57. மங்கையர்க்கரசியார் (மானியார்)

தாம் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தருதல், புகுந்த மரபுக்கு வரக்கூடிய பழியை நீக்கி, நன்னெறிக்கட் செலுத்துதல், தமது குடும்பத்துக்கு வரும் இடர்களை நீக்கிப் பெருநெறிக்கட் செலுத்துதல், ஞானாசாரியரை அடுத்து நாடு நலம்பெறும் பொருட்டு அவர் அருளை நாடிப் பெறுதல் முதலியன கற்புள்ள பெண்களின் செயல்களாகும். பெரியவர்களின் பாராட்டைப் பெறுதல் பெரும் பேறு. அது முன்னைத் தவத்தால் வருவது. தமது நாயகரது உயிர்க்கு உறுதி பயக்கும் நெறிவழி அவரைச் செலுத்துதல், உற்றுணையாய் இருத்தல் முதலியன சிறந்த கற்புக்கரசிகளின் செய்கையும், தன்மையுமாம். இங்ஙனம் கணவர் நின்றசீர் நெடுமாறன் நாயனாரோடு சிவபெருமானது திருவடி அடைந்தார்.

                  *                                                              *                                                              *

மங்கையர்க்கரசியார், பொன்னி நாடென்னும் சோழநாட்டிலே, சோழ அரசர் திருக்குலத்திலே தோன்றி, கன்னி நாடென்னும் பாண்டிநாட்டிலே பாண்டிய அரசர் குலத்துதித்த நெடுமாறனுக்குப் பட்டத்து அரசி ஆனவர். மங்கையர்க்கெல்லாம் தனி அரசி. சோழர் திருக்குலக் கொழுந்து. செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல்வார். கன்னி நாட்டிலே, பாண்டியர் குலத்துக்குச் சமணர்களால் நேர்ந்த பழியையும், இடரையும், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவருள் துணைக்கொண்டு, நீக்கித் தீர்த்துவைத்த தெய்வப் பாவை. தெய்வத் திருநீற்றின் ஒளி விளங்கச் செய்த கற்புடைத் தெய்வம். ஆளுடைய பிள்ளயாராலே பாசுரத்தில் (III-120-1) பாராட்டப்பெறும் பெருந்தவத்தினை உடையார். பாண்டியன் நெடுமாறனுக்கு நெடுங்காலம் வழித்துணையாய் வாழ்ந்து, சிவப்பெரும் நெறிவழியே  ஒழுகி, அவரோடு கூட, சிவபெருமான் திருவடிக்கீழ் பேரின்பம் எய்தி அமர்ந்திருந்தார்.

மங்கையர்க்கரசியார், பெரியபுராணத்தில், சேக்கிழார் நாயனார் தனித்தனியே புராணம் இயற்றிச் சிறப்பித்த மூவருள் இவர் ஒருவர். ஏனைய இருவரும் காரைக்கால் அம்மையார் என்னும் புனிதவதியார், சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயார் ஆகிய இசைஞானியார். ஏனைய சைவமங்கையர் திலகங்கள் ஆங்காங்கே இலைமறை காய்கள் போல விளங்குவர்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அரசியர்
நாடு : பாண்டிநாடு
ஊர் :
குருபூசை / திருநாள் : சித்திரை - ரோகினி

ஒரே பார்வையில் ...
வளவர்கோன் பாவை. பாண்டியன் மாதேவி. அமைச்சர் குலச்சிறை நாயனாரோடு இணைந்து, சம்பந்தரை அழைத்து, தமது கணவனாராகிய கூன்பாண்டியனையும், நாட்டையும் சமணப் படுகுழியின் நின்றும் மீட்டு, மீண்டும் சைவமாக்கியவர். இங்ஙனம் பிறந்த அகத்துக்கும், புகுந்த இடத்துக்கும் பெருமையும், புகழும் தேடித் தந்தவர்.