8. ஏனாதிநாத நாயனார்


முன்னாளில் அரசர்க்கு வாள் முதலிய படைக்கலப் பயிற்சித் தொழில் உரிமைவழி தாயத்தார்க்கு உரியது. அழுக்காற்றிற்பட்டு அதனை மறுத்து, வலியாரே தாய உரிமை உடையார் என்று கொள்வது நீதிக்குப் புறம்பானது. இவ் அடாத செயலை எதிர்த்து போர் செய்தல் வீரர் இலக்கணம். தாய உரிமை கொண்ட ஏனாதிநாதர் வெற்றியீட்ட, அவரை எதிர்த்த அதிசூரன் புறங்காட்டினான். இவன் ஏனாதிநாதரின் திருநீற்று வழிபாட்டின் திறங்காட்டி, திருநீறணிந்து, வஞ்சகமாய் ஏனாதிநாதரை எதிர்த்து, தோற்று, வரிவாய் நரகத்தை அடைந்தான். சிவசாதனைச் சார்வு பற்றி இடையறாது எது வரினும், அதனில் பிறழாது ஒழுகினால், அது சிவனிடத்து அடையும். ஏனாதிநாதர் அதிசூரனுக்கு மாறாக உடல், பொருள் முதலிய சார்புகளை விட்டு, திருநீற்று வழிபாட்டின் நலம் குன்றாது ஒழுகியதனால் பொன்னம்பலம் சேர்ந்தார். திருநீறு, அரசனைப் போலவே, தொன்மையும், நிரந்தரமும் உடையதாம். திருநீற்றின் வழிபாடு பாசநீக்கமும், சிவப்பெறும் தருவதாம். இங்ஙனம் திருநீற்று வழிபாட்டினால் சிவப்பேறு எய்தியவர் ஏனாதிநாத நாயனார்.

                  *                                                              *                                                              *

சோழ நாட்டிலே, எயினனூர் என்னும் தலத்திலே, ஈழக்குலச் சான்றார் மரபிலே, ஏனாதிநாதன் என்று ஒருவர் இருந்தார். அவர் திருநீற்று வழிபாட்டின் நலத்திலே சிறந்து விளங்கினார். அவர் அரசர்களுக்கு வாள்வித்தை முதலியன பயிற்றும் தொழில் செய்து வந்தார். தம் தொழிலால் கிடைத்த பொருளை, சிவனடியார்க்கு ஆக்கினார். அதே தொழிலை செய்து வந்த அதிசூரன் என்பவன், ஏனாதிநாதர் பால் பொறாமை கொண்டான். ஏனாதிநாதருக்கு வருவாய் அதிகரிக்கவும், அதிசூரனுக்கு வருவாய் குறையவும் தொடங்கிற்று. இதனால் அதிசூரன் மேலும் அழுக்காறு கொண்டு, தன் பக்கம் பலரைச் சேர்த்து, ஏனாதிநாதரை போருக்கு அழைத்தான். அதிசூரன் ஏனாதிநாதரைப் பார்த்து, “நம் இரு படைகளும் போரிட்டு, யார் வெல்லுகிறாரோ, அவரே வாள் பயிற்றும் தொழிலில் தாய உரிமையைக் கொள்ள உரிமை உடையவர்” என்றான். ஏனாதிநாதர் இதற்கு இணங்க, இரு படைகளும் கடும் போர் புரிந்தன. பல படைவீரர் அழிந்து போக, ஏனாதிநாதரும் அதிசூரனும் தாமே போர் புரிந்தனர். அதிசூரன் ஏனாதிநாதருக்குத் தோற்று, களத்தை விட்டு ஓடினான். ஓடினவன் ஏனாதிநாதரை வஞ்சனையால் கொல்ல நினைத்தான். திருநீறு அணிந்து செல்லின், இவர் எவ்வித தீங்கும் செய்யார் என்று, அதனை நெற்றியில் நிறையப் பூசி, வாளும், பலகையும் ஏந்தி, இவரை போருக்கு அழைத்தான். இவர் போருக்கு செல்லும்போது, அதிசூரன் தன் திருநீறணிந்த நெற்றியை மறைத்து, அவர் தன்னை அணுகியவுடன் பலகையை நீக்கினான். அப்போது கடையவனாகிய அவனுடைய நெற்றியிலே பூசியிருந்த திருநீற்றைக் கண்ட ஏனாதிநாதர், அவன் குறிப்பின் வழி செல்ல போர் செய்வார் போலக் காட்டி நேர் நின்றார். அப்போது அந்தப் பாதகன் தன் கருத்தை நிறைவேற்றினான். அந்நிலையில் சிவபெருமான் வெளிப்பட்டு ஏனாதிநாதரை தம் பக்கம் சேர்த்து, என்றும் பிரியாது உடன் இருக்கும் பேரின்ப நிலையினை அருளினார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : சான்றார்
நாடு : சோழநாடு
ஊர் : எயினனூர்
குருபூசை / திருநாள் : புரட்டாதி – உத்தரம்

ஒரே பார்வையில் ...
சிவனடியார். இவரைப் போரில் வெல்லமுடியாத பகைவர், இவரை வஞ்சகமாக கொல்ல நினைக்கிறார்கள். நெற்றியில் வீபூதி தரித்துக்கொண்டு, இவரைப் போருக்கு அழைக்க, இவர் அவர்களது நெற்றியில் உள்ள வீபூதியைக் கண்டு வாளாவிருத்து, அவர்களால் கொல்லப்படுகிறார்.