46. கணம்புல்ல நாயனார்


செல்வம் பெற்றதின் பயன் சிவப்பணி செய்தல். சிவாலயங்களிலே திருவிளக்கேற்றல் சிறந்த சிவபுண்ணியமாம். வறுமை வந்தேய்திய காலத்தும் தாம் நியமமாகக் கொண்ட சிவப்பணியாகிய திருவிளக்கேற்றும் பணியைக் குறைவிடாது கூலிக்குப் புல் அறுத்து விற்றாயினும், தம் முடியினை எரிக்க முயன்றானாயினும் ஆற்றல் வேண்டும். இங்ஙனம் செய்யின் எம்பிரான் திருவருளால் சிவலோகத்தில் நிலைத்திருப்பார். இங்ஙனம் செய்து சிவப்பேறு பெற்றவர் கணம்புல்ல நாயனார் என்பவர்.

                  *                                                              *                                                              *

இவர் வடவெள்ளாற்றின் தெற்கேயுள்ள இருக்குவேளூரில் தோன்றியவர். குடிக்கு முதல்வராய இவர், ‘சிவபெருமான் திருவடியே மெய்ப்பொருள்’ என்று துணிந்து, சிவாலயத்தில் நீங்காமல் திருவிளக்கு எரித்து வருவாராயினர். காலப்போக்கில் அவருடைய செல்வம் குறைய, வறுமை வந்தெய்திற்று. அப்போது அவர் தமது ஊரைவிட்டுத் திருத்தில்லையினை அடைந்து, அங்கே திருப்புலீச்சரம் என்னும் சிவன்கோயிலிலே திருவிளக்கேற்றும் நியமம் பூண்டார். பின்பு வறுமை மேலிடத் தம் மனையில் உள்ள பொருள்களை விற்று, திருவிளக்குப் பணியை ஆற்றிவந்தார். அதுவும் தாளாமை கண்டு, தம் உடல் முயற்சியால் அரிந்து கொண்டுவந்த கணம்புல்லை விற்று, வந்த பொருளைக் கொண்டு தொண்டாற்றி வந்தார். இங்ஙனம் ஒருநாள் அவர் விற்கவென வெட்டிக் கொணர்ந்த கணம்புல் போதாது போகவே, தம் தலைமுடியினை விளக்காக மாட்டி எரித்தார். அப்போது இறைவர் இச்செயற்கரிய செயலை மெய்ச்சி, அவருக்கு மங்கலமாம் பெருங்கருணை வைத்து, அவரை சிவலோகத்தில் பேரின்பப் பெருவாழ்வில் திளைக்கச் செய்தார். அவர் செய்த திருத்தொண்டு காரணமாக அவருக்குக் கணம்புல்ல நாயனார் என்னும் காரணப்பெயராயிற்று.

நாயனாரின் அழகான திருமேனி, திருத்தில்லை நடேசர் கோயிலுக்கு மேற்கே, சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ள திருப்புலீச்சரத்து இளமையாக்கினார் கோயிலில் எழுந்தருளப் பெற்றுள்ளது.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : செங்குந்தர்
நாடு : நாடு
ஊர் : இருக்கு வேளூர்
குருபூசை / திருநாள் : கார்த்திகை - கார்த்திகை

ஒரே பார்வையில் ...
திருத்தில்லை சென்று, கணம்புல்லு அறுத்து, விற்று, கிடைக்கும் பொருளைக் கொண்டு நெய் வாங்கி, திருப்புலீச்சரம் என்னும் இளமையாக்கினார் திருக்கோவிலில் விளக்கேற்றியவர். கணம்புல்லு இல்லாது ஒழிய, பொருள் அற்றுப் போய்விட்டது. அப்போது தமது தலை மயிரினையே விளக்கில் இட்டு எரித்து முத்தி பெற்றார்.