5. விறன்மிண்ட நாயனார்


தவத்தின் வலிமை பெரிது. சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவம், பெரும் பயனைத் தரும். சிவன்கழல் இடத்தும், சிவனாரது மெய்அன்பர்கள் இடத்தும் பற்றுக் கொண்டு, பத்தி செய்து, பணிந்து ஒழுகுதல் வேண்டும். சிவனடியார்கள், சிவனுக்கு முன்னர் பேணிப் பணியத் தக்கவர். அடியாரைத் தொழாது, இறைவனை வணங்குவோர் திருக்கூட்டத்தை இகழ்ந்தவராகக் கருதப்படுவர். அடியார் பத்தியின் வசப்பட்டு செய்வன குற்றம் ஆகா. சிவத்தல யாத்திரை செய்தல், பாவங்களை நீக்கி, மன அமைதியையும், பிற நலன்களையும் தரும். திருத்தொண்டத்தொகை உலகம் போற்றத்தக்கது. சிவநெறி வழுவாது வாழ்ந்து, சிவனடிக்கீழ் கணநாதாராகும் தன்மை பெற்றவர் விறன்மிண்டர் என்னும் தீரனே.

                  *                                                              *                                                              *

பரசிராமன் என்பவர் ஜமதக்கினி முனிவரின் புதல்வர். இவர் சேர நாட்டிலே, திருச்செங்குன்றூர் என்னும் தலத்திலே, வேளாண் குடியிலே அவதரித்தவர். இவர் சிவபெருமானை பற்றாகவும், சிவனடியார் இடத்து அன்புடையவராகவும் வாழ்ந்தவர். இவர் இறைவன் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள் தோறும் சென்று, அங்கங்கே அடியார் கூட்டத்தை முன்னர் பணிந்து, பின்னர் சிவபெருமானை வணங்கிக்கொண்டு, திருவாரூர் சென்றடைந்தார். அங்கே தினமும் இறைவனை சேவித்துச் செல்லும் வழக்கமுடைய நம்பியாரூரர் ஒருநாள் தேவாசிரியன் என்னும் மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை தொழுது வணங்காது ஒதுங்கி, நேரே பூங்கோயிலினுள் சென்றார். அதுகண்ட விறன்மிண்டர், “தேவாசிரியனிடத்து பொலிந்து விளங்கிய திருத்தொண்டர்களை வணங்காது சென்ற வன்தொண்டன் புறகு. அவருக்குப் பிரான் ஆகிய இறைவனும் புறகு” என்றார். அதனால் மனம் வருந்திய நம்பியாரூரர், இறைவர் “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுக்க, “திருத்தொண்டத்தொகை” (VII-39 பண்கொல்லக்கௌவாணம்) பாடி, திருக்கூட்டத்தைத் தொழுது அணைத்தார். இங்ஙனம் பலநாள் சைவநெறி பேணி, திருத்தொண்டு செய்திருந்த விறன்மிண்ட நாயனார், மேன்மை உடைய கணநாயகராகும் நிலை பெற்று, சிவபெருமான் திருவடிக்கீழ் பேரின்பம் பெற்றார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : மலைநாடு
ஊர் : செங்குன்றூர்
குருபூசை / திருநாள் : சித்திரை - திருவாதிரை

ஒரே பார்வையில் ...
சுந்தரர் திருத்தொகை பாடக் காரணமாய் இருந்தவர். திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த திருக்கூட்டத்தில் ஒருவர். சுந்தரரோடு மாறுபட்டு, பின் சிவன் அருளால் நட்பாயினவர்.