54. புகழ்த்துணை நாயனார்

வீடுபேற்றைத் தரும் வழிபாடு சிவமறையோர் திருக்குலம் சிவனுக்கு வழிவழி சிவாகம விதிப்படி செய்யத்தக்கது. வற்கடம் வந்து, பசிப்பிணியால் உடல் வருந்தி, உள்ளம் மயங்கி வீழ்ந்தபோதும் சிவபூசையை விடாது செய்தால் இறைவர் பேரருள் புரிந்து காப்பாற்றுவார். இங்ஙனம் பஞ்சம் பசியால் வருந்தியபோதும், சிவபூசையை நெகிழவிடாது செய்தமையால், சிவனருளால் தினந்தோறும் அவரிடமிருந்து பணம் பெற்று, தம் கருமம் செய்து, சிவனடி சேர்ந்தவர் புகழ்த்துணை நாயனார் என்பவராவர்.

                  *                                                              *                                                              *

புகழ்த்துணை நாயனார் சோழநாட்டிலே உள்ள செருவிலிப்புத்தூர் என்னும் ஊரிலே பிறந்தவர். அவர் சிவவேதியர் மரபிலே தோன்றி, அவ்வூர்க் கோயிலிலே அகம்படித் தொண்டு செய்து, சிறந்து விளங்கினார். சிவகாம விதிப்படி சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டாற்றி வரும் காலத்திலே, நாட்டில் பஞ்சம் உண்டாயிற்று. புகழ்த்துணையார் அது காரணமாக மனம் வருந்தியபோதும், சிவன் பணியில் குறை விடாது, பூவும், நீரும் கொண்டு பூசனை செய்துவந்தார். இங்ஙனமாக ஒருநாள் அவர் வழிபாடு செய்யும்போது, பசிப்பிணியால் வருந்தி, மயக்கங் கொண்டு, திருமஞ்சனக்குடம் கை தவறி இறைவரது திருமுடிமேல் விழ, அவரும் நடுநடுங்கிச் சாய்ந்து விழுந்துவிட்டார். மயக்கங் கொள்ள அந்த இடத்திலே தூங்கிவிட்டார். அப்போது இறைவர் அவருடைய கனவில் தோன்றி, “உண்ணும் உணவு குறைந்த காலம் நீங்கும். அதுவரை இங்கு உனக்கு நாம் நிதமும் ஒரு காசு வைப்போம்” என்று அருளிச்செய்தார். மகிழ்ச்சி அடைந்த புகழ்த்துணையார் அன்றுபோல் எந்நாளும் இறைவர் வைத்தருளி வந்த காசைக் கொண்டு, சங்கடம் தந்த வற்கடம் நீங்கும்வரை தாம் செய்துவந்த சிவப்பணியைத் தொடர்ந்து செய்துவந்தார். இங்ஙனம் இறைவருடைய அகம்படித் தொண்டுகளைச் செய்து, அவரது திருவடி நீழலைச் சேர்ந்தார்.

சிவமறையோர் திருக்குலம் சிவபெருமானுக்கு வழிவழி அகம்படித் தொண்டு செய்வது. சிவமறையோர் ஆதிசைவர் எனவும் பெயர்பெறுவார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : ஆதிசைவர்
நாடு : சோழநாடு
ஊர் : செருவிலிப்புத்தூர்
குருபூசை / திருநாள் : ஆவணி - ஆயிலியம்

ஒரே பார்வையில் ...
சிவபூசை நியமமாகச் செய்து வந்தவர். நாட்டில் பஞ்சம் உண்டாக, பசிப்பிணியால் வருந்தினார். எனினும் சிவபூசையை முட்டின்றிச் செய்து வந்தார். ஒருநாள் சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டும்போது, பசிக்கொடுமையால் மயக்கம் கண்டு வீழ்ந்துவிட்டார். அன்று தொடக்கம், பஞ்சம் நீங்கும் காலம் வரை, இறைவன் காசு தரப்பெற்றவர்.