37. கணநாத நாயனார்


திருமுறை எழுதுதல், வாசித்தல் இவற்றைச் செய்ய விரும்புவோர்களை அவரவர் தகுதிக்கேற்பப் பயிற்றுதல், இவ்வாறு திருத்தொண்டரை நெறிப்படுத்துதல், சிவப்பணியாகிய சரியைப் பணியாகும். இப்பணியைச் செவ்வனே செய்து ஞானமுண்டவரின் தாமரைத் திருவடிகளை வணங்கிக் கொன்றை மாலை அணிந்தவருடைய திருக்கயிலையை அடைந்து சிவகணங்களுக்குத் தலைவரானார். இந்தக் கணநாதர் என்பவர் ஞானவாரமுது உண்டவர் அவதரித்த தலத்திலே தோன்றி, தோணியப்பரை வணங்கும் பேறு பெற்றவர். சரியைத் தொண்டிலே விருப்பம் உடையார்க்கு பூ எடுத்தல், மாலை கட்டுதல், திருமுறைகளைப் படித்தல் முதலியவற்றை அடியவர்க்குப் பொருந்தும்படி செய்யப் பயிற்சி அளித்தார். இவற்றால் அவர் ஞானசம்பந்தர் திருவடிகளை வணங்கி, சிவனுடைய திருக்கயிலாய மலையை அடைந்து, அங்கே சிவகணங்களுக்கு நாதராகும் வழிவழி வரும் திருத்தொண்டிலே நிலைபெறுகின்றார். இவருக்கு சீகாழிக் கோயிலில் உள்ளும் புறத்தும் எழுந்தருளச் சிறு கோயில்கள் உண்டு.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : சீகாழி
குருபூசை / திருநாள் : பங்குனி – திருவாதிரை

ஒரே பார்வையில் ...
திருஞானசம்பந்தரை வழிபட்டு, சிவதொண்டர்களுக்கு சரியைத் தொண்டுகளில் சிவனடியார்களுக்குப் பயிற்சி அளித்தவர்.