56. பூசலார் நாயனார்

சிவனுக்குக் கோயில் அமைத்தல் சிறந்த சிவபுண்ணியம். புறத்திலே கோயில் அமைக்க நிதி இல்லாதவர்கள், அகத்திலே அமைக்கலாம். மிக்க பேறும் பெறலாம். மனக்கோயிலின் பெருமையை சிவபெருமானே உலகறியச் செய்வார்.

இங்ஙனம் சிவபெருமானுக்கு மனக்கோயில் அமைத்து, மேற்கொண்ட அன்பு காரணமாக, திருஅம்பலத்து ஆடும் தெய்வத்தின் பொற்கழ நீழலை அடைந்தவர் பூசலார் நாயனார் ஆவர்.

                  *                                                              *                                                              *

தொண்டைநாட்டிலே செல்வம் கொழித்த ஊராக விளங்கியது திருநின்றவூர். அங்கே வாழ்ந்து வந்த பூசலார் என்பார் சிவனடியார்க்குப் பொருள் தேடிக்கொடுத்து வந்தார். அரன் பணிக்குப் பொருள் இல்லாது போகவே, அவர் மனத்தினாலே கோயில் அமைக்க முயன்று, மனதின்கட் சிறிதாக ஒரு கோயில் எடுத்தார். அக்கோயில் சிவாகம முறைப்படி எல்லா உறுப்புக்களையும் கொண்டிருந்தது. கோயில் எழுப்பியபின் இறைவரை அங்கே தாபிக்க எண்ணி, நல்ல நாளும், நல்வேளையும் வகுத்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் காடவர்கோன் என்னும் பல்லவ அரசன், தான் அமைத்த அற்புதமான கச்சித்தளியில் சிவனைத் தாபிக்க அந்நாளையே குறித்தனன். இறைவர் அவனுக்குக் கனவில் தோன்றி, அடுத்த நாள் திருநின்றவூருக்குப் போக இருப்பதாகவும், காஞ்சிக் கற்றளி நிகழ்ச்சியை வேறொரு நாளில் கொள்ளவும் சொன்னார். துயில் உணர்ந்த அரசன், அடுத்தநாள் சிவனடியார் எழுப்பிய கோயிலைப் பார்க்கத் திருநின்றவூர் சென்றார். அங்கே கோயில் எதனையும் காணாது, பூசலாரைக் கோவிலைக் காட்டச் சொன்னான். பூசலார் நிகழ்ந்தவற்றைக் கூற, சிவனடியாரை நிலமுற வீழ்ந்து வணங்கினார்.

இங்கு கூறப்பெற்ற காடவர்கோன் இராசசிம்மன் நரசிங்கவர்மன் II என்ற பல்லவ அரசர் (கி.பி 700-720) ஆகும். கற்றளி குடைவரை கோயிலாகிய காஞ்சிக் கைலாசநாதர் கோயிலாகும். இது திருக்கையிலாயத்தில் உள்ள கோயில் போன்றே அமைக்கப்பட்டது என்பர்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : தொண்டைநாடு
ஊர் : திருநின்றவூர்
குருபூசை / திருநாள் : ஐப்பசி - அநுடம்

ஒரே பார்வையில் ...
காஞ்சியில் பல்லவ மன்னன் எழுப்பிய கற்றளியில் கும்பாபிஷேகத்தை ஏற்காது, இறைவரை, தமது மனதினாலே கட்டிய கோயிலுக்கு எழுந்தருளச் செய்தவர்.