35. சிறுத்தொண்ட நாயனார்


மறையவர் குலத்துதித்த ஒருவர், வடநூல்களையும், ஆயுள்வேதக் கலைகளையும், படைக்கலத் தொழிலும் பயின்று, அத்துறைகள் நிரம்பி, குஞ்சரமும் பரியும் செலுத்தும் ஆற்றலுடையராய், பகைவரது போர்க்களம் சென்று அவர்களுடைய தொன்னகரம் துகளாக்கி, பொன்னும், மணியும், பகட்டினமும், பரித்தொகையும் கவர்ந்து கொணர்ந்து தம் மன்னன் முன் வெற்றிக்குறியாக வைப்பாரேயானால் அவர் வீரம், வலிமை சொல்லும் தரமன்று. அத்துணை வீரன் கூட சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்து வாழ்ந்தால் அவருக்கு சிவனடி நீழல் கிடைப்பது அரிதன்று. அவர் அரிதிற் பெற்றெடுத்த ஐந்து வயதுக் குழந்தையை ஒரு சிவனடியாராகிய வயிரவர் நரமாமிசம் விரும்பிக் கேட்டதற்கிணங்க, தம்மனையில் தம்மனைவியார் பிடிக்க, தாமே அரிந்து வைரவர்க்கு அமுது படைப்பார் என்றால், அவரது அடிமைத்திரம், வைராக்கியம் எத்துணை பெரிது! இங்ஙனம் செய்து சிவபெருமானது கமலச் சேவடிக்கீழ் சேர்ந்தவர் சிறுத்தொண்ட நாயனார் என்னும் பரஞ்சோதியார்.

                  *                                                              *                                                              *

பரஞ்சோதியார் என்பவர் சோழநாட்டிலே, திருப்புகலூருக்கும், திருச்சாத்தமங்கைக்கும் இடையிலே, திருமருகலுக்கு அண்மையிலே பலவளங்களும் சிறப்புற்றோங்கிய திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரிலே மாமாத்திரர் குலத்திலே பிறந்தவர். இவர் போர்த்தொழிலிலும், மருத்துவம் முதலிய மற்றும் கலைகளில் வல்லவராய் விளங்கி வளரும் காலத்திலே, “கல்வியில் கரையிலாக் காஞ்சி” எனப் போற்றப்பட்ட காஞ்சிபுரத்துக்கு, மேலும் கலைகள் பயிலச் சென்றவர், அங்கே பல்லவ மன்னனின் நட்பைப் பெற்று, அவரின் கீழ் சேனாபதியானார். அம்மன்னன் விரும்பியபடி பரஞ்சோதியார் வடபுலம் சென்று, வாதாபி அரசனாகிய புலிகேசினோடு போரிட்டு அந்நகரைத் துகளாக்கி, திறை கொண்டுவந்தார். இவரை இன்னார் என்று அறியாத மன்னன், அறிந்தபின் அவர் சிறந்த சிவபத்தன் என அறிந்து, தம் பிழைக்கு வருந்தி, அவருக்கு வேண்டும் நிதி, பொருள் முதலியன கொடுத்து, “உம்முடைய கருத்தின்படி சிவதொய்க” என்றான். பரஞ்சோதியார் தம் ஊர் கண்பதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை வழிபட்டு, சிவத்தொண்டு, சிவனடியார் தொண்டு செய்யும் நியமம் உடையராயினார். அவர் திருவெட்டுநங்கை என்னும் கற்பில் சிறந்த பெருமாட்டியைத் திருமணம் செய்து, இல்லறம் என்னும் நல்லறத்தின் வழியே சிவபத்தியில் மிக்கு சிவனடியாரைத் தம் வீட்டுக்கு அழைத்து, அவருக்கு அமுது படைத்தது வந்தார். அவர் அடியவர்களிடம் சிறியவராய் நடந்து, சிறுத்தொண்டர் என்னும் காரணப்பெயர் கொண்டார். இவ்வாறு இருவரும் வாழ்ந்துவரும் காலத்திலே அவர்கள் செய்த தவப்பயனாய் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சீராளதேவன் எனப்பெயர் இட்டனர். செல்வச் சிறப்பினும், தாய்-தந்தையரின் வளர்ப்பிலும், உற்றார் உறவினரது அன்பிலும் வளர்ந்து உரிய பருவத்தில் திருமருகலில் உள்ள பள்ளிக்குச் செழுங்கலை பயிலச் செல்வானாயினன்.

இஃது இவ்வாறு இருக்க, திருக்கயிலையிலுள் இறைவர் தொண்டனாரின் அடிமைத்திறத்தை உலகோர்க்குக் காட்டத் திருவுளம் பற்றினார். ஒரு வயிரவ வேடம் தாங்கி, அமுது வேண்டிச் செங்காட்டன்குடியிலுள்ள இல்லம் ஏகினார். அவர் அங்குச்சென்றபோது தொண்டர் வீட்டில் இல்லாமையால் அவர் வருமளவும் தங்கும்படி வெண்காட்டுநங்கை அவரை வேண்ட, அவர், “நாம் உத்தரபதியோம். தொண்டர் பெரிய சிறுத்தொண்டர் என அறிந்து வந்தோம். அவரில்லாது யாம் இங்கு தரித்திரோம். அவர் வரும்வரை கணபதீச்சரத்து ஆத்தியின் கீழ் இருப்போம். தொண்டர் வந்தவுடன் செய்தியை உரைப்பீர்” என்று சொல்லி, வெளியே ஆத்திமரத்தடிக்கு சென்றுவிட்டார். அமுதூட்ட வயிரவரை அழைக்க அவர், “யாம் உண்பது ஆறு மாதத்துக்கு ஒருமுறை. அந்நாள் இந்நாளாகும். இன்று பசுவைக்கொன்று சமைத்துண்பது என்வழக்கம்” என்றார். “இஃது எனக்கு அரியதன்று” என்று கூறி மனைவியாருக்குச் சொல்ல, அவர் நாயனாரை நோக்கி, “பள்ளியினின்றும் அழைத்துவாரும்” என, தொண்டர் பள்ளி சென்று, சீராளதேவனை அழைக்க, அவன் மகிழ்ச்சியுடன் ஓடிவர, அவனை வாரி அணைத்துத் தோளின்மேல் தூக்கி வீடு சென்றார். அங்கே அம்மையார் குழந்தையைக் கணவனாரிடம் இருந்து வாங்கி, முடி திருத்தி, மஞ்சனம் ஆட்டி நாயனாரிடம் கொடுத்தார். தொண்டர் பிள்ளையின் தலையைப் பிடிக்க, தாயார் கால்களைப் பற்ற, புதல்வன் பெற்றோர் சீராட்டுகிறார் என்று மகிழ்ச்சி அடைய, செயற்கரிய செய்கையைப் பெற்றோர் செய்தனர். தோழி சந்தனநங்கை உதவாதனவற்றை நீக்கி உவப்பன கொண்டு நல்லமுது சமைத்தார். தொண்டர் கோயில் சென்று வயிரவரை அழைத்துவந்து அமுது படைத்தார். “நாம் தனியே உண்ணோம். நீரும் எம்மோடு உண்ணும். உம் புத்திரனையும் அழியும்” என்றார். தொண்டர் அவன் பள்ளிக்குச் சென்று, “மைந்தாய் வருவாய்” என, தாயார், “செய்ய மணியே! சீராளா! வாராய்! சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கிறார்” என்று ஓலமிட, பள்ளியில் இருந்து பரமன் அருளால், போந்தவனப்பின் தனிப்புதல்வனை தழுவி எடுத்து நாயனார் கையில் கொடுத்தார். அவர்கள் வீடு சென்றபோது வயிரவர் மறைந்தருளினார். மறைந்த சிவனார், மலைபயந்த தையலோடும், சரவணத்துத் தனயரோடும் விசும்பில் காட்சி கொடுத்தார். இம்மூவரோடும் சந்தனத் தாதியாரும் இறைவனைப் பிரியாதிருக்கச் சென்றனர்.

வயிரவர் தங்கி நின்ற திருவாத்தி மரத்தை இன்றும் கோயிலின் காணலாம். இவர்களுடைய திருமேனிகள் கோயிலில் எழுந்தருளியுள்ளன. பிள்ளையார் இவரை I-61-10 பாடலில், “பொடி நுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள் செய்யும் பொருட்டாகக் கடிநகரை வீற்றிருந்தான்” என்று நாயனாரையும், “சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய” என்று நாயனாரையும், புதல்வனையும் சேர்த்து, III-63-8 என்ற பாசுரத்திலும், III-63 ஆகிய 10 பாடல்களைக் கொண்ட முழுப் பதிகத்திலும் நாயனாரைச் சிறப்பித்துள்ளார். வேறு எந்தப் பதிகத்திலும் எந்தத் திருத்தொண்டரையும் யாரும் இங்ஙனம் சிறப்பிக்கவில்லை.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : மாமாத்திரப் பிராமணர்
நாடு : சோழநாடு
ஊர் : திருச்செங்காட்டங்குடி
குருபூசை / திருநாள் : சித்திரை - பரணி

ஒரே பார்வையில் ...
பல்லவ மன்னனுக்காக வடபுலம் சென்று, வாதாவிப் போரில் வாகைசூடி மீண்டது. வடக்கே இருந்து வந்த உத்தராபதியாருக்கு, தம் ஒரே புதல்வனான ஐந்து வயதுச் சீராளனைக் கறியாகச் சமைத்து அமுது ஊட்டிப் பேறு பெற்றவர்.


சீராள தேவர்

நிறைந்த தவம் செய்த சிறுத்தொண்டருக்கு, மனை அறத்தின் வேராக விளங்கிய திருவெண்காட்டு நங்கைபால் அவதரித்த மைந்தரின் பெயர். மூவாண்டில் முடி நீக்கப்பெற்று, செழுங்கலைகள் பயில, பள்ளியில் இருத்தப் பெற்றார். திருமலியில் இருந்து பைரவ வேடத்தில், சிறுத்தொண்டர்தம் மனை சென்ற சிவன் உவப்ப, அவர் வேண்டியபடி, கறி அமுது அமைக்க, தாயார் மடியில் வைத்துப் பிடிக்க, தந்தையார் கருவி கொண்டு தலை அரியப் பெற்றவர். தாம் உண்ண, “அவனை நாடி அழையும்” என பயிரவர் சொல்ல, நாயனார் புறம் போந்து, “மைந்தா, வருவாய்” என அழைக்க, தாயார், “செய்ய மணியே! சீராளா! வாராய்! சிவனார் யாம் உய்ய, உடன் உண்ண அழைகின்றார்” என்று ஓலமிட, பள்ளியில் இருந்து ஓடிவருவான் போல வந்த தனிப்புதல்வனை எடுத்து, தழுவி, களிகூர்ந்தனர். இந்நிலையில் பயிரவரும் மறைந்தார். அவ்விடத்தில் வெள்ளை விடைமேல் இறைவர், இறைவி, சரவணத்தன் ஆகிய மூவரும், சோமாஸ்கந்த மூர்த்தமாக தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் ஆகியோர் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ் என்றும் இருக்க, உடன் கொண்டு ஏகினார். சீராளதேவர் பயிரவருக்கு பலியிடப் படும்போது படித்த பள்ளி, திருச்செங்காட்டம் குடியில் இருந்து திருச்சாத்தமங்கைக்கு (incomplete)