47. காரி நாயனார்


இனிய தமிழ்த்துறைகளில் கோவை பாடுதல் அரிய தமிழ்த்திறம். அரசரும் மதிக்கப் பயில்வது பெரும் வளத்தால் ஆவது. அரசர்பால் தம் கல்வித் திறத்தால் பெற்ற செல்வங்களைச் சிவனுக்கும், சிவனடியார்க்கும் சேர்ப்பிப்பது சிவபுண்ணியமாம். சிவனைக் குறிக்கும் இன்பமொழி கூறுதல் யாவர்க்கும் மனமகிழ்ச்சியைத் தரும். தமது புகழினை நிறுத்தி, அன்புடையவராகித் திருவருளால் திருக்கயிலாய மலையினை, காரியார் மனம் அடைந்தது போல, அவர் உடலும் சேர்ந்தது. அயரா அன்பு சிவப்பேற்றைத் தரும் என்ற சிந்தையோடு வாழ்ந்து பேறுபெற்றவர் காரியார் நாயனார் என்பார்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே திருக்கடவூர் என்னும் தலத்திலே காரி என்று ஓர் அந்தணர் வாழ்ந்துவந்தார். அவர் வண்தமிழின் துறைகளின் பயன் தெரிந்தவர். தம் பெயரால் காரிக்கோவை என்னும் ஒரு நூலை சொல் விளங்கவும், பொருள் மறைந்து கிடக்கவும் இயற்றினார். அந்நூலை அவர் தமிழ்நாட்டிலே ஆட்சி செய்துகொண்டிருந்த மூவேந்தரிடமும் எடுத்துச் சென்று, பொருள் விரித்துரைத்தார். அதனாலே மகிழ்ச்சியடைந்த மூவேந்தரும், பெருந்திரவியங்களைக் கொடுத்தனர். அவர் அத்திரவியங்களைக் கொண்டு சிவாலயங்கள் பலவற்றை எழுப்பியும், சிவனடியார் வேண்டுவன கொடுத்ததும், திருக்கயிலாய மலையை மறவாது இருந்தார். தமது புகழ் எங்கும் பரந்து செறிய, இடையறாத சிவான்பினாலே சிவனருள் பெற்று, வடகயிலை மலையை அடைந்து, என்றும் இறைவர் திருவடிகளைப் பணிந்திருந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் :
நாடு : சோழநாடு
ஊர் : திருக்கடவூர்
குருபூசை / திருநாள் : மாசி - பூராடம்

ஒரே பார்வையில் ...
மன்னர்களிடம் சென்று கோவை பாடி, பொருள் பெற்று, ஆலயப்பணி செய்தவர்.