58. நேச நாயனார்

குலமரபுத் தொழில் செய்து வாழும் நிலையில், அதனையே சிவதொண்டாகச் செய்தல் வேண்டும். தம் மரபுத் தொழில் செய்யும்போது சிவனை நினைத்திருப்பதும், திருவைந்தெழுத்தை ஓதுதலும், உடம்பினால் செய்யும் தொழில்களை சிவனடியார்க்கு அளித்தலும் ஆகிய பணிகளைச் செய்தல் வீடுபேற்றைத் தரும். அடியார்களுக்கு வேண்டுவனவற்றை ஈயும் ஆற்றல் அளிப்பது சிறந்த சிவபுண்ணியம். அடியார் வழிபாடு வீடுபேறு தரும். இங்ஙனம் வாழ்ந்து வீடுபேறு அடைந்தவர் நேச நாயனார் என்பவர்.

                  *                                                              *                                                              *

சோழநாட்டிலே மயிலாடுதுறை நகரத்துக்கு அருகிலே கூறைநாடு என்று ஒரு பகுதி உண்டு. அங்கே காம்பீலி என்ற சிறுநகரத்தில் அறுமையார் குலத்தில் செல்வமிக்க குடியில் நேசனார் என்றொருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானையும், சிவனடியார்களையும் மறவாது, திருவைந்தெழுத்து ஓதுதல், திருநீறு அணிவது முதலியவற்றை நியமமாகச் செய்துவந்தார். தமது மரபின் வழி, சிவனடியார்க்கு உடையும், கோவணமும், கீளும் நெய்வதாகிய கைத்தொழில் செய்து, சிவனடியார்க்கு வழங்கி வருவாராயினர். இங்ஙனம் சிவனடியார் வேண்டியவாறு இடையறாது அளித்து, நாளும் அவர் கழல் இறைஞ்சி, ஏத்தி, அரனடி நீழல் எய்திப் பேரின்பப் பெருவாழ்வு பெற்றார்.

காம்பீலி என்பது கொறநாடு என வழங்கப்பெறுகிறது. அங்கேயுள்ள சிவாலயத்தில் நாயனாருக்குத் தனிச் சந்நிதி உண்டு.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அறுவையர்; சாலியர்
நாடு : சோழநாடு
ஊர் : காம்பீலி
குருபூசை / திருநாள் : பங்குனி - ரோகினி

ஒரே பார்வையில் ...
சிவனடியார்க்கு உடை, கீழ் கோவணம் நெய்து ஈய்ந்தவர்.