39. புகழ்ச்சோழ நாயனார்


ஓர் அரசரது மரபின் மேன்மை, அவர் முன்னோரதும், வழித்தோன்றல்களதும் மேன்மைகளால் அறியப்படும். மன்னர் மக்களைக் காத்தளித்தல் மாத்திரம் அன்றி, அவர்களது உயிர்க்கு உறுதி பயக்கும் வினைகளை (சிவாலய பூசை, சிவனடியார் பூசை முதலியன) செய்தலுமாம். பேரரசர்கள் சிற்றரசர்களிடம் திறை பெறுவதற்கு நகரங்கள் அமைப்பது வழக்கம். மன்னரின் சேனைவீரர் எதிரிகளுடன் பேரிட்டு உயிர் துறத்தல் செஞ்சோற்றுக் கடனாம். போரில் இறந்த பகைவர்களுடைய தலைகளை வெட்டி எடுத்து சேனாவீரர் தம் அரசரிடம் கொண்டுவந்து கொடுத்தல் மரபு. சடைகொண்ட தலையினை உடைய சிவனடியாரைப் போன்றோரை போர்க்களத்தில்தானும் கொல்வது பழியும் பாவமுமாம். தன்கீழ் வாழும் உயிர்கள் செய்யும் குற்றங்களுக்கு அரசன் தீர்வு விதிப்பது போல், தானும் தன் பரிசனரும் செய்யும் குற்றங்களுக்குத் தாமே தீர்வு வகுத்தல் மரபு. பெருங்குற்றம் இழைத்த அரசர் தாமே தமக்குத் தீர்வினை வகுத்து, திருவைந்தெழுத்து ஓதி, தீயினுள் புக்கு இறத்தல் வழக்கு. இங்ஙனம் வாழ்ந்து இறைவரது கருணைத் திருவடி நீழல்கீழ் நீங்காது அமர்ந்திருந்தார்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே, அதன் தலைநகராய், சோழஅரசர்கள் முடிசூட்டிக்கொள்ளும் ஐந்து நகரங்களில் ஒன்றாகிய உறையூரிலே அநபாயர் வழிமுதலாகிய புகழ்ச்சோழர் செங்கோலாட்சி செய்து வந்தார். இவர் உலகத்தரசர்கள் தாமிடும் பணி கேட்டு அடங்கி நடக்கச் செய்தும், சிவாலயங்களில் பூசனைகள் ஆகம முறைப்படி செய்தும், சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்ததும், சிவநெறியில் ஒழுகி வந்தார். கருவூர் என்னும் இன்னொரு தலைநகரில், சிற்றரசர்கள் கொண்டுவரும் திறையினைப் பெற்று, அங்கே மாளிகைகளில் கொலு வீற்றிருப்பார். இங்ஙனம் இருக்கும் நாளில் ஒருநாள் சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் கருவூரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பசுபதீசுவரர் என்னும் திருப்பெயருடைய எம்பெருமானுக்குத் திருப்பள்ளித் தாமம் கொண்டுசென்றார். அப்போது நீராடிவிட்டு மீண்டுகொண்டிருந்த பட்டவர்த்தனம் என்னும் அரசருடைய யானை சிவனடியார் கையிலிருந்த பூக்கூடையைப் பறித்து, அதனுள் இருந்த பூக்களைச் சிந்தியது. இதனைக் கண்ணுற்ற எறிபத்த நாயனார் என்னும் சிவனடியார் சிவாபராதம் செய்த அந்த யானையையும், அதன் பாகர்களையும் வெட்டிக் கொன்றார். அதுகேட்டுச் சினந்த மன்னன் புகழ்ச்சோழன் அவ்விடம் விரைந்து, நடந்தவற்றை அறிந்து, தம்மையும் கொல்லும்படி எறிபத்தரை வேண்டித் தம்முடைய வாளினையும் நீட்டினார். இச்செய்கையினால் மகிழ்ந்த இறைவர், யானையையும், பாகரையும் எழச்செய்து அருள் புரிந்தார்.

மன்னருக்குச் சேரவேண்டிய திறை கொடாது முரண்பட்ட அதிகன் என்னும் சிற்றரசனை, மன்னரின் அமைச்சர்களும், படையினரும் சென்று அவனை எதிர்த்துப் போரிட்டு வென்றனர். அதிகன் தப்பி, கானகத்தே ஓட, மன்னரின் அமைச்சர்களும், போர்வீரர்களும் அதிகனுடைய யானை, குதிரை முதலியவற்றையும், அதிகனின் வீரர்களின் துண்டித்த தலைகளையும் கொண்டுவந்து மன்னரிடம் கொடுத்தனர். அத்தலைகளினுள்ளே புன்சடையினோடு ஒருதலை இருத்தலைக் கண்டு, நடுங்கி, “ஆ! கேட்டேன். சிவாபராதம் செய்துவிட்டேனே!” என்று கவன்று, “இவ் அபராதத்துக்கு நானே கழுவாய் தேடுவேன்” என்று கூறித் தனது புதல்வனுக்கு முடிசூட்டும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். பின்பு செந்நீ வளர்ப்பித்து, திருநீற்றுக் கோலம் பூண்டு, அப்புன்சடைத் தலையினைப் பொற்கலத்தில் ஏந்தி, திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டு தீயினுட் புகுந்து இறைவரது திருவடியின் நீழல்கீழ் அமர்ந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அரசர்
நாடு : சோழநாடு
ஊர் : உறையூர்
குருபூசை / திருநாள் : ஆடி - கார்த்திகை

ஒரே பார்வையில் ...
தம்மோடு போர் செய்த பகைவனது அறுபட்ட தலையில் சிவசின்னமாகிய சடையினைக் கண்டு, கொல்லப்பட்டவர் சிவனடியார் என்று அஞ்சி, தம் உயிரையே மாய்த்தவர்.