41. அதிபத்த நாயனார்


மீன் படுக்கும் கொலைத்தொழில் புரியும் நுளையர் (மீனவர்) குலத்தினரும் சிவபத்தியில் சிறந்து, சிவலோகம் அடைந்து, சிவனடியாரோடு இருக்கும் பேறு பெறலாம். தினமும் தாம் படுக்கும் மீன்களிலே ஒன்றினைச் சிவனுக்கென்று மீண்டும் கடலில் போகவிடும் சிவத்தொண்டினைச் செய்துவந்தவர் அதிபத்தர் என்பார். அவர் ஒருநாள் படுத்த நவமணிகள் இழைத்த பொன்மீனையும் சிவனுக்கென்றே அர்ப்பணமாகக் கடலில், “இறைவர் பொற்பாதங்களில் சேர்” என்று கூறி கடலில் விடுத்தார். பொன்னையும், மணியையும், பொருள்களையுமே பெரிதாகக் கொள்ளும் இவ்வுலகத்திலே அவ்வாசைகளை அறவே நீக்கிய அதிபத்தர் முன், இறைவர் ஆகாயத்தில் தோன்றி, “நீ நம் சிவலோகத்தை அடைவாய்” என்று அருளிச்செய்தார்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டின் கிழக்குக் கரையோரத்திலே சிறந்து விளங்கிய துறைமுகப்பட்டினமாகிய நாகபட்டினத்திலே, சிறப்புற்று வாழ்ந்த பரதவ குலத்திலே தோன்றி, அக்குலத்தினருக்குத் தலைவராய் இருந்தவர் அதிபத்தர் ஆவர். அவர் சிவனடி மறாவாச் செம்மை உடையவர். சிவனடிமைத் திறத்தில் சிறந்து விளங்கியவர். அதனாலே அவர் தினமும் மீன் படுக்கும்போது, அம்மீன்களில் தலையானதை சிவபெருமானுக்கு என்று கடலில் மீண்டும் செல்ல விட்டுவிடுவார். இங்ஙனம் பலநாள்கள் தொடர்ச்சியாக ஒரு மீனே அவருக்குக் கிடைத்துவந்தது. நியமப்படி அம்மீனையும் சிவனுக்கென்றே கடலில் ஓடவிட்டு வந்தார். இதனால் அவரும், அவர் சுற்றத்தவரும் பலநாள் உணவின்றி வருந்தினர். இவ்வண்ணம் நிகழும் நாளில் ஒருநாள், பொன்மயமாய், நவமணிகளின் ஒளிகொண்ட மீன் ஒன்று அவர் வலையில் படுத்தது. அதனையும், “இது எனையாளுடைய எம்பெருமானுக்கு” என்று சொல்லி கடலில் புகவிட்டார். இப்படிப் பொருட்பற்றை நீக்கி, சிவபெருமானிடம் தீவிர பத்தி கொண்ட அதிபத்தருக்கு முன் இடபாரூடராய்க் காட்சி கொடுத்து, சிவலோகத்தில் சிவனடியார்களோடு இருக்கும் பேற்றினை நல்கினார்.

அதிபத்த நாயனார் வாழ்ந்து சிவப்பேறு எய்தியது நாகப்பட்டினத்துக்கு அருகேயுள்ள நம்பியாங்குப்பம் என்னும் மீனவர் வாழும் நுளைப்பாடி ஆகும். இன்றும் அங்கு அக்குலத்தில் யாராவது இறந்தால், அவரின் சடலத்தைக் கோயிலின் முன் கொணர்ந்து, கோயிலில் இருந்து தீர்த்தம் பெற்று, சடலத்தின் மேல் தெளித்துப் பின்னரே இடுகாட்டுக்கு எடுத்துச்சென்று ஈமக்கடன்களைச் செய்வது வழக்கம் ஆகிவிட்டது. இவரது திருமேனி திருநாகைக்காரோணத் திருக்கோயிலில் எழுந்தருளப் பட்டுள்ளது.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : நுழையர் (மீனவர்)
நாடு : சோழநாடு
ஊர் : நாகபட்டினம்
குருபூசை / திருநாள் : ஆவணி - ஆயிலியம்

ஒரே பார்வையில் ...
ஒருநாள் ஒரேஒரு மீன் கிடைத்தது. அது நவரத்தினம் இழைத்த பொன்மீன். அதனைத் தாம் வைத்திருக்க விரும்பாது, உற்றார் உறவினர் பசியால் வருந்துவதையும் கவனியாது, வழக்கம்போல் அதனைச் சிவார்ப்பணம் ஆக்கியவர்.