43. கலிய நாயனார்


வெவ்வேறு குலத்தில் உள்ளோர் தத்தம் தொழிலினின்றே அத்தொழிலின் உரிமைத்தொண்டு செய்தல் சிறப்பாம் (திருநீலகண்டர், திருநாளைப்போவார், அதிபத்தர், நேசர் முதலியோர் வரலாறுகளை நோக்குக). செல்வதில் திளைத்த காலத்தில் அன்றி, வறுமை ஏற்பட்ட காலத்திலும் தாம் கொண்ட திருத்தொண்டைச் செய்து வருதல் சிவனடிமைச் சிறப்பாம். திருக்கோவில்களிலே திருவிளக்கு ஏற்றுபவரை இறைவர் சிவலோகத்தில் பொலிந்திருக்கச் செய்வர்.

                  *                                                              *                                                              *

இவ்வாறு நியமமாகத் தம் தொழிலில் சிறந்து சிவபதம் எய்தியவர் தொண்டைநாட்டிலே திருவொற்றியூர் என்னும் புண்ணியதலத்திலே, சக்கரப்பாடித் தெருவிலே திலதயில (எள்நெய் ஆட்டும்) விளையாளர் மரபிலே பிறந்தவராகிய கலியர் என்பவர். இவர் தம் தொழிலால் கிடைத்த பொருளைக் கொண்டு பெருஞ்செல்வராக விளங்கியபோது, தமது மரபு வழியே சிவத்தொண்டின் நெறி நின்றார். திருவொற்றியூரிலே உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதர் திருமுன்னிலையில், அல்லும், பகலும், உள்ளும், புறமும் திருவிளக்கேற்றி வந்தார். இத்தொண்டினை நீண்டகாலமாகச் செய்துவர, அவரது செல்வம் குன்றத்தொடங்கியது. அப்போது அவர் எண்ணெய் வாங்கி, விற்றுக் கூலி பெற்றுத் தன் சிவப்பணியைச் செய்துவந்தார். அதுவும் கூடாமையால், எண்ணெய் ஆட்டும் களத்தில் கூலி வேலை செய்து, கூலியைக்கொண்டு தம்பணி நின்றார். அதுவும் கூடாதபோது, தம் மனைவியை விற்க வழிதேடினார். அங்ஙனம் மனைவியை வாங்க முவராமையால் மனம் தளர்ந்து படம்பக்கநாதர் கோயில் சார்ந்தார். விளக்க்கு எரிக்க அகல்களைப் பரப்பி, திரி இட்டார். அவற்றை எரிக்க வேண்டிய எண்ணெயாகத் தம் குருதி இடமிடற்றை அரியக் கருவியை எடுத்தார். இறைவர் அப்போது அவர் முன்னே இடபாரூடராய்க் காட்சிதந்து, அவர் கைகளைத் தம் கைகளாற் பற்றி, சிவலோகத்தில் இனிது அமரச் செய்வானார். திருவொற்றியூர் படம்பக்கநாதர் கோயிலில், கோயிலுக்கு வேறாக இவருக்குத் தனிக்கோயிலும், தனியே எழுந்தருளிய திருமேனியும் உண்டு.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : சொக்கார்
நாடு : தொண்டைநாடு
ஊர் : திருவொற்றியூர்
குருபூசை / திருநாள் : ஆடி - கேட்டை

ஒரே பார்வையில் ...
திருக்கோயிலில் தினமும் திருவிளக்கேற்றும் நியமம் உடையவர். ஒருநாள் அத்தொண்டுக்கு நெய் இன்மையால் ஏற்பட்ட குறையை நீக்க, தம் இரத்தம் கொண்டு திருவிளக்கு எரிக்க முயலும்போது, சிவபெருமான் காட்சி கொடுக்க, முத்தி அடைந்தார்.