6. அமர்நீதி நாயனார்


சிவனடியார்க்கு அமுது அளித்தலும், அவர் கருத்து அறிந்து, கந்தை, கீளுடை, கோவணம் முதலியன உதவுதல், சிவபெருமான் திருஎழுச்சி சேவித்தல் சிறந்த சிவ புண்ணியங்கள். கங்கையும், காவிரியும் ஆடுதலினும், அன்பர்தம் அன்பாகிய தூயநீரில் ஆடுதலில் மிக்க விருப்பம் உடையவர் சிவபெருமான். புண்ணியச் சிவத்தலங்களிலே திருமடங்கள் கட்டுவித்து, புண்ணிய காலங்களிலே சிவனடியார்க்கு அன்போடு அமுது அளித்தல் பெரும் சிவபுண்ணியமாம். தம்மிடம் பாதுகாப்புக்காக ஒப்புவித்த எந்தச் சிவபொருளையேனும் முறைப்படி பாதுகாத்து, உரியவர் அதனைத் திருப்பிக் கேட்கும்போது, பக்குவமாகக் கொடுத்தல் வேண்டும். அதனின்றும் தவறுதல் மிகவும் தகாத செயலும், பெரும் பிழையுமாம். மறையவர் குலத்து வந்த பிரமசாரி, பாதுகாப்புக்காகக் கொடுத்த கோவணத்தை, தாம் வைத்த இடத்தில் தேடி, காணாது திகைத்த அமர்நீதி என்னும் சிவநெறிச் செல்வர் ஆகிய வணிகர், தம்மையும், தம் மனைவியையும், புதல்வனையும், மற்றும் பொருள்களையும் ஒப்புவித்தும், தமது கோவணத்துக்கு ஈடாகக் கொடுத்த நிலையில், மறைப்பிரமசாரியாக வந்த சிவபெருமான், மறைந்து, ஆகாயத்தில் உமாதேவியாரோடு காட்சி கொடுத்து, மூவருக்கும் அழிவில்லாத சிவபதம் அருளினார்.

                  *                                                              *                                                              *

அமர்நீதி என்பவர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பழையாறை என்னும் பாடல் பெற்ற தலத்தில் அவதரித்தவர். அவர் ‘சிந்தை செய்வது சிவன் கழலல்லது ஒன்றில்லை’ என்னும் குறிக்கோளுக்கு அமைந்தவராய், அந்தி வண்ணர்தம் அடியவர்க்கு பெருகும் இன்பத்தோடு அமுது செய்வித்தல், குறிப்பறிந்து அவர் வேண்டும் கந்தை, கீளுடை, கோவணம் முதலியன உதவுதல் ஆகியனவற்றை ஆற்ற விரும்பி, அண்மையில் உள்ள திருநல்லூர் தலத்துக்கு மனைவியுடனும், மைந்தனுடனும் சென்று, அங்கே திருமடம் அமைத்து, இறைவர் திருவிழா அணிசேவித்து வந்தார். இங்ஙனமாக ஒருநாள் இறைவர் வேதியர் பிரமசாரியாக வேடம் மேற்கொண்டு, அமர்நீதியார் பால் சென்று, தம் கோவணத்தை அவரிடம் கொடுத்து, “இதனைப் பாதுகாத்து, நான் மீண்டு வந்து கேட்கும்போது தருதல் வேண்டும்” என்று சொல்லி, சென்றார். பின் இறைவர் அக்கோவணத்தை அமர்நீதியாரிடம் இருந்து மறைப்பித்து, மீண்டு வந்து, அமர்நீதி அடியவரிடம் கோவணத்தைக் கேட்க, அதனைப் பாதுகாப்பாகப் பேணிவைத்த இடத்தில் காணப்பெறாது தவித்தார். அதற்கு ஈடாக, வேறு நல்லதோர் கோவணம், பட்டுடை முதலியனவும், அவற்றை விரும்பாராகி, தம்முடைய கோவணமே தமக்கு வேண்டும் என வற்புறுத்தி நின்றார். செய்வதின்ன அறியாது திகைத்து நின்ற அமர்நீதியை, நேராகத் தண்டினில் இருந்த அடுத்த கோவணத்தை அவிழ்த்து, “இதன் எடைக்கு சமமான கோவணம் இது. இதற்குச் சமமான கோவணம் தாரும்” என்று, துலையின் ஒரு தட்டில் இட்டு, மற்றத் தட்டில் ஒரு கோவணமும், பின் பல பொருள்கள் இட்டும், தட்டுகள் நேர் நிற்கவில்லை. பின் அமர்நீதியாரும், மனைவியும், மைந்தனும் துலையை வலம் வந்து, “இறைவரது திருநீற்று மெய்யடிமைத் திறத்திலே நாங்கள் பிழைத்திலேம் என்பது உண்மையாயின் இத்துலை நேர் நிற்க” என்று சொல்லிக்கொண்டு, திருநல்லூர் இறைவரை வணங்கி, திருவைந்தெழுத்தோதி, தட்டின் மீது மூவரும் ஏற, துலை நேர் நின்றது! மறைப் பிரமசாரியாய் வந்த இறைவர் மறைந்தருளினார். அவர் வானத்திலே, தேவியாரோடு காட்சி தந்து அருள, மூவரும் துலையே விமானமாகத் தாங்கிச் செல்ல, ஆதிமூர்தியாருடன் சிவபுரி அடைந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வணிகர்
நாடு : சோழநாடு
ஊர் : பழையாறை
குருபூசை / திருநாள் : ஆனி – பூரம்

ஒரே பார்வையில் ...
திருநல்லூருக்குச் சென்று திருமடம் அமைத்து, சிவனடியார்க்குத் தொண்டுசெய்து வரும்போது, ஒருநாள் ஒரு சிவனடியார் பாதுகாப்புக்காகக் கொடுத்த கோவணம் காணாது போகவே, அதற்கு நிறையாக பட்டுக்கோவணம் கொடுத்தும், அவை நிகராகாமையால், மனைவி, மக்கள் சொத்துக்களுடன், தம்மையும் சிவனடியாருக்குத் தர, இறைவரால் ஆட்கொள்ளப் பெற்றவர்.