கடவுள் வாழ்த்து

திருச்சிற்றம்பலம்

சித்தி விநாயகர்
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி உறிதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினை பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை யென்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம். (திருவிளையாடற் புராணம்)


சிவபெருமான்
நாரணன் என்னும் தேவும் நான் முகத்தவனும் முக்கண்
பூரணன் தானும் ஆகிப் புவி படைத் தளித்து மாற்றி
ஆரண முடிவும் தேறா அநாதியாய் உயிர்கட் கெல்லாம்
காரணன் ஆய மேலோன் கழலிணை கருத்துள் வைப்பாம். (திருவிளையாடற் புராணம்)

உமாதேவியார்
செறிதரு முயிர்தொறும் திகழ்ந்து மன்னிய
மறுவறு மரனிட மரபின் மேவியே
அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய
இறைவிதன் மலரடி யிறைஞ்சி யேத்துவாம். (திருவிளையாடற் புராணம்)

நடேசர்
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்;
அலகில் சோதியன்; அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். (பெரியபுராணம்)

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம். (பெரியபுராணம்)

வையகமின் புறநின்ற மருமலிபொற் பதம்போற்றி
கையமரு நிலைபோற்றி கருணைமுக மலர்போற்றி
மெய்யிலகு மொளிபோற்றி விரவிஎனை யெடுத்தாண்ட
செய்யதிரு வடிபோற்றி திருச்சிற்றம் பலம்போற்றி. (கோயிற்புராணம்)

சிவகாமியம்மை
மன்றின்மணி விளக்கெனலா மருவுமுகங் கைபோற்றி
ஒன்றியமங் கலநாணி னொளிபோற்றி யுலகும்பர்
சென்றுதொழ வருள்சுரக்குஞ் சிவகாம சுந்தரிதன்
நின்றதிரு நிலைபோற்றி நிலவுதிரு வடிபோற்றி. (கோயிற்புராணம்)


திருச்சிற்றம்பலம்