55. கோட்புலி நாயனார்

தம் தொழிலில் நடுநின்று, தேடிய பொருள் எல்லாம் சிவபெருமானின் திருவமுதின் படி பெருகச் செய்தல் சிவன் திருப்பணியாம். சிவன் திருவமுதுக்குரிய நெல்லினை, உணர்வின்றி இறக்க நேரிட்டாலும், அழித்தல், கவர்தல், தம் உணவுக்குப் போகித்தல் பெரும் பாவமும், சிவாபராதமுமாம். சிவாபராதத்துக்குரிய தண்டனை வழங்கும்போது, தாய், தந்தை, மக்கள், குழந்தைகள் என்ற பாகுபாடுகளைச் சிவனடியார் கருதுவதில்லை. சிவாச்சார்பு ஒன்றினையே பற்றி, உடற்சார்புத் தொடக்குகளை அறுத்த அந்நிலையே, சிவன் வெளிப்பட்டு அருளுவர். இங்ஙனம் சிவனை வழிபட்டு சிவானுலகம் அடைந்தவர் கோட்புலி நாயனார் என்பவராவர்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே திருநாட்டியத்தான்குடி என்றொரு சிவத்தலம் உண்டு. அங்கே வேளாண் குடியிலே அவதரித்த கோட்புலியார் என்னும் சிவனடியார் வாழ்ந்து வந்தார். அவர் அரசரிடம் சேனாபதித் தொழில் புரிந்து, கிடைத்த அளவில் செல்வதை சிவன்கோயில் திருவமுது படி பெருகும் திருத்தொண்டுக்கு ஆக்கி வந்தார். ஒருமுறை அவர், அரசரின் பகைவர் போரினை மேற்கொண்டு வேற்றுப்புலம் சென்றார். செல்லும்போது சிவனது அமுது படியாக நெல்லைக் கூடு-கூடாகக் கட்டிவைத்தும், சுற்றத்தாருக்கு தனித்தனியே கொடுத்ததும், போர்முனைக்குச் சென்றார். சிலநாளில் வற்காலம் நேர்ந்தது. சுற்றத்தார் பசியால் வருந்தி, சிவனமுது படியினை எடுப்போம் என்று, நெல் கூடுகளை அழித்துப் பசி நீங்கினர். சிலநாளில் வெற்றியுடன் மீண்ட கோட்புலியார், சுற்றத்தார் செய்ததை அறிந்து, அவர்களைத் துணிக்கத் துணிந்தார். நிதியும், துணியும் தருவதாகச் சொல்லி, அவர்களை அழைத்து, சிவனது ஆணையினை மறுத்து, அமுது படியினை அழித்த தந்தை, தாயார், உடன் பிறந்தார், சுற்றத்தார் உட்பட அனைவரையும் துண்டஞ் செய்தார். அப்போது இறைவர் வெளிப்பட்டு, “உன் கைவாளினால் பாசம் அறுத்த கிளைஞர் தேவர் உலகு புக, நீ இந்நிலையே நம்முடன் அணைக” என்று அருளிச்செய்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : சோழநாடு
ஊர் : திருநாட்டியத்தான்குடி
குருபூசை / திருநாள் : ஆடி - கேட்டை

ஒரே பார்வையில் ...
சிங்கடி, வனப்பகை என்ற தம் இரு புதல்வியர்களை சுந்தரருக்கு வழங்கியவர். சிவபூசைக்கு உரிய தாகத்தாம் போர்க்களம் செல்லும்போது வைத்துச் சென்ற நெல்லை, தாம் இல்லாதபோது பஞ்சம்-பசி காரணமாக எடுத்து உண்ட சிசு உட்பட, சுற்றத்தார் அனைவரையும் கொன்று பேறு பெற்றவர்.