48. நின்றசீர் நெடுமாற நாயனார்


அரசர்கள் தமக்குக் கீழுள்ள மனைவியார், அமைச்சர் முதலியோரது அறிவுறைகளுக்குச் செவிசாய்த்து, அதன்வழி ஒழுகினால், தமக்கும், தமக்குக் கீழ் பணியாற்றுபவர்க்கும், வாழும் குடிமக்கட்கும் நன்மை பயக்கும் என்பதைக் கூன்பாண்டியன் வரலாற்றில் காணலாம். சிவநெறி பெருகச் செங்கோல் உய்தல் அரசர்க்குச் சிறப்புத் தரும்; சிவபுண்ணியமும் தரும்; கடமையும் ஆகும். மனைவியாரது நன்மை கணவருக்குப் பெருநலத்தை விளைக்கும்.

இங்ஙனம் இக்குறிக்கோளுக்கு அமைய ஒழுகி, சிறப்பையும், சிவபுண்ணியத்தையும், பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரால் பெற்றவர், கூன்பாண்டியராய் இருந்து, பின் நின்றசீர் நெடுமாறன் ஆன பாண்டியர்.

                  *                                                              *                                                              *

மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் என்பவர், சோழமன்னரின் பாவையாகிய மங்கையர்க்கரசியாரின் கணவர். இவர் காலத்தில் சமணர் பலகிப் பெருகி, சமணசமயத்தைப் பரப்பி வந்தனர். இவர்களுடைய வலையில் சிக்கியிருந்த மன்னனை விடுவிக்கத் திருவுளங் கொண்ட மங்கையர்க்கரசியார், தாம் பிறந்த சோழநாட்டில் போல, புகுந்த நாட்டிலும் சைவமெய்ச்சமயம் பரவுதலை விரும்பி, அப்போது திருமறைக்காட்டிலே ஆளுடைய அரசுகளோடு இருந்த ஆளுடைய பிள்ளையாரை மதுரைக்கு எழுந்தருளச் செய்தார். ஆங்கு எழுந்தருளிய பிள்ளையார், பாண்டியன் முன் சென்று, திருவைந்தெழுத்து ஓதி, திருநீறு வழங்க, அவருக்கு அவரைப் பீடித்த சுரநோய் நீங்கிற்று. அப்போது பிள்ளையார், அனல்வாதம், புனல்வாதம் முதலியன செய்யும்போது, “வேந்தனும் ஓங்குக” என்று பாசுரம் பாட, பாண்டியனுடைய கூன் நிமிர்ந்து, நின்றசீர் நெடுமாறன் ஆயினார். பிள்ளையாருக்குத் தோற்ற சமணர்களை, அரசன் குறிப்பின்படி, குலச்சிறையார் என்ற அமைச்சர் கழுவேற்றினார். பாண்டியனும் சைவம் ஓங்கச் செய்தார். இங்ஙனம் பாண்டியன் செங்கோல் ஓச்சும்போது தம்மை எதிர்த்து வந்த வடபுலத்து அரசரை நெல்வேலிச் செருக்களத்தில் புறங்கண்டார். இப்பாண்டிய அரசன் சிவதொண்டுகள் பல ஆற்றி, சிவனுலகத்தை அடைந்து, பேரின்பம் உற்றிருந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அரசர்
நாடு : பாண்டிநாடு
ஊர் : மதுரை
குருபூசை / திருநாள் : ஐப்பசி - பரணி

ஒரே பார்வையில் ...
சமணராய் இருந்தவர். இவர் தேவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறை நாயனாரும் சம்பந்தரை அழைத்து, அரசரது சுரம் நீங்கச் செய்தனர். சம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீங்கி, அவர் திருவாக்கால் கூன் நிமிரப்பெற்று, சைவராகி, நெடுமாற நாயனார் ஆனார். சமணர்களை அமைச்சர் குலச்சிறையார் கழுவில் ஏற்றக் கட்டளை இட்டவர்.