40. நரசிங்கமுனையரைய நாயனார்


அரசர்க்கு இரண்டு கடமைகள் உண்டு. உலகியல் கடமை, அரன்தொண்டு நெறி என இவை. இவற்றில் உலகியல் நெறி, குடிகள் முதலியவற்றை காவல் புரிவதனாலும், அரன்தொண்டு, அரன் கோயிற் பணிகளை முட்டின்றிப் புரிவதனாலும் விளக்கம் பெறும். நரசிங்கமுனையரையர் ஆளுடை நம்பிகளிடம் ஆசைகொண்டு, தம் அபிமான புத்திரராகக் கொண்டு, அவர் மன்னவர் திருப்பெறச் செய்தவர். திருவாதிரை நாள் சிவபெருமானுக்குச் சிறப்புடை நாள். அன்று சிவனுக்குச் சிறப்புப் பூசனை செய்தலும், சிவனடியார்க்கு வழிபாடு செய்தலும், மாகேசுரபூசை செய்தலும் சிவபுண்ணியங்களாம். அடியவர் மேற்கொள்ளும் திருநீறு, கண்டிகை முதலிய திருவேடம் பற்றி அவர்களை வணங்குதல் வேண்டும். மானமழி காமக்குறி மலர்ந்த மேனியராய், தம்கட் வந்தவரை ஏனையோர் ஒதுக்கித்தள்ள, நரசிங்கமுனையர் அவரது திருத்தவக்கோலத்தை மாத்திரமே கண்டு, வணங்கி அவருக்கு இரட்டிப்பொன் கொடுத்து வணங்கி விடுவித்தார். இங்ஙனம் தம்பொருட்டாகவும், உலகர் தம்பொருட்டாகவும் வாழ்ந்து, திருத்தொண்டுகள் பல செய்து, இறைவர் திருவடி நீழலை அடைந்தார்.

                  *                                                              *                                                              *

நடுநாட்டிலே திருமுனைப்பாடி நாட்டை, குறுநில மன்னர் மரபிலே வந்தவராகிய நரசிங்கமுனையர் என்பார் ஆட்சிசெய்து வந்தார். அவர் சிவனடியார்களின் திருவடியே பேறு என வாழ்ந்து வந்தவர். சிவாலயங்களின் சிவத்திரவியங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகக் கருதி செய்துவந்தவர். சிவநெறித் தொண்டுகளைக் கனவிலும் மறவாமல், கடமையாகச் செய்து வந்தவர். சிவபெருமானுக்கு மிகவும் உவப்பான திருவாதிரை நாள்தோறும் நியமமாக சிறப்புப் பூசனை செய்து, அன்று வந்தணையும் சிவனடியார் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபாடு செய்துவந்தார். ஒரு திருவாதிரை நாளில் அடியார்களுடனே “காமக்குறி மலர்ந்த ஊன நிகழ் மேனியராகிய” ஒருவரும் திருநீறு, திருக்கண்டிகை அணிந்து போந்தனர். அவர் நிலையினைக்கண்டு அவர் மருங்கு இருந்தவர்கள் அவரை எள்ளி ஒதுங்கினர். மன்னர் அதுகண்டு அவரை அணுகி, வணங்கிப் பேணினார். திருநீறு சார்ந்தவர்களை உலகம் இகழ்ந்து நரகில் அடையாமல் இருக்க முனையரையர்  விரும்பினார். அடியவரைத் தொழுது, இரட்டிப்பொன் கொடுத்து, அமுதளித்து உபசரித்து, விடைகொடுத்து வழியனுப்பி வைத்தார். இவ்வகையே திருத்தொண்டின் நெறியில் அன்புடன் திருத்தொண்டுகள் பல ஆற்றிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்து, மீளாநிலை பெற்றார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : குறுநில மன்னர்
நாடு :
ஊர் :
குருபூசை / திருநாள் : புரட்டாதி - சதயம்

ஒரே பார்வையில் ...
சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டு, விரும்பி, எடுத்து வளர்த்தவர். சிவவேடம் பூண்ட, காமக்குறி மலர்ந்த தூர்தனையும் வழிபட்டுப் பேறு பெற்றவர்.