9. கண்ணப்ப நாயனார்


மலைவாழ் வேடரும், வன்றெழில் மறவரும் கொல், எறி, குத்து என்ற சொற்களை, தம் நாளாந்த சொற்களை அச்சமும், அருளுமடைவில்லாதவராய் விளங்குவர். வில்வித்தை முதலிய கலைகளின் பயிற்சி நன்னாளிலே தொடங்கி, விழாக் கொண்டாடி, நல்லாசிரியனிடம் தொடரத் தக்கது. கொடிய காட்டு விலங்குகள் நாட்டினுள் புகுந்து, உயிருக்கும், பயிருக்கும் ஊறு செய்யாத வண்ணம், திங்கள் தோறும் அல்லது, காலம் தோறும் முறை வேட்டை செய்து, அவற்றின் கொடுமையைக் குறைப்பது மலை அரசர், மலவாழ் மக்கள் மரபு ஆகும். கன்னி வேட்டை தொடங்குமுன், வனதெய்வங்கள் மகிழ, காடுபலி ஊட்டுதல் வழக்கம். மலைவாணர் இடையே, அரசுரிமை, தந்தைக்குப் பின் தனயனுக்கு வருதல் வழக்கம். தந்தை உயிருடன் இருக்கும்போதே தனயனுக்கு அரசுரிமை வழங்கலும் உண்டு. புலித்தோல் இருக்கையில், தந்தை தனையனை இருத்தி, சடங்குகள் அனைத்தும் செய்தபின், “இனி நமது அரசுரிமையை நீயே தாங்கு” எனக் கூறி, வாழ்த்தி, உடை, தோல், சுருகை முதலிய அரச ஆணை, அடையாளங்களை, முறைப்படி வழங்கினான். கொலைத்தொழிலையே செய்து மகிழும் மலை வேடர்கள், தங்கள் வேட்டைகளில் கைக்கொள்ளும் அறங்கள் பல உண்டு. விலங்குகள் கொடியான ஆயினும், அவற்றின் பின்னால் ஒளிந்து கொல்லர். வீரராயினார் யானை, சிங்க, புலி, கரடி முதலியவற்றையே வேட்டையாடுவர். இவ்விலங்கினங்களையும், அவற்றின் இளமைகளையும், கருவுற்ற பெண் இனங்களையும், ஓடி நின்ற பகை விலங்குகளையும் கொல்லார். இங்ஙனம் கொடிய மலைவாழ் மக்களுக்கு தந்தை அன்போடு வழங்கிய அரசுரிமையைப் பெற்று, இனிது காத்துவந்த திண்ணனார், காளத்தீசுவரரின் வலத்திலே கொண்ட பேர் அன்பினால், வலத்திலே என்றும் நிற்கும் பேறு பெற்றவர் திண்ணனார் என்னும் கண்ணப்ப நாயனார்.

                  *                                                              *                                                              *

இன்றைய இந்திய ஆந்திரப்பிரதேசத்திலே, பொத்தப்பு நாட்டிலே, உடுப்பூர் என்னும் மலைப் பிரதேசங்களிலே வனவேடர்கள் வாழ்வார்கள். இவ்வேடர்களுக்கு தலைவனாய் விளங்கியவன் நாகன் என்பான். அவன் பிறப்பின் சார்பினாலே குற்றங்களை குணம் எனக் கொண்டு வாழ்பவன். கொடிய இயல்பு உடையவன். வில் தொழிலில் மகாவீரன். அவனுடைய மனைவி தத்தை என்பாள் புலிப் பற்றாலி அணிந்து அச்சம்தரும் பெண்சிங்கம் போன்றாள். நீண்டகாலமாக மகப்பேறு இல்லாமல், கவலை கொண்டு, முருகப்பெருமானுக்கு பராவுக்கடன் செய்தும், குரவைக் கூத்தாடியும், அணங்காடல் புரிந்தல் முதலியன நிகழ்த்தியும் வேண்டிக்கொள்ள, வேடர்கள் மகிழ, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, தத்தை ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தனள். நாகன் பிள்ளையில் அன்பு மீதூர, தன் அரும் பெறற் புதல்வனை கையில் ஏந்த, அது திண்மையாய் இருந்தபடியால் “திண்ணன்” என அழைத்தான். வேடர் குலத்துக்கு அமைய திண்ணன் வளர்ந்து, வாலிபப் பருவம் அடைந்த நிலையில், நாகன் மூப்படைந்து வேட்டையில் மெலிவுற்றான். அவ்வேலையின் ஒருநாள் வேடர்கள் நாகனிடம் சென்று, காட்டுப்பன்றி, கடமா, புலி முதலிய வனவிலங்கினம், பயிர்களுக்கும், உயிர்களுக்கும் கேடு தருதலைக் கூறி, முறையிட, நாகன் அவர்களிடம் தன்னால் ஆகாத நிலையை விளக்கி, தன் மகன் திண்ணனை தலைவனாக ஏற்கும்படி சொல்ல, அவர்களும் அதற்கு இணங்கினர்.

நாகன் உடனே தேவராட்டியை வரவழைத்து, “என் மகன் திண்ணன் வனதெய்வங்கள் மகிழும்படி காடுபலி ஊட்டுக” என்றான். அவள் அங்ஙனம் வேண்டுவன செய்தபின், திண்ணனாரின் தந்தையிடம் சென்று வணங்க, நாகன் தன் புதல்வனை புலித்தோல் ஆசனத்தில் இருத்தி, தன் மன நிலை, உடல் நிலையைக் கூறி, “இன்று உன் மரபு உரிமையாகிய மலை ஆட்சியை ஏற்றுக்கொள்” என்று ஆசியும் கூறி, திண்ணன் கன்னி வேட்டைமேல் செல்ல நாகன் விடை கொடுத்தான். அடுத்த நாள் விடியும்போது, திண்ணன் உரிய சடங்குகள் எல்லாம் முடித்து, ஏற்ற வேடம் தரித்து நிற்க, தேவராட்டி வந்து, அவரது நெற்றியில் சேடை சாத்தி, வாழ்த்தினள். திண்ணன், வேடர் கூட்டம், வேட்டை நாய்கள், பார்வை மிருகங்கள், வலைகள், கொலைக் கருவிகள், முதலியவற்றோடு, வேட்டைக்கு உரிய வாத்தியங்களை ஒலித்துக்கொண்டு காட்டை நோக்கி சென்றனர். இவ்வாறு கொடிய வேட்டை நிகழும்போது ஒரு காட்டுப்பன்றி வலையில் அகப்பட்டு, வலையை அறுத்துக்கொண்டு, காளத்தி மலைச்சாரலை நோக்கி ஓடிற்று. வேடர் அதனைக் கண்டிலர் ஆயினும், சிங்கம் போன்ற திண்ணனார் அதனைக் கண்டு, பின்தொடர்ந்து ஓட, அவருடைய மெய்க்காவலர்கள் ஆகிய நாணனும், காடனும் அவரைத் தொடர்ந்து பின்னால் ஓடினர். திண்ணனார் தூரத்தே நின்று அம்பினை எய்யாமல், அணுக்குப் போய், உடைவாளால் அதனைக் குத்திக் கொன்றார். கன்னிவேட்டையில் பெற்ற பெருவெற்றியை வேடர் அனைவரும் கண்டு மெய்ச்சி, வாழ்த்தினர். அப்போது திண்ணனார் “நல்ல தண்ணீர் எங்கே கிடைக்கும்” என, “அதோ எதிரே இருக்கும் தேக்கு மரச்சோலையைக் கடந்தால், தோன்றும் மலையின் அருகே குளிர்ந்த பொன்முகலி ஆறு ஓடுகிறது” என்றார்கள். “அங்கு போம்” என்று மூவரும் செல்லும்பொழுது, காளத்தி மலையைக் கண்டார்கள். “நாணனே! இக்குன்றுக்கு போவோம்” என்று திண்ணனார் கூற, நாணன் உடன்பட்டு, “அங்கு சென்றால் நல்ல காச்சிகள் காணலாம். குடுமித்தேவரும் இருக்கிறார். அவரையும் கும்பிடலாம்” என்றான். திண்ணனார் கொன்ற பன்றியை உண்ணத் தக்கதாகப் பதப்படுத்த, காடனைக் கீழே விடுத்து, இருவரும் பொன்முகலியைக் கடந்து மலைமீது ஏறினர். ஏறும்போது திண்ணனார் நாணைப் பார்த்து, “நாணனே! இம்மலையை சேரும்தோறும் என்மேல் உள்ள ஒரு பாரம் குறைந்து, குறைந்தது போல் ஒரு உணர்ச்சி தோன்றுகிறதே” என்று சொன்னார். அங்கு செல்லும்போதே காளத்திநாதரின் அன்பே உருவானார். அவர் இறைவனைக் கண்டு மகிழ்ந்து, அடிதழுவி, உச்சி மோந்து, “இக்கொடிய காட்டில், தனியே இருந்தீரே” என்று இரங்கினார். அங்கே நிரமாலியமாகக் கிடந்த பச்சிலை, பூ, நீர் முதலியவற்றைக் கண்டு, “இவற்றைச் செய்தார் யாரோ?” என்று வினவ, அருகே நின்ற நாணன், “இவற்றை ஒரு பார்ப்பான் செய்தனன்” என்றான். இறைவருக்கு உணவு வேண்டுமே என்று, நல்ல இறைச்சி கொண்டுவர, தேவரைப் பிரிய மனம் இல்லாது, வீட்டுக்கு சென்றார். திண்ணனாரின் வரவைக் கண்ட காடன், “பன்றியின் உறுப்புக்களை எல்லாம் சரிபார்த்து எடுங்கள். நீங்கள் வர ஏன் இவ்வளவு நேரம் எடுத்தீர்கள்?” என்று கேட்க, “இவன் தேவனைப் பற்றிக்கொண்டான்” என்றான் நாணன். “திண்ணா என்ன செய்தாய்?” என்று கேட்க, திண்ணன் இறைச்சியின் சுவை உள்ள பகுதிகளை, கல்லையில் இட்டுக்கொண்டு தேவரிடம் போயினார். நாணனும், காடனும் “இவன் மயக்கன் கொண்டான். தந்தையிடமும், தேவராட்டியிடமும் சொல்வோம்” என்று இருவரும் போயினர். இவர்கள் செய்ததை அறியாத திண்ணனார், இறைவரது திருமஞ்சனத்துக்கு வாயில் நீரையும், தலையில் பூசைக்கு உரிய பூக்களையும் கொண்டு, மலைமேல் ஏறி, தேவருக்கு பூசை செய்தார். அன்று இரவு விழித்திருந்து அவருக்கு காவல் புரிந்தார்.

பொழுது விடிந்ததும், அவருக்கு அமுது கொண்டுவர, திண்ணனார் வேட்டைக்கு கானகம் சென்றார். அப்போது காளத்திநாதரை ஆகம முறைப்படி எப்போதும் வழிபாடு ஆற்றும் சிவகோசரி முனிவர் என்பவர், வழக்கம்போல அவ்விடம் சென்றார். அங்கு கிடந்த இறைச்சி, எலும்பு முதலியவற்றைக் கண்டு, மனக்கலக்கம் கொண்டார். திருவலகால் அவ்விடத்தை சுத்தம் செய்து, ஆகம முறைப்படி பவித்திரம் செய்து, பூசனை ஆற்றி, தம் தபோவனத்துக்குப் போயினர். அடுத்த நாள், தேன் கலந்த இறைச்சியினையும், திருப்பள்ளித் தாமத்தையும், திருமஞ்சனத்துக்கு நீரையும் முன்போலக் கொணர்ந்து வழிபாடு ஆற்றினார். இங்ஙனம் இரவில் உறங்காராய் காவல் பூண்டும், பகலில் வேட்டை ஆடியும் வருவார் ஆயினார். பெருமுனிவரும் தினந்தோறும் வந்து, இடத்தை தூய்மை செய்து, ஆகம விதிப்படி, தன் கடமைகளை செய்து வருவார் ஆயினார்.

இப்பால் நாணனும், காடனும் நடந்தவற்றை நாகனிடம் கூற, அவன் தேவராட்டியையும் கூட்டிக்கொண்டு, மகனார்பால் வந்து, நிகழ்ந்தவற்றை அறிந்து, அவர் தம் குறியில் வாராமை கண்டு, அவ்விடம் விட்டு அகன்றனர்.

ஐந்தாம் நாள் திண்ணனார் தாம் செய்தவாறு பூசித்தார். சிவகோசரியாரும் சிவாகம முறைப்படி பூசனை செய்து, “இத் தீமையை உன் திருமுன்னிலையில் இருந்து ஒழித்தருள வேண்டும்” என்று மிகவும் வேண்டினார். அன்றிரவு இறைவர் முனிவர் கனவிலே தோன்றி, “அவன் வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பேயாம். அவனது செயல் எல்லாம் நமக்கு இனியவையே. நாளைக்கு நீ என் பக்கல் ஒளிந்திருந்து பார். அவன் பரிவு நம்மிடத்து இருப்பதை காண்பாய்” என்றார்.

அடுத்தநாள் அதிகாலை சிவகோசரியார் முறைப்படி வழிபாடு ஆற்றி, ஒளித்திருந்தனர். திண்ணனாரும் பின் தமது முறைப்படி பூசை செய்ய அங்கு வந்தார். அப்போ இறைவரின் திருக்கண்கள் மூன்றினைக் காட்டி, அவற்றின் ஒன்றில் இருந்து உதிரம் பாய்வதைக் காட்டியிருந்தார். இதனைக் கண்ட திண்ணனார், துடிதுடித்து, வீழ்ந்து, எழும்பி, உத்திரத்தை துடித்தார். அப்போதும் உதிர ஓட்டம் நிற்கவில்லை. பின் ‘ஊனுக்கு ஊனே மருந்து’ என்று முடிவு செய்து, தம் கண்ணை அம்பினால் தோண்டி, இறைவர் கண்ணில் அப்பினார். உதிரம் பாய்வது நின்றதாயினும், இறைவரது இடக் கண்ணின் நின்றும் இரத்தம் பாய்வதைக் கண்டார். ஆனால் அவர் அஞ்சவில்லை. திண்ணனார் மற்றைக் கண்ணை தோண்டி, அதனை இறைவர் கண்ணில் அப்ப, குறிகாணும் பொருட்டு, தம் காலை, இறைவர் கண்ணில் வைத்துக்கொண்டு, தமது இடது கண்ணினை ஊன்றினார். அச் செயல்களைக் காண சகிக்காத இறைவர், தம் கைகளினால் திண்ணனாரின் கைகளை தடுத்து நிறுத்திக்கொண்டு, “நில்லு கண்ணப்ப” என்று மும்முறை கூவித் தடுத்தார். இதனை சிவகோசரியார் கண்களிப்பக் கண்டார். இறைவர் கண்ணப்ப நாயனாரை, “மாறிலாய்! என் வலத்தில் என்றும் நிற்க” என்று பேரருள் புரிந்தார். இவர் தேவார ஆசிரியர்களாலும், மாணிக்கவாசக சுவாமிகளாலும், பட்டினத்தடிகள் போன்றவர்களாலும் சிறப்பிக்கப் பெற்றவர். இன்றும் திருக்காளத்தியிலே, காளத்தீசுவரர் கோயிலிலே மூலவருக்கு வலப்பக்கத்திலே, தலையில் அரசமுடியும், கைகளில் வில்லும், அம்பும் தாங்கியபடி எழுந்தருளி இருப்பதைக் கண்டும், தரிசித்தும் மகிழலாம்.

பயண வசதிகள் உண்டு. சென்னையில் இருந்து நேராகப் பேருந்து உண்டு. புட்டபத்தி விழியாகவும் உண்டு. இன்னும் பல ரயில், பேருந்து வசதிகள் உண்டு.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேடர்
நாடு : தொண்டைநாடு (இப்போ ஆந்திரப்பிரதேசம்)
ஊர் : உடுப்பூர்
குருபூசை / திருநாள் : தை – மிருகசீரிடம்

திருக்கண்ணப்ப தேவர் என்றே பதினோராம் திருமுறையில் உள்ள திருமறங்கள் இரண்டிலும் வழங்கப் பட்டுள்ளது. இவருடைய அன்பின் பெருமையை, சம்பந்தர், மணிவாசகர், நக்கீரர் முதலியோர் பாராட்டியுள்ள படியால், இவர் காலம் மிகப் பழையது என்பது உறுதியாகிறது. மேலும், ஆதிசங்கராச்சாரியார் தம் சிவானந்தலகரியில் கண்ணப்பரைப் பாராட்டி இருப்பதாலும், ஆசாரியாரின் காலம் கி.பி. 41 ஆக பலர் கருதுவதாலும், நாயனார் காலம் அதற்கு பல ஆண்டுகள் முன் இருந்திருத்தல் வேண்டும். கோயம்புத்தூர் தலையூர் என்னும் ஆலயத்தில், கண்ணப்பர் திருவுருவமும், அருச்சுனனின் திருவுருவமும், பழங்காலம் தொட்டே ஒருசேர வைத்துப் பூசிக்கப் படுகின்றன. அருச்சுனன் கண்ணப்பராக அவதரித்து முத்தி அடைந்தனர் என்பது மக்கள் இடையே வழங்கப்படும் பழம் செய்தி.

ஒரே பார்வையில் ...
கன்னி வேட்டைக்குச் சென்றபோது, திகாடன் காளத்தி மலை உச்சியில் உள்ள குடுமித்தேவரைக் காட்டக் கண்டு, அவர்பால் பத்தி கொண்டவர். ஆறு நாள்களில் அவர் கண்ணின் நின்றும் உதிரம் பாயக் கண்டு, பதை பதைத்து, தம் கண்ணைத் தோண்டி, அவர் கண்ணில் அப்பி, முத்தி அடைந்தவர். சிவபெருமானால் தம் அருகே நிற்கப் பணிக்கப்பட்ட பெருமையும், பேறும் பெற்றவர். சிவன் அருகே அம்பு-வில்லோடு காட்சியளிக்கிறார்.


திருவாசகம்
கண்ணப்ப னெப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைக்
கண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி.


பட்டினத்தார் பாடல்
வாளான் மகவு அரிந்து ஊட்டிட வல்லே னல்லன்; மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேனல்லன்; தொண்டு செய்து
நாளாறில் கண்இடந்து அப்பவல் லேனல்லன்; நான் இனிச்சென்று
ஆளாவது எப்படி யோதிருக் காளத்தி அப்பனுக்கே.
(நாளாறில் – ஆறு நாள்களில்; இடந்து – தோண்டி)