45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்


அரசாட்சி இன்னல் தருவது. அதனை இகழ்ந்து, துறந்து சிவன் பணியாகிய சிவத்தல யாத்திரை செய்தல் முதலியன முத்தியை அடைவிக்கும் சாதனங்கள். இங்ஙனம் பணிசெய்து சிவலோகம் எய்தியவர் ஐயடிகள் காடவர்கோன் என்பவராவர்.

                  *                                                              *                                                              *

இவர் சோழ மரபில், பல்லவர் தனிக்குலமாக இருந்த காலத்தில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்த செங்கோல் மன்னர். தன்கீழ் வாழும் அனைத்துயிர்களும் வறுமையும், பகையும், துன்பமும் இன்றி வாழவேண்டும் என்று விரும்பி, நீதியினால் பகைப்புலன்களை அடக்கி, சைவத் திருநெறியில் அரசளித்தார்.

அரசாட்சி துன்பம் தருவதாகும் எனக்கருதி, அதனை இகழ்ந்து, தனது மகனுக்கு அரசனாக முடிசூட்டி, தில்லைச்சிற்றம்பலம் முதலாகிய தலங்களுக்கு யாத்திரை போய், ஒவ்வொரு தலத்துக்கு ஒவ்வொரு வெண்பாவாகப் பாடி வழிபாடு ஆற்றினார். இவ்வாறு பணிசெய்து சிவலோகம் எய்தினார்.

இவர் பாடல்கள் ஷேத்திரவெண்பா என்ற பெயரைத் தாங்கி, யாக்கை நிலையாமையை வற்புறுத்துகின்றன. இந்தச் ஷேத்திரவெண்பா, திருமுறைகளைத் தொகுத்து அருளியவராகிய திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகளால் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : பல்லவர் குலக் குறுநில மன்னர்
நாடு : தொண்டைநாடு
ஊர் : காஞ்சிபுரம்
குருபூசை / திருநாள் : ஐப்பசி – மூலம்

ஒரே பார்வையில் ...
தன் அரச பதவியை வெறுத்துத் துறந்து, தலயாத்திரை செய்து, ஒவ்வொரு தலத்துக்கு ஒவ்வொரு வெண்பா வீதம், ஷேத்திர வெண்பா பாடி, நிலையாமையைக் கூறியவர்.