53. செருத்துணை நாயனார்

சிவபெருமான் திருமுன்றில் திருப்பணிகள் செய்தலும், சிவனை வழிபடுதலும் சிவபுண்ணியங்களாம். அங்கே நிலத்தில் ஆயினும் விழுந்து கிடந்த நறுமலர் சிவனுக்காவது. அதனைத் தமக்கென எடுத்தலும், மணத்தலும் சிவாபராதங்கமாம். சிவாபராதத்தைக் கண்டபோது அதனைத் தண்டித்தல் சிவனடியார் கடமை. சிவாபராதம் யார் மாட்டுக் கண்டாலும் ஒறுக்கத் தக்கது. பட்டத்துத் தேவியார் சிவன்கோயிலிலே பூமண்டபத்தில் கீழே விழுந்து கிடந்த புதுப்பூவை எடுத்து மோந்தமையைக் கண்ட செருந்துணையார் தேவியரின் மூக்கினை அரிந்து உலகில் திருத்தொண்டு விளங்கச்செய்து சிவனடி நீழல் எய்தினார்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூரிலே செருந்துணையார் என்றொருவர் வாழ்ந்தார். அவர் அங்கே சிறப்புடன் வாழ்ந்த வேளாண்குடியின் முதல்வராக இருந்த சிவனடியார். சிவபெருமான் மீது தலை சிறந்த உண்மை அன்பு பூண்டவராய் இருந்தார். ஒருநாள் பல்லவ மன்னனாய் இருந்த கழற்சிங்கரும், அவர் பட்டத்து அரசியும் சுவாமி தரிசனத்துக்காகத் திருவாரூர்ப் பூங்கோயிலுக்குச் சென்றார்கள். அங்கே நமிநந்தி அடிகள் தண்ணீரால் விளக்கேற்றிய அற்புதம் நிகழ்த்திய அரநெறிக்கும் சென்றார்கள். அப்போது அங்கே பூமாலை கட்டும் புனித இடத்தில், கீழே விழுந்து கிடந்த ஒரு பூவினை தேவியார் எடுத்து மோந்தார். அப்போது அங்கே நின்ற செருந்துணையார்  இச்சிவாபராதத்தைக் கண்டு மனம் போறாது, கருவி கொண்டு தேவியின் மூக்கினை அரிந்தார். இதனை அறிந்த கழற்சிங்கர், மனைவிக்கு செருந்துணையார் வழங்கிய தண்டனை போதாதென்று, பூவினை மோந்த மூக்கினை மாத்திரம் அல்ல, எடுத்த கையினையும் தண்டிக்க வேண்டும் என்று தடிந்தார். இங்ஙனம் சிவபெருமானின் திருத்தொண்டு உலகறிய செருந்துணை நாயனாரின் அடிமைத்தொண்டு உலகில் நிகழச்செய்து, பொன்னம்பலத்திலே தூக்கிய திருவடி நீழலிலே இறவாத இன்பம் எய்தினார். பூவினை எடுத்து மணந்த தேவியாரின் கணவர் கழற்சிங்கரின் வரலாறு 51-ம் புராணத்தில் காண்க.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : சோழநாடு
ஊர் : மருதல் நாட்டு தஞ்சாவூர்.
குருபூசை / திருநாள் : ஆவணி - பூசம்

ஒரே பார்வையில் ...
கழற்சிங்க நாயனாருடைய தேவி, திருவாரூர் பூங்கோயிலிலே கீழே விழுந்து கிடந்த சிவபூசைக்குரிய மலரை எடுத்து மோந்ததுக்காக, அவள் மூக்கை அரிந்தவர்.