60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

யாழ் இயற்றுதல் பாணர்க்குரிய தனிச்சிறப்புத் தொழில். இசையில் வல்ல பாணர், திருக்கோயில்களின் வாயிலின் நின்றாயினும் தம் அடிமைத்திறம் புலப்பட, இறைவரது புகழை யாழில் அமைத்துப் பாடுதல் பெரும் புண்ணியமாம். இங்ஙனம் செய்த யாழ்ப்பாணருக்குத் திருவாலவாயுடையாரும், திருவாரூர் இறைவரும் அளித்த பேரருள் நோக்குக. இத்திருப்பாணர் பரமாச்சியாரை, சீகாழி சென்று வணங்கி, அவர்தம் திருக்கூட்டத்துடன் சேர்ந்து, அவர்களோடு தலயாத்திரை சென்று, செல்லும் இடமெல்லாம் பிள்ளையார் பாடிய தேவாரத் திருப்பாடல்களைத் தம் சகோடயாழில் அமைத்து வாசிப்பாராயினர். திருநீலகண்ட நாயனார் மனைவியார் மாதங்கசூளாமணியார் ஆவர்.

                  *                                                              *                                                              *

நடுநாட்டிலே திருஎருக்கத்தம்புலியூர் என்னும் சிவத்தலத்திலே திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்தார். பாணர் மரபில் பிறந்தார் ஆதலின் யாழில் வாசித்தலில் மிக்க சிறப்பெய்தி விளங்கினார். சிவபெருமானிடத்து மிக்க பத்தி பூண்டு, அவரது பெருமைகளை யாழில் இட்டு வாசிக்கும் நியமம் உடையவர். இவரது மனைவியாராகிய, இசைவடிவான மாதங்கசூளாமணியாரும் இனிய மிடற்றோசையினார், இவருடன் தலங்கள் தோறும் சென்று, மிடற்றினால் திருப்பாடல்கள் பாடி, சிவனைப் பரவுதலை வழக்கமாக உடையவர். இவ்வாறு சோழநாட்டுத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு, இருவரும் பாண்டிநாடு சென்று, மதுரை என்னும் திருவாலவாய் அடைந்து, தம் மரபுப்படி மிடற்றினால் பாடி, யாழ் வாசித்தனர். சோமசுந்தரப் பெருமானின் ஏவற்படி, தொண்டர்கள் அவர்களைத் திருமுன் அழைத்துச்சென்றனர். “தரையிற் சீதம் தாக்கி பாணர் பாடும் சந்தயாழ் வீக்கியழியும். அவருக்குப் பலகை இடுமின்” என இறைவர் ஆணையிட, தொண்டர்கள் பொற்பலகை இட்டனர். யாழ்பாணர் அப்பலகை மீதிருந்து யாழ் இயற்றித் துதித்துத் திருவருள் பெற்றார்கள்.

பின் சோழநாட்டுக்குச் சென்று, செல்வத் திருவாரூர் அணைந்தார்கள். அங்கே தம் குலமரபுப்படி, கோயிலினுள் செல்லாது, புறத்தே நின்று யாழிசை பாட, இறைவர் கோயிலின் வடதிசையில், அவர்களுக்கென வேறான தனி வாயில் வகுத்து அருள, நாயனாரும், மனைவியாரும் அதனூடு புக்கு, திருமூலட்டானேசுவரம் சென்று, வான்மீகநாதரை யாழிசை மீட்டு வணங்கினார்கள்.

பின்பு ஆளுடைய பிள்ளையாரை வணங்குதற்கு, அவர் திருப்பதியாகிய சீகாழி சென்றனர். நாயனாரும், மனைவியாரும் வந்த செய்தி கேள்விப்பட்ட பிள்ளையார், அவர்களுக்கு உரிய சிறப்புச் செய்தார். அந்நாள் தொடங்கி பிள்ளையார் பாடிய பதிகங்களை யாழில் அமைத்து வாசிக்கும் பேறு பெற்றார். நாயனாரின் தாயார் பிறந்த தலமாகிய திருத்தருமபுரத்தை அடைந்தபோது சம்பந்தர், “மாதர் மடப்பிடி” என்னும் பதிகத்தைப் பாட, அது அமையாதமை கண்ட நாயனார், யாழை ஓங்கி முரிக்கத் தொடங்கினார். அப்போது, “ஐயரே இந்த யாழை முரிப்பது என்னை? அதனை என்னிடம் கொடும்” என்று வாங்கிய சிறப்பையும் நாயனார் பெற்றனர். பிள்ளையாரும் திருச்சாத்தமங்கை என்னும் தலத்துக்குச் சென்றபோது, பிள்ளையார் திருநீலநக்கரை நோக்கி, “யாழ்ப்பாணர்க்கும் விறலியார்க்கும் இரவு தங்க ஓரிடம் கொடுப்பீராக” என, நீலநக்கர் இவர்களுக்கு தமது இல்லத்தின் நடுவேயுள்ள நித்தியாக்கினியாகிய செந்தீ வேள்விக்குரிய வேதியர் பாங்கர் இடம் வகுத்துக் கொடுக்க, செந்தீ சுடர்விட்டு வலம்வந்து, நீலகண்ட நாயனாரையும், விறலியாரையும் வாழ்த்திய பெருமையும் பெற்றனர். இங்ஙனம் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடன் தலங்கள் சென்று, சுவாமி தரிசனமும் செய்து, யாழிசைப் பணியும் ஆற்றி, இருவரும் திருநல்லூர்ப் பெருமணத்தில், பிள்ளையாரின் திருமணத்தைச் சேவித்து, அவருடனே அங்குத் தோன்றிய சோதியுட் கலந்து சிவலோகம் சேர்ந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : பாணர்
நாடு : நடுநாடு
ஊர் : எருக்கத்தம் புலியூர்
குருபூசை / திருநாள் : வைகாசி - மூலம்

ஒரே பார்வையில் ...
திருவாரூர், திருவாலவாய் முதலிய தலங்களைத் தரிசித்து, இறைவன் முன்னிலையில் யாழ் வாசித்துத் திருவருள் பெற்று, சம்பந்தரைத் தரிசிக்க சீகாழி சேர்கிறார். அங்கே அவர் அருள் பெற்று, அவருடன் தலங்கள் தோறும் சென்று, அவர் பாடும் பாடல்களை யாழில் செவ்வனே அமைத்து, வாசித்துத் தொண்டு புரிந்தார். பின் அவருடைய திருமணத்திலே, திருப்பெருமணநல்லூரிலே, அங்கிருந்த எல்லோருடனும், மனைவி விறலியாரோடு சோதியில் கலந்தார்.