓதியும், யாகம் முதலிய வேள்விகளை விதிப்படி செய்பவர் சிவபெருமான் திருவடி நீழலை அடையும் பெரும்பேறு பெற்று இன்புறுவர்.

                  *                                                              *                                                              *

இங்ஙனம், “வேளாளரென்பார் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளராக் கூரிற்றான்றோன்றி மாடமே” என்று ஆளுடைய பிள்ளையாரும், “இன்மையாற் சென்றிரந்தார்க்கு இல்லயென்னா தீந்துவக்கும் தன்மையாக் கூறிற்றான் றோன்றி மாடமே” என்று வாகீசரும் சிறப்பித்துப் பாடிய தலம். இத்துணைச் சிறப்பினதாகிய சிவத்தலத்திலே அந்தணர்களுட் சிறந்தவராகிய சிறப்புலியார் அவதரித்தார். இவர் இன்மையால் இரந்து சென்றோருக்கு இல்லை என்னாமலும், சிவதொண்டர்களை அணைத்து, ஆதரித்து, இனிய மொழிபேசி, நல்லமுது அளித்து, நிதிமழை சொரிந்து வந்தார். அவர், தன் அந்தணர்க்குரிய சிவத்தொண்டுகளாகத் திருவைந்தெழுத்தை இடையறாது ஓதுவதும், வைதிக வேள்வி வேட்டலும் அவர்தம் நியதியாகக் கொண்டவர். இவ்வண்ணம் தவம் ஆற்றிய சிறப்புலி நாயனார் சிவபெருமான் திருவடிகளை அடைந்து இன்புற்றார். திருவாக்கூர்த்தான் தோன்றிமாடத் திருக்கோயிலில் நாயனாரது திருவுருவம் எழுந்தருளப் பெற்றுள்ளது.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : திருஆக்கூர்
குருபூசை / திருநாள் : கார்த்திகை - பூராடம்

ஒரே பார்வையில் ...
அடியவர்கட்கு அமுது அளித்துப் பொருள் வழங்கிப் பேறு பெற்றவர்.