51. கழற்சிங்க நாயனார்


சிவன்கோயில்களுக்குச் சென்று சிவனை வழிபடுதலும், தொண்டு செய்வதும் பெரும் சிவபுண்ணியமாம். இவை அரசரும் செய்யத்தக்கன. சிவாலயத்தில் சிவனுக்காகக் கொய்து வைத்த நறுமலர்களை எடுத்து மோத்தலும், பிறபண்டங்களைத் தாம் நுகர எண்ணுதலும், அவற்றில் ஆசை கொள்ளலும் சிவாபராதமாகும். சிவாபராதம் புரிந்தவர் தமது தேவியார் என்றும் பாராது அவருக்குத் தண்டனை விதிப்பார். இச்செயல் வேறுபற்றின்றி சிவன் பற்றைக் காட்டுவதாகும்.

                  *                                                              *                                                              *

கழற்சிங்க நாயனார் என்னும் பல்லவ அரசர் சிவபெருமான் திருவடிகளே அன்றி வேறு பற்றில்லாமல், வடபுலத்து நாடுகளைத் தமதாக்கி, சிவத்தலங்கள் பலவற்றிற்கும் முறையே சென்று சிவவழிபாடு ஆற்றி, திருவாரூர்ப் பூங்கோயில் வந்தடைந்தார். அவருடன் கோயில் வீதிவழியே வலம்வந்த தேவியார், திருவாரூர் அரநெறி என்ற கோயிலில் உள்ள பூமாலைக் குறட்டில், கீழே விழுந்த பள்ளித் தாமம் ஒன்றினை எடுத்து மோந்தார். அதனை அவ்வழியால் வலம் வந்துகொண்டிருந்த செருந்துணையார், தேவி செய்தது சிவாபராதம் எனக்கொண்டு, அவர் தலைமயிர்க் கற்றையைப் பிடித்துக் கீழே தள்ளி வீழ்த்தி, கருவிகொண்டு மலரை மணந்த மூக்கினை அரிந்தார். அப்போது அவ்விடத்துக்கு விரைந்து வந்த கழற்சிங்கனார் என்ற பல்லவ அரசன், நடந்தனவற்றை செருந்துணையார் சொல்லக்கேட்டு, முதலில் புதுமலரைத் தொட்டெடுத்த கையினை அன்றோ தண்டித்தல் வேண்டும் என்றுகூறி, தம் உடைவாளினை எடுத்து தேவியாரது கையினைத் துணிந்தார். கழற்சிங்கப் பல்லவ மன்னர் இங்ஙனம் சிவப்பணிகள் பல செய்து, செங்கோல் ஆட்சி புரிந்து, இறைவன் சேவடியின் கீழ் இருக்கும் உரிமையாகும் பேரருள் பொருந்தப் பெற்றார். (கழற்சிங்க நாயனார் III-ஆம் நந்திவர் பல்லவ மன்னன் என்பர்).

மேலதிக குறிப்புக்கள்
குலம் : குறுநில மன்னர்
நாடு : பல்லவநாடு
ஊர் :
குருபூசை / திருநாள் : வைகாசி - பரணி

ஒரே பார்வையில் ...
திருவாரூர் பூங்கோயில் தரிசனத்தின் பொருட்டு தேவியாரோடு சென்றிருந்த போது, சிவபூசிக்குரிய பூவொன்று திருவாரூர் அரநெறிக் கோயில் நிலத்திலே கிடக்க, அதனை தேவி எடுத்து மணக்க, அதனைக் காணப்பொறாது அங்குநின்ற செருத்துணை நாயனார் அவளுடைய மூக்கை அறுக்க, அதறிந்த கழற்சிங்கர் அவளுக்கு அத்தண்டனை போதாதென்று, மலரை எடுத்த அவள் கையையும் வெட்டிப் பேறு பெற்றவர்.