42. கலிக்கம்ப நாயனார்


சிவன்கழல் காதலுடனே வளர்ந்து, அவன் கழற்கே செய்யும் தொண்டினையே பற்றி, வேறு பற்றிலாது, சிவதொண்டு செய்தல் வீடு பயக்கும். சிவனடியார்களை அமுது செய்வித்தல், நூல்களில் விதித்த நெறி தவறாது மனமகிழ்ச்சியுடன் நிகழவேண்டும். சிவனடியாரை சிவனாகவே கண்டு வணங்குதல் அன்றி, அவரது முன்னிலை பற்றி எண்ணுவது சிவாபராதமாம். மனைவியார் செய்த சிவாபராதத்துக்காக அவரது கையினைத் துடிந்த கலிக்கம்ப நாயனார், அதுபற்றித் துளக்கம் இல்லாத சிந்தையராய் சிவபெருமானது திருவடிக்கீழ் அடியாருடன் கலந்திருந்தனர்.

                  *                                                              *                                                              *

நடுநாட்டிலே திருப்பெண்ணாகடம் என்ற புகழ்பூத்த திருத்தலத்திலே கலிக்கம்பர் என்றொரு வணிகர் இருந்தார். அவர் சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்து, அவ்வூரில் உள்ள திருத்தூங்கானை மாடத்தில் எழுந்தருளியுள்ள சிவக்கொழுந்தீசர் தொண்டினைப் பற்றி வாழ்ந்தார். அவர் சிவனடியாருக்குத் திருவமுது அளித்தும், இன்னும் அவர் வேண்டுவன கொடுத்தல் முதலிய சிவதொண்டுகள் ஆற்றி மகிழ்ந்திருந்தார். ஒருநாள் வழக்கம்போல சிவனடியார்க்கு திருவமுது அளிக்க அவர்தம் திருவடிகளை விளக்கினார். அப்போது அவர்தம் மனைவியார், முன் தம் இல்லில் எவலாளராய் இருந்து, முனிந்து சென்ற ஒருவரை இனங்கண்டு, “இவர் முன் நம் வீட்டில் ஏவல் செய்யாது அகன்றவர்” என்றார். அவ்வேளை அவர் அடியார் திருவடிக்கு நீர் வார்க்க முட்டுப்பாடு எய்தியது. அதனைக் கண்டுணர்ந்த கணவனாராகிய கலிக்கம்பர் கோபங்கொண்டு, மனைவி கையிலிருந்த கரகத்தைப் பற்றி எடுத்து, அவரது கையையும் தடிந்தார். பின்னர் சிவனடியாரின் திருவடிகளைத் தாமே நீர் வார்த்து விளக்கி, அவர்களுக்குத் திருவமுது செய்வித்தார். இவ்வாறு அத்திருத்தொண்டினைத் தொடர்ந்து செய்து, சிவபெருமானது திருவடிக்கீழ் அடியருடன் கலந்தனர்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வணிகர்
நாடு : நடுநாடு
ஊர் : பெண்ணாகடம்
குருபூசை / திருநாள் : தை - ரேவதி

ஒரே பார்வையில் ...
சிவனடியார். திருத்தொண்டர்க்கு அமுது படைக்கும் தொண்டு செய்தவர். ஒருநாள் தமக்கு முன்னாளில் ஏவல் புரிந்த வேலையாள் சிவனடியாராக வந்து, அடியார் பந்தியில் ஒருவராக இருக்க, அவனைத் தாம் வழிபட, தம் மனைவி கரகநீர் உதவி வழிபடாதிருக்க, அவள் கையை வெட்டித் தண்டித்து, பேறு பெற்றவர்.