52. இடங்கழி நாயனார்

செங்கோலாட்சியின் குறிக்கோள் சைவநெறி தழைத்து, உலகம் சிறக்கச் செய்தலும், சிவன் கோயில்களில் வழிபாடு, அர்ச்சனைகள் மேன்மேல் விளங்கச் செய்தலுமேயாம். தமது பொருளைக் கவர்ந்தேனும் திருத்தொண்டு செய்தல் வேண்டும். அதன் பயனைத் தமக்குத் தரும் பெரியோரே உண்மையான சேமநிதியாவர். இங்ஙனம் வாழ்ந்து நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழைப்ப அருள் புரிந்து, சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தவர் இடங்கழி நாயனார் என்பவராவர்.

                  *                                                              *                                                              *

இந்நாயனார், இன்று புதுக்கோட்டை என்று வழங்கும் கோனாட்டு மாவட்டத்திலே, கொடும்பாரூரிலே வேளிர் என்ற சிற்றரசர் குலத்திலே உதித்தவர். இவர் திருத்தில்லையிலே பொன்னம்பலத்தைப் பொன்வேய்ந்த ஆதித்த சோழரது குலமுதல்வர். இவர் சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்து, சிவதொண்டுகளில் மேம்பட்டு விளங்கினார். கொடும்பாரூரிலே சிவனடியார்க்கும், சிவப்பணியில் நின்ற சிவனடியார் ஒருவர் இருந்தார். சிவனடியார்க்கு அளிக்க அமுது செய்யும் பண்டங்கள் அவருக்குக் கிடைத்தால் அரிதாக, அவர் அரசனுடைய மிகுந்த காவலையுடைய நெல் பண்டகசாலையினுள் சென்று, அங்கிருந்த நெல்லைக் கவர்ந்து சென்றார். பண்டகசாலைக் காவலாட்கள் அவரைக் கண்டுபிடித்து அரசர் முன் கொண்டு சென்று நிறுத்தினர். அரசர் வினாவியபோது, இடங்கழியார் என்ற சிவத்தொண்டர் உண்மையைச் சொன்னார். அடியாரின் தொண்டை உணர்ந்த அரசர், அவருக்கு இரங்கி, அவரை விடுவித்து, “இவர் அன்றோ எனக்குப் பண்டாரம்” என்று சொல்லி, “நெல் களஞ்சியத்தையே அன்றி நிதிப் பண்டாரமான வெல்லாம் தொண்டருடையனவே. அடியார் வந்து இவற்றைப் பெறுக” என்று பறை சாற்றுவித்தான். இவ்வாறு தண்ணளி நிறைந்தவராகிய இடங்கழி நாயனார் என்ற அரசர் திருநீற்றின் நெறி தழைப்ப நெடுங்காலம் செங்கோலாட்சி புரிந்து சிவனடி சேர்ந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அரசர்
நாடு : கோனாடு
ஊர் : கொடும்பாவூர்
குருபூசை / திருநாள் : ஐப்பசி – கார்த்திகை

ஒரே பார்வையில் ...
அடியார்கள் வழிபாட்டுக்கு வைத்திருந்த நெல்லைத் திருடினவர் திருத்தொண்டர் ஆதலின், அவருக்கு மேலும் பொருளும், நெல்லும் கொடுத்தவர்.