4. மெய்ப்பொருள் நாயனார்


சிவனடியார் வேடம், சிவன் எனப் போற்றி, தொழுதற்குரியது. வேதவாய்மை காத்தலும், இறைவன் திருக்கோயில் எங்கணும் நித்திய பூசையும், சிறப்பு விழாக்களும் குறையாது நடைபெறச் செய்தலும், அரசர்களது முக்கிய கடமையாகும். நாயகரது பக்கத்திருந்து, அவர்க்கு வேண்டும் பணிசெய்து, பின் தூங்கி, முன் எழும் கற்புடை நாயகிகள் கடன். ஆகமங்களே உயிர்களை உயர் கதியில் செலுத்த வல்லன. ஆகம உணர்ச்சி, பிற எல்லாவற்றினும் மேற்பட்டது. திருநீற்றன்பு நெறியையே எல்லோரும் பாதுகாத்து ஒழுகுதல் நலம் தரும். உயிர் போகும் காலத்தில், இறைவனை எண்ணி, சிந்தித்தல் பேரின்பம் தரும். அது பன்னாள் பயிற்சியால் கூடுவது. அவ்வாறு சிந்திக்கின், சிவன் வெளிப்பட்டு அருளுவன். இடையறாது கும்பிட்டிருத்தல் வீட்டின்பம் பயக்கும். இங்ஙனம் வாழ்ந்து பேறு பெற்றவர் மெய்ப்பொருள் நாயனார் என்னும் திருத்தொண்டரேயாவர்.

                  *                                                              *                                                              *

சேதி நாட்டிலே, திருக்கோவலூர் என்றொரு சிவத்தலம் உண்டு. அங்கே மலையமான் என்ற மரபிலே, மெய்ப்பொருளார் என்றொரு அரசர் ஆட்சிசெய்து வந்தார். அவர் வேதநெறி ஒழுகுபவர். சிவனடியாரை போற்றுபவர். முத்தநாதன் என்னும் ஓர் அரசன் இவரை வெல்லக் கருதி, அது முடியாது என்று அறிந்து, அவரை வஞ்சனையால் வெல்லக் கருதினான். அந்த நோக்கத்தோடு அவன் ஒருநாள் திருநீற்றுக் குறியுடன், சடைமுடி தரித்து, கையிலே கருவியை மறைத்த பை ஒன்றுடன், திருக்கோவலூர் அரண்மனையை அடைந்தான். வாயிற்காவலர் முத்தநாதனின் தோற்றத்தைக் கண்டு, அவன் ஒரு சிவனடியார் என நினைத்து உள்ளே போகவிட்டனர். உள்ளே சென்ற முத்தநாதன், அரசர் கட்டிலில் படுத்திருக்க, பக்கத்திலே மாதேவி இருக்கவும், அருகே சென்றணைந்தனன். மாதேவி அரசரை எழுப்பினார். “இது நாயனார் அருளிய ஆகமநூல். மண்மேல் இல்லாதது. உனக்கு உபதேசிக்க கொணர்ந்தேன். தேவியார் இங்கு இருப்பதை தவிர்க்க” என்றான். அரசர் தேவியாரை அந்தப்புரத்துக்கு அனுப்பி, தவவேடத்தாரை மேலே இருத்தி, தாம் கீழே இருந்து கேட்கச் சித்தமானார். அவ்வேளை புத்தகத்தை பையினின்று எடுக்க முயல்பவன் போல், பையின் கட்டை அவிழ்த்தான். பையினுள் அவன் மறைத்துக் கொணர்ந்த கொலைக் கருவியை எடுத்து, தான் எண்ணிவந்த கொடிய செயலை செய்தான். கொலைஞன் புகுந்தபோதே அவன்மேல் கண்ணும், கருதும் வைத்திருந்த தத்தன் என்னும் காவலாளி அவனை வாளால் எறிந்தான். அதனைக் கண்ட மெய்பொருளார், “தாத்தா, நமர். இவரை யாரும் துன்பம் செய்யாமல் பார்த்து, கொண்டுபோய் விடு” என்றார். அவ்வாறே செய்து மீண்டு வந்த தத்தன், “கொண்டுபோய் விட்டுவிட்டேன்” என்றான். அதுவரை உயிர் தாங்கியிருந்த அரசரை, சிவபெருமான் தமது அருட்கழல் நீழலில் சேர்த்துக் கொண்டார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : குறுநில மன்னர்
நாடு : நடுநாடு
ஊர் : திருக்கோவலூர்
குருபூசை / திருநாள் : கார்த்திகை - உத்தரம்

ஒரே பார்வையில் ...
வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் முத்தநாதன் என்னும் வேடதாரியைக் காப்பாற்றி, தாமே உயிர் விட்டவர்.