38. கூற்றுவ நாயனார்


வளநாடு முதலிய அரசர் திரு எல்லாம் இருந்தாலும் மணிமுடி தரித்தன்று ஆட்சி நிறைவு பெறாது. அரசு முடியானது அதனைச் சூட்டுதற்கு உரிமை உடையோரால் சூடப்பெறுதலே சிறப்பு. அரசு முடிசூட்டும் உரிமை பெற்ற பெரியோர்கள், வழிவழி வந்த மரபில் உள்ளர்கள் அன்றி, வேறு பேருக்கு போர் வல்லமை பற்றி அஞ்சிச் செய்யார். செய்ய நேரின், அதனைச் செய்யாது அவ்விடம் விட்டு அகல்வர். அரசன் கோவில்களில் எங்கும் தனித்தனியே உலகு விளக்கம்பெரும் பூசனை முறை இயற்றுவித்தல் அரசர்களின் முதற் கடமையாகும். இவற்றிற்கமைய முடிக்குப் பதிலாக தம் திருவடிகளை அம்பலவாணர் சூட்டியருள, அத்திருவடிகளை சிரமேற்கொண்டு தாங்கி, நல்ஆட்சி புரிந்து, இறைவனடி சேர்ந்தவர் கூற்றுவர் என்னும் அரசன் ஆவர்.

                  *                                                              *                                                              *

கூற்றுவர் களந்தை (களப்பால்) என்னும் பத்தியில் வாழ்ந்தவர். சிவனடி மறவாச் செம்மல். சிவன்பாலும், சிவனடியார்கள் பாலும் பத்தி மிகுந்தவர். அதனாலே சேனை வழிபெற்றுத் தன் தோள் வல்லமையால் பல அரசர்களைப் பல போர்க்களங்களிலே நேர்கொண்டு அவர்களை வென்று, அவர் நாடுகளைக் கைப்பற்றி அரசுச் சிறப்பெல்லாம் பெற்று விளங்கினார்.

தாம் மணிசூடிக்கொள்ள விரும்பி, முடி சூட்டும் உரிமையை உடைய தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்க, அவர்கள், தாங்கள் சோழமன்னர்களுக்கே அன்றி வேறு அரசர்களுக்கு முடி சூட்டோம் என மறுத்தனர். அரசரின் சீற்றத்துக்கு அஞ்சி அவர்கள் சேரநாட்டுக்குச் சென்றனர். இந்நிகழ்சிகளை அறிந்த மன்னர் மனம் தளராது, மன்றுளாடும் பெருமானை நினைத்துத் துதித்து, “மணிமுடியாக உமது திருப்பாதத்தைத் தந்தருளுக” என்று வேண்டினார். அம்பலவாணரும் அன்றிரவே அரசர் விரும்பியதை நிறைவு செய்து அருளினார். செங்கோலாட்சி செய்த கூற்றுவனார் கோயில்களில் பூசனைகள் முதலியன குறைவின்றி ஆற்றி, இறைவனடி சேர்ந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : குறுநில மன்னர்
நாடு :
ஊர் : களந்தை
குருபூசை / திருநாள் : ஆடி - திருவாதிரை

ஒரே பார்வையில் ...
தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவர் திருவடிகளையே முடியாகச் சூடிக்கொண்டு அரசாட்சி செய்தவர்.

இவர் காலம் கி.பி. 500-575