63. சுந்தரமூர்த்தி நாயனார்

மக்கள், தேவர், நரகர்களுள் யாராய் இருந்தாலும் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளின் பலாபலன்களை அனுபவித்தே தொலைக்கவேண்டும். இவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து, இறைவனிடம் தம்மைத் தடுத்தாட்கொள்ள வேண்டுமென்று பக்தியோடு வேண்டிக் கொண்டால், வேண்டுவார் வேண்டுவதை ஈன்றருளும் பரமகருணாநிதியாகிய சிவபெருமான், அவர்கள் வேண்டியவாறு உற்றுழி உதவி, தடுத்தாட்கொள்ளுவார். இங்ஙனம் திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் இருந்த ஆலால சுந்தரர், பூக்கொய்யும்போது, நந்தவனத்தில் உமாதேவியாரின் சேடியர் இருவர்மீது விருப்பம் கொண்டமையால், சிவபெருமான் ஆணையின் வழி, பூவுலகத்தில் அவதரித்ததும், திருவொற்றியூரில் இறைவர் முன்னிலையில் சங்கிலியாருக்குச் செய்துதந்த சபதம் பிழைத்தமையால் கண் இழந்து, உழன்று, பின் அவர் இறைவரை வேண்டிக்கொண்டபடி, அவர் தடுத்தாட்கொள்ளப் பெற்று, திருக்கயிலையில் பழையபடி அணுக்கத் தொண்டராயினார்.

                  *                                                              *                                                              *

திருக்கயிலாய மலையிலே சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் இருந்த ஆலாலசுந்தரர், திருநந்தவனத்திலே மலர் கொய்துகொண்டிருந்தபோது, உமாதேவியாருக்குப் பூப்பறித்துக்கொண்டிருந்த அவர் சேடியர்களாகிய அநிந்திதை, கமலினியைக் கண்டு, அவர்கள்மேல் ஆசை கொண்டார். இதனை அறிந்த சிவபெருமான், “நீ பெண்கள்மேல் விருப்பம் வைத்தமையால், நீ தென்திசைக்கண் மானுடப்பிறவி எடுத்து, அப்பெண்களோடு இன்பம் அனுபவிப்பாய்” எனக் கூறி அருளினார்.

இக்கட்டளையை மேற்கொண்டு, ஆலாலசுந்தரர், திருமுனைப்பாடி நாட்டிலே, திருநாவலூரிலே, ஆதிசைவர் குலத்திலே, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய சடையனார் என்பவர்க்கும், குற்றமற்ற கற்புடைய இசைஞானியாருக்கும் புதல்வராக அவதரித்தார். அவருக்கு மரபுவழி நம்பியாரூரர் எனப் பெற்றோர் பெயரிட்டனர். ஆரூராரைக் குழந்தையாகக் கண்ட அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையர், அக்குழந்தையை வேண்டிப்பெற்று மகன்மை கொண்டார்.

இங்ஙனம் வைதீகத்திருவும், மன்னர் திருவும் இணைந்து வளர்ந்துவந்த நம்பியாரூரர் மணப்பருவம் எய்தினார். பெற்றோர், திருநாவலூருக்கு அருகேயுள்ள புத்தூரிலே ஒத்த குலம், கோத்திரத்து சடங்கி சிவாசாரியாரின் செந்திருவனைய கன்னியை திருமணம் செய்ய விழைந்தார். திருமணத்தில் அன்று சிவபெருமான் புத்தூருக்கு முதிய வேதியர் வடிவில் எழுந்தருளி, திருமணத்தைத் தடுத்து, ஆரூரரைத் தடுத்தருளினார். பின் ஆரூரையும், வேதியர்களையும் விட்டு, திருவருட்டுறைக் கோயிலுக்குள் சென்று மறைந்தருளினார். ஆரூரர்க்கு இறைவர், “என்னைப் பித்தன் என்ற நீ, பித்தா என்றே தொடங்கிப் பாடுக” என்று அடியெடுத்துக் கொடுக்க, ஆரூரர் பதிகம் பாடியருளினார்.

பின் தலயாத்திரை செய்ய விரும்பி, திருவதிகை சென்று, அன்றிரவு அங்குள்ள சித்தவடமடத்தில் தூங்கினார். தூங்கும்போது இறைவர் திருவடி தீட்சை செய்தார். அப்போது ஆரூரர், “தம்மானை அறியாத சாதியார் உளரோ” என்ற பதிகம் பாடியருளினார். அங்கிருந்து திருத்தில்லை, சீகாழி முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருவாரூர் சென்றடைந்தார். கோயிலினுள் அழைத்துச் செல்லப்பட்ட ஆரூரர், தேவாசிரிய மண்டபம் வணங்கி, திருமூலத்தானம் சென்று, வன்மிகநாதர், தியாகேசர் முதலியவர்களை வணங்கி, வெளியே வந்தார். அப்போது, முன் திருக்கயிலையில் இருந்த கமலினியார், திருவாரூரில் கணிகையர் குலத்தில் பிறந்து, பரவையார் என்னும் பெயரோடு வாழ்ந்தவரைக் கண்டு, அவரை மணம் செய்தார்.

ஆரூரர் ஒருநாள் தேவாசிரிய மண்டபத்தின் எதிரில் நின்று, “இங்கிருக்கும் சிவனடியார்களுக்கு நான் அடிமையாகும் எந்நாளோ” என்று ஏங்க, இறைவர், “தில்லைவாழ் அந்தணர்” என்று அடியெடுத்துக் கொடுக்க, நம்பியாரூரர், 63 தனியடியார்களுக்கும், 9 தொகையடியார்க்கும் “நான் அடியேன்” என்று திருத்தொண்டத்தொகை பாடியருளினார். இதுவே பின்னர் சேக்கிழார் நாயனார் திருத்தொண்டர் புராணம் பாட ஆதாரம் ஆயிற்று.

குண்டையூர்க் கிழார், நம்பியாரூரருக்கு நெல்லும், பருப்பும் முதலியன தந்து வந்தார். மழையின்மையால் அவை கிடையாதுபோக, இறைவன் நெல்மலைகளை வழங்கினார். அவற்றைத் திருவாரூருக்கு எடுத்துச்செல்ல ஆளில்லையே என ஆரூரர், “நீள நினைந்தடியேன்” என்றுபாடி வருந்த, சிவனருளால் சிவபூதங்கள் வந்து அவற்றைத் திருவாரூரில் கொண்டு சேர்த்தன.

அங்கிருந்து ஆரூரர் அண்மையில் உள்ள திருநாட்டியத்தான்குடிக்குச் செல்ல, அங்கிருந்த கோட்புலியார் என்னும் ஆரூராரின் அன்பர் அவரை வரவேற்று, தம் புதல்வியர் இருவரையும் அடிமைகளாக ஏற்றருளும்படி வேண்டியபோது, நாயனார் அவர்கள் என் புத்திரிகள் என்று சொல்லி, உச்சி மோந்தார். தேவாரங்களே ஆரூரர் தம்மை சிங்கடியப்பன் வனப்பகையப்பன் என்று கூறும் வழக்குடையர்.

திருப்புகலூரை அடைந்தபொழுது தூக்கம்வர, அங்கே இருந்த செங்கற்கள் சிலவற்றை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கித் தலையணையாகக் கொண்டு தூங்கினார். விழித்துப் பார்த்தபோது, அக்கற்கள் பொற்கற்கள் ஆயினமை கண்டு, “தம்மையே” என்ற பதிகத்தைப் பாடியருளினார்.

திருநனிப்பள்ளி முதலாகிய பதிகளை வணங்கிக்கொண்டு போக, இறைவர், “திருமழபாடிக்கு வர மறந்தனையோ?” என, நாயனார் அங்குச் சென்று, “பொன்னார் மேனியனே” என்னும் தேவாரம் பாடி, சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பாச்சிலாச்சிரமம் சென்று, “வைத்தனன் தனக்கே” என்றெடுத்து அருளி, பொற்குவை பெற்று, திருமுதுகுன்றத்துக்கு ஏகினார். வழியில் இறைவர் அந்தணவேடம் பூண்டு, கூடலையாற்றூருக்கு வழிப்படுத்தப்பட்டார். “மழுவுடை மழுவேந்தி” என்ற பதிகம் பாடி, திருமுதுகுன்றம் சென்றார். அங்கே அவர் சுவாமி தரிசனம் செய்யும்போது, அவர் சுந்தரருக்கு 12,000 பொன் கொடுக்க, நாயனார் அவற்றை திருவாரூரில் தந்தருள வேண்டினார். சிவனருளால் சுந்தரர் பொன் முழுவதையும் அங்கே ஓடும் மணிமுத்தாற்றில் இட்டார். நாயனார் திருமுதுகுன்ற வழிபாட்டை முடித்துக்கொண்டு, திருத்தில்லை முதலாம் தலங்களை வணங்கிக்கொண்டு, திருவாரூரை அடைந்தார். திருமுதுகுன்றத்திலே மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை, திருவாரூரிலே இருக்கும் கமலாலயம் என்னும் திருக்குளத்தில், “பொன் செய்த மேனி” என்று பாடி, பொன்னை எடுத்து, பரவையாரிடம் கொடுத்தார்.

மீண்டும் தலயாத்திரை செய்ய விரும்பி, தலங்கள் தோறும் சென்று, திருக்குருகாவூர் சென்றடைந்தார். அப்போது பசியினாலும், தாகத்தினாலும் வருந்தியவருக்கு, பிராமண வேடங்கொண்ட சிவபெருமான், பொதிசோறும், தண்ணீரும் கொண்டு, புதிதாய் அமைந்த பந்தரில் கொண்டுவந்து கொடுக்கப் பரிசனரோடண்டார். இங்ஙனம் வழங்கியவர் சிவபெருமானே என்றுணர்ந்த சுந்தரர், “முதுவாயோ” என்றெடுத்துப் பதிகம் பாடினார். பின் காஞ்சி சென்று, அங்குள்ள தலங்களைத் தரிசித்து, திருவோணகாந்தன் தளியிலே, “நெய்யும் பாலும்” என்றெடுத்துப் பாடி, பொன் பெற்றார்.

அங்கிருந்து வழியில் பல தலங்களை வணங்கிக்கொண்டு, திருவொற்றியூர் சென்றார். அங்கே முன்பு உமாதேவியாரின் சேடியராய் இருந்த அநிந்திதையார், திருவொற்றியூருக்கு அண்மையில் உள்ள ஞாயிறு என்னும் பதியில், ஞாயிக்கிழாருக்கு புதல்வியாய்ப் பிறந்து, சங்கிலியார் என்னும் திருப்பெயரோடு, தனக்கு மணம் வேண்டாம் என்று கூறி, திருமடம் அமைத்து, சிவதொண்டில் மூழ்கியிருந்தார். ஒருநாள் சுந்தரர் அவரைக்கண்டு, விரும்பி, சிவபெருமானுடைய திருவருளினாலே திருமணம் நிகழ்ந்தது. இங்ஙனம் வாழும்போது, திருவாரூர் தியாகேசர் வசந்தோற்சவம் சமீபிக்க, ஆன்மீகநாதரை நினைந்து, “பத்திமையும் அடிமையும்” என்று தொடங்கிப் பாடி, சங்கிலியாருக்கு மகிழமரத்தின்கீழ், இறைவர் முன்னிலையில், “உன்னை நான் பிரியேன்” என்று கொடுத்த சபதத்தை மீறி, திருவொற்றியூரை விட்டு நீங்கினார். நீங்கவே அவர் தமது இரண்டு கண்களின் பார்வையை இழந்தனர். அங்கிருந்து பிறர் வழிகாட்ட, திருவெண்பாக்கத்தை அடைந்து, “அழுக்கு மெய்கொடு” என்றெடுத்து, “சங்கிலிக்காக என் கண்ணை மறைத்தீர்” என்று பாட, இறைவர் ஊன்றுகோல் ஒன்றை அருளி, “உளோம் போகீர்” என்றருளிச் செய்தார். அங்கிருந்து காஞ்சிபுரம் “ஆலந்தானுகந்தமுது” என்றெடுத்துப் பதிகம் பாட, இறைவர் இடக்கண் மாத்திரம் கொடுத்துத் தம் திருக்கோலத்தையும் காட்டி அருளினார். அங்கிருந்து திருவாவடுதுறை முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருத்துருத்தி அடைந்து, தம்முடைய உடல் நோயைத் தீர்த்தருள வேண்டினார். திருவருட் குறிப்பின் வழி, அவர் கோயிற் குளத்தில் நீராடி நீங்கப்பெற்றார். அப்போது அவர், “மின்னுமாகங்கள்” என்ற பதிகம் பாடி, அங்கிருந்து புறப்பட்டு, திருவாரூர் சென்றடைந்தார். அங்கே இறைவரை வணங்கி, “அடியேனுக்கு வலக்கண்ணையும் தந்தருளும்” என்று வேண்டி, “மீளா வடிமை” என்ற பதிகம் பாடி, வலக்கண்ணையும் பெற்றார்.

சுந்தரர் திருவொற்றியூரிலே சங்கிலியாரை மணந்திருந்த செய்தி அறிந்த பரவையார், துக்கமும், கோபமும் கொண்டிருந்தமையால், சுந்தரர் பரவையார் இல்லத்தினுள்ளே செல்லப்பெறாது புறத்தே நின்றார். பின் சுந்தரர் சிவபெருமானைப் பரவையார்பால் தூதனுப்பி, பரவையாரின் ஊடலைத் தீர்த்து, ஒன்றுபட்டு வாழ்ந்தனர். திருவாரூர் நகரின் பன்மணி வீதி, இறைவர் வன்தொண்டர்க்குத் தூது போய், திருவடிகள் தீண்டபெற்றமையின். “செந்தாமரையடி நாறியது” என்று சேக்கிழார் பாராட்டியுள்ளார்.

இறைவரைச் சுந்தரர் பரவையாரிடம் ஊடல் தீர்க்கத் தூது அனுப்பிய செய்தி கேட்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார் கோபங் கொண்டார். பின் சிவனருளால் கோபம் தீர்ந்து, ஒன்றாகி, இருவரும் திருப்புன்கூர் சென்று, “அந்தணாளன்” என்னும் திருப்பதிகம் பாடி, இருவரும் சுவாமி தரிசனம் செய்து, திருவாரூர் மீண்டனர். சிலநாள் கழிய, ஆரூரர் திருநாகைக் காரோணம் சென்று, பதிகம் பாடித் திருவாரூர் மீண்டனர்.

மலைநாட்டு மன்னராகிய சேரமான் பெருமாள் நாயனார், நம்பியாரூரைப் பற்றியறிந்து, அவரைத் தரிசிக்க விழைந்து, அங்குச் சென்றபோது, அவரை எதிர்கொண்டு, அவரது நட்பைப்பெற்று, அவரை உபசரித்து மகிழ்ந்தார். அங்கு இருவரும் சிலநாள் தங்கியபின், பாண்டிநாட்டுத் தலங்களைத் தரிசிக்கப் புறப்பட்டு, திருஇராமேச்சரம் சென்று சுவாமி தரிசனம் பண்ணி, அங்கிருந்தே ஈழநாட்டுத் தலமாகிய திருக்கேதீச்சரத்தை நோக்கி, “நத்தார்படை” என்ற பதிகம் பாடியருளினார்.

அங்கிருந்து வன்தொண்டர், சேரர் பெருமானின் விருப்பத்துக்கு இணங்க, சேரநாடு சென்றார்கள். செல்லும் வழியில் திருவையாறு தரிசிக்க விரும்பினார்கள். அவர்கள் அங்கு செல்லும்போது காவிரியாறு பெருக்கெடுத்தது. ஓடங்கள் காவிரியைக் கடக்க முடியாதிருந்தன. சுந்தரர், “பரவும் பரசொன்று” என்னும் திருப்பதிகத்தைப் பாட, காவிரி பிரிந்து, அவர்களுக்கு வழிவிட, அவர்கள் திருவையாறு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அங்கிருந்து அவர்கள் மலை (சேர) நாட்டுக்குச் சென்றபோது, அந்நாட்டு மக்கள் அவர்களை அன்புடன் எதிர்கொண்டார்கள். அங்கு இருக்கையில், நம்பியாரூரர், “திருவாரூரானை மறக்கலுமாமோ” என்று பாடி, திருவாரூருக்குப் புறப்பட்டார். அப்போது சேரர்பிரான், தம்பிரான் தோழரை விட்டுப்பிரிய ஆற்றாது, பெரும் பொன்னும், பொருளும் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக்கொண்டு, திருமுருகன்பூண்டி வழியே செல்லும்போது, வேடவடிவான சிவபூதங்கள், சிவாஞ்ஞையினாலே கவர்ந்தன. நாயனார் திருக்கோயிலினுள் சென்று, “கொடு வெஞ்சிலை வடுக வேடுவர்” என்றெடுத்து, “எற்றுக் கிருந்தீர் எம்பிரானீரே” என்று முடிக்க, அவர் இழந்த பொன் பொருள்களைப் பெற்றார்.

சேரர்பெருமானை நினைந்து, அவரிடம் செல்லும்போது, திருப்புககொளியூரில் ஒரு வீட்டில் அழுகை ஒலியும், வேறொரு வீட்டில் மங்கள ஒலியும் கேட்டன. ஒரு வீட்டில் புதல்வனை முதலை விழுங்கிற்று என்றும், மற்ற வீட்டில் புதல்வனுக்கு உபநயனச் சடங்கு நிகழ்கின்றது என்றும் அறிந்த நாயனார் வருந்தி, முதலை தான் விழுங்கிய புதல்வனைத் தரும்பொருட்டு, “உரைப்பாருரை” என்றெடுத்து, “முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே” என்று முடிக்க, முதலை அப்புதல்வனை வெளியே உமிழ்ந்தது. பெற்றோர் மகிழ்ந்தனர்.

சுந்தரர் அங்கிருந்து மலைநாடு சென்றார். சிவதலங்களை வணங்கி, மகோதை சென்றார். அங்கே நாயனார் ஒருநாள் தனியே சிவாலயம் சென்று, “அடியேனை இப்பிரபஞ்ச வாழ்க்கையினின்றும்
நீக்கித் தேவரீருடைய திருவடியிலே சேர்த்தருள வேண்டும்” என்று, “தலைக்குத் தலைமாலை” என்ற பதிகம் பாட, சிவபெருமான் வெள்ளை யானை ஒன்றினை அனுப்பி வைத்தார். “தானெனை முன் படைதான்” என்ற திருப்பாடலைப் பாடிய சுந்தரர், திருக்கயிலாயம் சென்று, முன்போல், ஆலாலசுந்தர் ஆகி, அணுக்கத் தொண்டு செய்திருந்தார். அவரோடு குதிரையில் சென்ற சேரமன்னர் சிவாஞ்ஞையினாலே சிவகணநாதரானார்.

நாயனார் திருக்கயிலை செல்லும் வழியில் அருளிச்செய்த பதிகத்தைச் சமுத்திரராசனிடம் கொடுத்தருள, அவன் அதனைத் தலைமேல் தாங்கி, திருவஞ்சைக்களத்தில் சேர்ப்பித்தான்.

நாயனார் காலம் 9-ம் நூற்றாண்டு என்பர். மூவர் முதலிகளில் மூன்றாமவர். அவர் அருளிச்செய்தவை திருப்பாட்டு எனப்படும். அது பன்னிரு திருமுறைகளுள் எழாவதாகும்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : ஆதிசைவர்
நாடு : திருமுனைப்பாடிநாடு
ஊர் : திருநாவலூர்
குருபூசை / திருநாள் : ஆடி - சுவாதி

ஒரே பார்வையில் ...
சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் பிள்ளையாகப் பிறந்து, நரசிங்கமுனையரால் வளர்க்கப்பட்டவர். திருவாரூரில் புற்றிடம் கொண்டார் அடியெடுத்துக் கொடுக்கத் திருத்தொண்டத் தொகை பாடியவர். ஊடல் கொண்டிருந்த பரவையாரிடம், அவர் கொண்டிருந்த ஊடலைத் தீர்க்க, சிவனைத் தூது அனுப்பினார். திருவாள்கொளிப்புத்தூரில் (அவினாசி) முதலை உண்ட பிராமணப் பாலகனை மீட்பித்தது முதலிய அற்புதங்களைச் செய்தவர்.