7. எறிபத்த நாயனார்


சிவனடியார் செய்யும் சிவத்தொண்டினுக்கு இழுக்கானவை நிகழ்ந்த போது, அவற்றைத் தீர்த்து, சிவத்தொண்டினைத் தொடர்ந்து செய்ய உதவுதல் பெரும் புண்ணியமாகும். பத்தியோடு விதிப்படி பூக்கொய்து, பூமாலை கட்டி, சிவனுக்கு சாத்துதல் அரிய சரியைத் தொண்டு. இதில் தலைசிறந்து விளங்கி நின்றவர் சிவகாமியாண்டார் என்னும் சிவபத்தர். பட்டவர்த்தனம் என்னும் அரசு யானை, அவ்வடியார் தொண்டுக்கு அடாதன செய்தபோது, எறிபத்தர் அதனைக் கொன்று ஒழித்தார். இதனை அறிந்த புகழ்ச்சோழர் என்ற அரசர், அவ்விடத்துக்கு விரைவாக வந்து, எறிபத்தரை நோக்கி, “யானைக்கு இத்தீர்வு போதாது. யானையின் உரிமையாளன் ஆகிய என்னையும் கொல்ல வேண்டும்” என்று சொன்னார். அப்போது எறிபத்தரும், அரசரும், சிவகாமியாண்டாரின் பூக்கூடையில் மலர்கள் நிறைந்து இருத்தலைக் கண்டனர். எறிபத்த நாயனார் தன் சிவப்பணியைத் தொடர்ந்தார். வளவர்கோன் கோயில் புக்கார். சிவகாமியாண்டார் தம்பணி மேற்கொண்டு தொடர்ந்தார். எறிபத்த நாயனார் பலகாலம் இத்தன்மை தொண்டுகள் பல செய்து, கயிலையை அடைந்து, கணநாயகருள் ஒருவராய் விளங்கினார்.

                  *                                                              *                                                              *

கொங்கு நாட்டிலே, சோழப் பேரரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து நகரங்களிலே ஒன்றாகிய கரூர் என்று ஒரு நகர் உண்டு. அங்கே உள்ள பெரிய சிவாலயம் ஆனிலை எனப்படும். அக்கோயிலில் எழுந்தருள்ளி உள்ள பசுபதியீசுரரை நியமமாக வழிபட்டு வந்தவர் எறிபத்தர் என்னும் சிவனடியார். அவர் சிவனடிக்கு அன்பு பூண்டு, சிவனடியாருக்கு நேரும் இடையூறுகளை, அவ்வப்போது சிங்கம் போல சினந்து, எழுந்து நீக்குபவர். இத்திருநகரிலே சிவபெருமானுக்கு விதிப்படி பூக்கொய்து, மாலை கட்டி, சாத்தும் வழக்கம் உடைய சிவகாமியாண்டார் என்னும் மறைமுனிவர் இருந்தார். அவர் ஒருநாள் வழக்கம்போல முறைப்படி கொய்த பூக்கள் நிறைந்த கூடையை, தண்டில் தாங்கிக்கொண்டு திருஆனிலைக்கு விரைந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது புகழ்ச்சோழ நாயனாரின் பட்டவர்த்தனம் என்னும் யானை, அட்டமி நாள் ஆதலின், நதியிலே நீராடி விட்டு, மிக்க களிப்போடு, மாதம் பொழிய, பாகர், பரிக்கோற்காரர் சூழ வந்து கொண்டிருந்தது. இவ்வாறு வந்து கொண்டிருந்த யானை, சிவகாமியாண்டார் கையில் இருந்த திருப்பூங்கூடையைப் பறித்து, மலர்களை சிந்தியது. மனம் வருந்திய சிவகாமியாண்டார், “சிவதா! சிவதா!!” எனக் கூவி அழுதார். இவ் அழுகுரல் அவ்வழியே வந்து கொண்டிருந்த எறிபத்தர் காதில் விழுந்தது. உடனே அவர் விரைந்து, தம் கையில் இருந்த மழுவை யானைமீது வீசி, அதனையும், அதன் பாகரையும், குத்துக்காரரையும் கொன்றார். இந்நிகழ்சியை அறிந்து புகழ்ச்சோழ நாயனார் கோபம் கொண்டார் ஆயினும், யானையையும், உடன் வந்தோரையும் கொன்றவர் சிவனடியார் என்றும், அவர் அரனடியார் பிழைபட்டால் அன்றி, கொல்லார் என்றும் உணர்ந்து, எறிபத்தரை அணுகி, வணங்கினார். “தீர்வு போதுமா?” என்று வினவினார். அப்போது எறிபத்தர் நிகழ்ந்தவற்றைக் கூற, “தீர்வு போதாது. என்னையும் கொல்லுங்கள்” என்று தன் உடைவாளை எறிபத்தரிடம் நீட்ட, அவர் பயந்து, “ஆ, கேட்டேன். அளவற்ற சிவபத்திக்கு அளவில்லாமை கண்டு கொண்டேன்” என்று சொல்லி, வாளினை வாங்க மாட்டாது நின்றார். எனினும் அரசர் வாளினைப் பற்றி தம் உயிரை மாய்க்க முயன்றார். அப்போது வாளினையும், கையினையும் பற்றி, “தொண்டின் நிலைமை உணர்ந்தயே யானை மலர்களை சிந்தியது திருவருளே” என்ற திருவாக்கு கேட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் வீழ்ந்து வணங்கினர். யானையையும், பாகரும், குத்துக்கோற்காரரும் உயிர் பெற்று எழுந்தனர். பூக்கூடையும் முன்போல் நிரம்பியது. சிவகாமியாண்டாரும் தம்பிரான் பணிமேல் சென்றார். எறிபத்த நாயனார் இங்ஙனம் சிலகாலம் சிவத்தொண்டு செய்து, திருக்கயிலையில் கணநாதர் ஆயினார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் :
நாடு : சோழநாடு
ஊர் : கருவூர்
குருபூசை / திருநாள் : மாசி – அத்தம்

ஒரே பார்வையில் ...
சிவகாமியாண்டார் என்ற சிவனடியார் கருவூர் ஆனிலை அப்பர்க்குத் தினமும் திருப்பள்ளித் தாமமும், திருமாலைகளும் சாத்தும் வழக்கம் உடையவர். ஒருநாள் அரசினரின் பட்டவர்த்தன யானை அவருடைய பூக்கூடையைப் பற்றி இழுத்து, பூக்களைச் சிந்தியது. அப்போது சிவகாமியாண்டார் “சிவதா, சிவதா” என ஓலமிட, அது கேட்டு ஓடோடி வந்து, யானையை கொன்று பேறு பெற்றவர்.